ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கேலி -- கிண்டல்

 கேலி என்ற சொல்லைப்  புரிந்துகொள்ளுமுன்,   முதனிலை திரிந்த தொழிற் பெயர் என்ற பெயர்சொற்களைத் தெரிந்துகொள்வோம்.

இதற்கு நாம் "பாடு" என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்.: "ஏழை படும் பாடு" என்ற சொற்றொடரைப் பார்த்து, இச்சொல் அமைந்த விதத்தை அறிந்துகொள்ளலாம்.  படுவதுதான் பாடு.  ஆனால் பாடுதல் என்ற வினையில் உள்ளுறையும்  "பாடு" வேறு. இந்தப்  நாம் எடுத்துக்கொண்ட "பாடு"  பெரும்பாலும் பாட்டைக் குறிக்கும் பெயராக வருதல் காண்பதரிது.   ஒரு பாடு பாடினான் என்று பெரும்பாலும் பேச்சில்கூட வருவதில்லை.  ஆனால் சுடு> சூடு என்பவற்றில்,   ஒரு சூடு சுட்டான் என்று வருவதுண்டு.  இலக்கணியர்  "முதனிலை"  என்றனர் எனின், அது முதலெழுத்து என்று பொருள்படும்.    சூடு என்ற சொல்லில்,"  சூ " என்பது  சு என்ற முன் எழுத்து  நீண்டு திரிந்ததனால்  ஆனது.   அதாவது.   சுடு > சூடு ஆனது. திரிபு என்பது எழுத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பதாகும்.

இப்போது கேலி என்ற சொல்லுக்கு வருவோம்.  கெல்லுதல் என்பது ஒரு தமிழ் வினைச்சொல்.   இதற்குப்  பொருள்  அல்லது அர்த்தம்:1. கிண்டுதல்  2.  தோண்டுதல்  3.கல்லுதல் என்பன.  இதை வைத்துக்கொண்டு, பழைய தமிழ் நூல்களை நீங்கள் வாசிக்கும் போது  எந்தெந்த இடங்களில் இந்தக் கெல்லுதற் சொல் வந்துள்ளது என்று குறித்துக்கொண்டு,  செய்யுளில்வந்த இடங்களை  மேற்கோளாகக் காட்டலாம்.  இப்படிக் காட்டினால் உங்கள் எழுத்தை வாசிப்பவர்,  இவ்வளவையும் அறிந்து வைத்துள்ளீர் என்று பாராட்டுவர். நான் பெரும்பாலும் இதை மேற்கொள்வதில்லை.  எழுதுவதைப்  பகர்ப்புச் செய்து (காப்பி)  வெளியிடுவோர் அதிகம் உலவுவதால்.  வேண்டிய வேண்டியாங்கு நீங்கள் இதை மேற்கொள்ளுங்கள். இதைவிடக் கெல்லுதல் என்ற சொல்லின் பொருளை நீங்கள் அறிந்து இன்புறுதல் தமிழினிமையை உணர வழிகோலும் என்பதே விரும்பத் தக்கதாம்.

கெல்லுதல் அல்லது கெல்லு என்ற வினையில்,   இறுதி உகரம்  (லு < ல் + உ)   ஒரு சாரியை ஆகும்.  வினையாவது  கெல் என்பது.   பல் என்பதைப்   பல்லு என்றால் லு என்பது (வினையின்/ பெயரின்)  பகுதியன்று.  அது நாம் சொல்லை உச்சரிக்க உதவும் ஒரு சாரியைதான்.  அதை விடுக்க.   கெல் வினைப்பகுதி.   இது ஏவல் வினையும் ஆகும்.   இதில்  இ என்னும் விகுதி சேர்த்தால்,    கெல் + இ  = கேலி ஆகிறது.  கெ என்பது  கே என்று முதனிலை திரிந்தது.

கேலி என்ற சொல்லை  "gEli"  என்று  எடுத்தொலிப்பதும் தவறு.  அந்தத் தவற்றைச்  செய்துகொண்டு,  அது தமிழ்ச்சொல் அன்று என்று சொல்லுவது ஒரு   தமிழறியாமையே ஆகும்.

கெல்லுதல் என்பதற்குக் கிண்டுதல் என்று   பொருளிருப்பதால்,  கேலி என்பது கிண்டல் என்பதே   எனற்பாலது ஐயமற மெய்ப்பிக்கப் படுகிறது.

இனிக் களித்தல் என்பதிலிருந்து  தோன்றும்  களிக்கை என்ற  கை தொழிற்பெயர் விகுதி பெற்ற சொல், கேளிக்கை என்று திரியும். களிக்கை எனல்  இயற்சொல்.  கேளிக்கை என்பது திரிசொல்.  செய்யுளில்  இரண்டும் ஏற்கப்படுவன.

அறிக  மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

குறிப்புகள்:

கைப்பேசி ஆங்கில மொழிபெயர்ப்பில், இறுதிப் பாகியில் உள்ள

"இயற்சொல்"  என்ற சொல்  "  இயற்றொல்" என்று தெரிகிறது.

அதைத் திருத்த இயலவில்லை.  அது கூகிள் மொழிபெயர்ப்பு.  




 

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எங்கும் நோய்ப்பரவல்.

 எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் 13-2.5

இருமினால் தும்மினால் அச்ச மச்சம் 13-2.5

செங்கண்ணார் செல்வர்கள் உற்ற   தென்னே 12-3.5

சீர்கெட்ட நோய்நுண்மி பட்ட   தாலோ 14-2.5

பங்குற்றார்  கொல்லியுறு  பலிவட்   டுக்குள்   13-4.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்    கொள்க   13 -3

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று  13-4

தானுய்க  இஞ்ஞாலம் தேர்ந்து    தானே  14-2.5


மாத்திரை எண்ணிக்கையும் குறிக்கப்பட்டுள்ளது.  எ-டு:  14-2.5 14 என்பது உயிர்,உயிர் மெய்களின் மாத்திரை.   மற்றவை குற்றெழுத்துக்களின் மாத்திரை. கவிதை எழுதுவோரின் கணிப்புக்கு இது.

உரை:-

எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் ---  பல இடங்களிலும் நோய்வாய்ப்பட்டோர் மிகுந்துவிட்டனர்;

இருமினால் தும்மினால் அச்ச மச்சம்  -  - யாரும் எங்கு இருமினாலும் தும்மினாலும்  அடுத்து உள்ளோர்   நோய்த்தொற்று அச்சத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்;  

செங்கண்ணார் செல்வர்கள் உற்றதென்னே ---- ஒளியுடைய  கண்களை உடைய சிறந்தோருக்கு இப்போது இந்தத் தொற்று இன்னல்  வந்தது எப்படி? 

சீர்கெட்ட நோய்நுண்மி பட்டதாலோ ---   தள்ளிப்போன கொரனா என்னும் கிருமியினால் தானோ

 கொல்லியுறு  பலிவட்டுக்குள் பங்கு உற்றார் -  உயிர்க்கொல்லிகள் மிகுந்து பலி வாங்கும் வட்டத்துக்குள் மக்கள் சென்று தொடர்பு மிகக் கொண்டுவிட்டனர்.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்கொள்க   ---  அவர்கள் வீழ்ந்துவிட்ட படுகுழிகளிலிருந்து அவர்கள் வெளியேறப்பிரார்த்தனை செய்க;

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று ---   நல்ல நிலையைத் தக்கவைத்துக்கொண்டு,  இந்த உயிரியல் போர்க்குள் செல்லாமல் நிலைபெற்று;

  இஞ்ஞாலம் தேர்ந்துதானே  தானுய்க   --- இவ்வுலகம் தேர்ச்சி பெற்று முன்னேற வேண்டும் என்றவாறு.




நோயாளிகளை மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லும் இதுபோலும்
வண்டிகள் செய்யும் சேவைகள் மிகப் பாராட்டத்தக்கது ஆகும்.


மீள்பார்வை - பின்



புதன், 21 ஏப்ரல், 2021

மது - சுருங்கிய விளக்கம்

ஓர் ஐம்பது மாடிக் கட்டிடத்தின் பலகணி1யிலிருந்து வெளியில் எட்டிப்பார்த்தால் சிலர் மயக்கம் அடைந்துவிடுதல் அறிந்துள்ளோம்.  வான்படைஞர்க்கு இத்தகு காட்சிகள் இயல்பினும் இயல்பாகும்.  இவர்கள் பறந்துகொண்டே விளையாடும் திறம்  பெற்றவர்கள்  ஆவர். முதல்முறை போயிலை2 போட்டால் மயக்கம்  வருகிறது.பழகிப் போய்விட்டால் அதிகப்  போயிலை கேட்கும்.  பண்டு சிங்கப்பூரில் போயிலை வணிகம் செய்தவர்கள் தேவர் அண்ட் கம்பெனி ( தேவர்கள் குழும)க்காரர்கள். போயிலை கொண்டுபோய்ப்  பகிர்மானம் செய்தவர்க்குப் "போயிலைக்காரர்"  என்று அவருடைய வாடிக்கையாளர்கள் பெயர் கொடுத்திருந்தனராம். அக்காலங்களில்  மயக்கப் பொருட்களைப்   புழங்குவதில் தமிழர்  பெயர்பெற்றோர் ஆவர்.  இது  1940 - 50 வாக்கில் என்பர்.  அப்போது கள்ளுக் கடைகளும் சிங்கப்பூரில் இயங்கிவந்தன.  சிங்கப்பூரில் இக்கடைகளை ஒழித்த பெருமை கலைச்சார்புத்துறை அமைச்சர்  மறைந்த உயர்திரு இராச ரத்தினத்தி னுடையது ஆகும்.

மயக்கப் பொருள்களைப் பற்றி முன்னர் எழுதியுள்ளோம்.இங்கு ஓர் இடுகை உள்ளது. சொடுக்கி வாசிக்கவும்.3

மயக்குவது  >  மது ( இடைக்குறை).https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html  [ சுருக்கச்சொல்]

இச்சொல்லை அடிச்சொல்லிலிருந்து அணுகி ஆய்வு செய்யலாம்.

சுருக்கமாக:

அடிச்சொல்:  மர்.

மர் > மய் > மய > மயங்கு  (மய்+ அம்+ கு)  >  மயங்குவது,   இடைக்குறைந்து:  மது.

மர் > மய் >மயக்கை >  மசக்கை.

மர் >  மரல் }

மர் > மருள்}  -  மயங்கி அல்லது சிந்தனையற்று  மனிதன் இயங்கும் நிலை.

மர்>   மரம்:   மண்ணில் முளைத்து வளரும் உணர்ச்சியற்ற  அறிவுக் குறை  உயிர்.

மர் >  மரி> மரித்தல்.  உணர்ச்சியற்ற, உயிர்விட்ட நிலை அடைதல்.

மர் > மரவை:  மரத்தாலான கோப்பை வைக்கும் தட்டு. வை என்ற விகுதி பொருத்தமானது.

ஒப்பீட்டுக்குப்  பல உள.  ஒன்று இங்கு:

விர்> விய் > வியன்( விரிவு).  "வியனுலகு"

விர்> விரி> விசி:   விசிப்பலகை.

விர் >விரு > விசு > விசும்பு:   வான்.

விர் >விய் >விய் +ஆல் + அம் > வியாலம்> விசாலம். ( ய - ச திரிபு)

விர்>விய்>  வியா > வியா+பர+ அம் =  வியாபாரம்:   விலைப்பொருட்டுப் பொருள்களை விரிந்து  பரவச் செய்தல்.

விர்> விரு > விருத்தம் :  விரிவுடைய பாவகை.

விர்> விரு> விருத்தி.( சரிசெய்து விரிவாக்குவது) .

இது மது என்ற சொல்லுக்கு விரிவான ஆய்வுக்கு வழிகோலும்.

மர் > ம > மது. (கடைக்குறை,பின் து விகுதி பெற்ற சொல்) என்பது மிக்கச் சுருக்கமான விளக்கம். 

மருதம் அடிச்சொல்: மர்

மக்கள் மயங்கும் ( தங்கிக் கலக்கும்) நிலம்

எத்தொழிலோரும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்ள முனையுங்கால் வந்து கலந்தமரும் நிலப்பகுதி.  ஆடு மாடு வளர்த்தாலும் உணவு தடையின்றி வேண்டுமாயின் விவசாயத்தில்  ஈடுபடுதல் செய்வர். மீன்பிடித் தொழிலரும் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயத்தில் புகுந்தால் உணவுக்குக் குறையிருக்காது. இவ்வாறு  ஒவ்வொரு நில வாழ்நரையும் பொருத்தி அறிந்துகொள்க.

விவசாயம் :   இங்கு விளக்கப்பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

வேற்று  நிலத்தொழிலரை ஈர்க்கக் காரணம் தொழிலின் உள்ளமை சிறப்பே.

யாரும் மருவும் தொழில்.  யாரும் வந்து மயங்குறு தொழில்.மயங்குதல்  - கலத்தல்.  தலைசுற்றுதல் என்று பொருட்சாயல்கள்  பல.

ஆடு மாடு நாய்  பூனை என யாவற்றுக்கும் உணவு துவன்று  உயிர்களைப் பேணும் தொழிலும் விவசாயம் என்னும் உழவுதான். சொல்லுக்கும் அதன் அமைப்புக்கும் காரணம் அறிகிறோமேஅன்றி,  இது விளம்பரமன்று.

இது சொல்லமை காலத்துச் சிறப்புக் கூறியது.

உழவை வள்ளுவன் புகழ்ந்ததும்  உணவு விளச்சலுக்கு அது  ஆதியானதால்தான்.  ஆதி -  ஆக்க  மூலம்.   கள் முதலியவை உண்டாக்குதல் துணைத் தொழில்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

தொடர்பு காட்டும் மற்ற இடுகைகள்:

1. ராஜஸ்தான் விவசாயிகள் : https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_15.html

 2. விவசாயம்   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

3. பலவகைச் சொல்லாக்கம்: https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_99.html

4. நஞ்சை புஞ்சை முதலியன https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_27.html

தொல்காப்பியத்தில் : " வேளாண் மாந்தர்க்குப் பிறவகை நிகழ்ச்சி இல்" என்பது:  படைக்கு இவர்களை எடுப்பதில்லை.  படைக்கு வேண்டிய உணவும் இவர்களிட மிருந்தே வருவதால். இவர்களும் சண்டைக்குப்போனால் படையினர் எதைச் சாப்பிடுவது?.   அதுதான் காரணம்.   An army moves on its stomach,  said Napoleon.

படைக்கு ஆக்கிச் சோறுபோட்டவர்கள் படையாக்கிகள்.

அடிக்குறிப்புகள்:

1  பண்டைக்காலத்தில் காற்றதர்கள் ( சன்னல்கள்)  பல துளைகளை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு துளையும் ஒரு கண். பலகண் உடைமையால்  பலகணி என்றுபெயர்.

2  போயிலை - புகையிலை.  போயிலை என்பது பேச்சுவழக்குச் சொல்.

3  வாய் > வாயித்தல் > வாசித்தல்.  ( ய - ச திரிபு).