புதன், 17 பிப்ரவரி, 2021

பல திற விளக்கம் - சொல்லாக்கத்தில்

 பச்சைக் கிழங்கைப் பிடுங்கித் தின்றுகொண்டு,  விலங்குகட்கு அஞ்சிக்கொண்டு மரத்தின்மேல் வீடுகட்டிக்கொண்டு ஏறத்தாழ இலைகளால் தழைகளால் தன்னை மூடிக்கொண்டு குளிரிலிருந்து அல்லது வெம்மையிலிருந்து விடுபட வழியில்லையோ என்று வாடியவனே மனிதன். அன்று அவனைக் கண்டு அப்பால் மறைந்துவிட்ட அவனின் கடவுள் இப்போது வந்து கண்டாலும், வியப்பில் ஆழ்ந்து மலைத்து நிற்பார் என்பதில் ஐயமொன்றில்லை.  அன்று அவனிடம் இருந்த சொற்கள்,   அ, இ, உ,  பின்னும் சொல்வோமானால்  எ, ஏ,   ஓ எனச்  சில இருக்கலாம்.

அதனால்தான்  உ  - உள்ளது என்று தமிழிலும்  ஊ -  இருக்கிறது என்று சீனமொழியிலும் அடிச்சொற்கள் பொருளொற்றுமை உடையவாய் உள்ளன.

அதனால்தான்,  அடா  ( அங்கிருக்கிறது) என்ற அகரச் சுட்டில் மலாய் மொழியில் உள்ளது.   அட் ஆ >  அடா.  அதே காரணத்தால் ஆங்கிலத்தில் அட்  என்பது இடத்திலிருப்பது குறிக்கிறது.

உலக மொழிகளை ஆராய்ந்து எத்தனை சுட்டடிச் சொற்கள் கிடைக்கின்றன என்று நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது.  செய்து நீங்கள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்;  அல்லது எங்காவது வெளியிடலாம். ஆனால் பிறருக்கு உரைப்பதால் தெளிவு மேம்படலாம் ஆயினும் உங்களுக்கு அதனால் பயன் குறைவுதான். பிறன் போற்றினும் போற்றாவிடினும் நீங்கள் இருந்தபடி இருப்பீர்கள். மாற்றமெதுவும் இல்லை.

விள் என்பது ஓர் அடிச்சொல்.  அதிலமைந்த வினைச்சொல்தான் விள்ளுதல் என்பது. இது சொல்லால் வெளியிடுதலைக் குறிக்கும்.   விள் திரிந்து வெள் > வெளி ஆனது.   விள் திரிந்து விண் ஆதனது.  இதுவும் ஆள் திரிந்து ஆண் என்று ஆனது போலுமே.   விள் திரிந்து அய் இணைந்து விளை ஆனது.  ஒரு விதை முளைப்பது  விள் ( தரையிலிருந்து வெளிவருதல் ). அப்புறம் அது செடியாய் மேலெழுவது ஐ.    இது அருமையான பழைய விகுதி.  அதே மேலெழுதற் கருத்து இன்றும்  ஐ - ஐயன் - ஐயர் என்ற பல சொற்களில் உள்ளன. அந்தக் காலத்தில் மனிதன் தனிமையை வெறுத்தான்.  அங்கிருப்பவர் இங்கு வந்து நம்முடன் நின்றால், நமக்கும் உதவிதான்.  கரடி வந்துவிட்டால்  அவருடன் சேர்ந்து நாமும் கரடியை எதிர்க்க வலிமையில் மேம்பட்டுவிடுவோம்.   அதுதான் ஒற்றுமை:  அது ஐ+ இ + கு + இ + அம்  :  அங்கிருப்பவர் இங்கு வந்துவிட்டார்,  இங்கு அமைந்தது ( நம் வலிமை)  என ஐக்கியம் உண்டாகிவிடுகிறது.  கழிபல் ஊழிகள் சென்றொழிந்திட்ட காலையும் நம் தமிழ் அடிச்சொற்கள்  இன்றும் கதிர்வரவு போல இலங்குகின்றன.   

இவ்வடிச்சொற்களால் ஒரே சொல்லை பல்வேறு வழிகளில் பொருளுரைக்கும் வழி தமிழ் மொழிக்கு உரித்தாகிறது.  பிறமொழிகளிலும் மூலம் காணுதல் கூடும்.  ஆனால் ஒட்டிக்கொண்டிருக்கும் தோல்போலும் ஒலிகளை விலக்கிவிட வேண்டும்.  எடுத்துக்காட்டு:  ஹியர் (ஆங்கிலம்).   இ = இங்கு.  அர்  - ஒலி உள்ளது குறிக்கக்கூடும்.  அருகில்  என்பதிலும் அர் உள்ளது.  இ என்பது ஹி என்று வீங்கி நிற்கிறது. என்றாலும் முயன்று பொருள்கூற இயலும் என்றே கூறவேண்டும்.

இனி விளை என்பதில் து விகுதி இணைத்தால் விளைத்து ஆகிவிடும்.  து என்பது பெரிதும் "எச்ச விகுதி" யானாலும்  ( தோலை உரித்து என்பதில் உரித்து போல ,  ஆனால் விழுது என்னும் பொருட்பெயர் அல்லது சினைப்பெயரில் து போல ) அதில் ளை என்பதை விலக்கி இடைக்குறையாக்கினால் வித்து ஆகிவிடும்.  ஒன்று பெயரெச்சம், மற்றது  பெயர்ச்சொல். (பொருட்பெயர்).  இவை பயன்பாட்டுக் குறிப்பெயர்கள்.  வேறொன்றுமில்லை.  விளைத்தல் போலும் அறிவும் கல்வியும்.  ஆகவே ஒப்புமையாக்கம்.  விளைத்து > வித்து > வித்துவம் > வித்துவன் > வித்துவான் எல்லாம் விளக்கம் அடைகின்றன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 


திங்கள், 15 பிப்ரவரி, 2021

உயர்வு குறிக்கும் ஐ விகுதியும் ஐயன் (கடவுள்) - சொல்லும்

 ஐ என்பது தமிழில் பண்டுதொட்டு வழங்கிவருகின்ற ஓர் ஓரெழுத்துச் சொல். தமிழில் சிறு சொற்கள் பலவுள்ளன.  நீ, நான், காண், செல் என்பவெல்லாம்  உருவிற் சிறியவை என்றே சொல்லலாம்.. இத்தகைய சிறியனவற்றுள் மிகக் கூடுதலாக எழுத்துக்கள் உள்ளவை, மூன்றில் முடிபவை என்று வைத்துக்கொள்ளலாம்.

ஐ என்பதன் பண்டைப் பொருள் உயர்வு, மேன்மை முதலியன எனல் சரி. இதனுடன் அன் என்னும் ஆண்பால் விகுதி சேர்ந்து ஐயன் என்ற சொல் அமைந்தது. ஐயன் என்பது  மேன்மை பெறு மனிதனையும் குறிக்கும். கடவுளையும் குறிக்கும்.. எதிரில் வரும் மனிதனை மரியாதையுடன் குறிப்பது தமிழர் பண்பாட்டுக் கடைப்பிடிப்பு ஆகும்.

வந்தனை.  கண்டனை.  சென்றனை , நீ  -   இவற்றுள் வந்த ஐ உயர்வு குறிப்பது ஆகும்.  ஆனால் இற்றை நிலையில் இவ்வுயர்வுக் கருத்து மறைந்துவிட்டது. அது முன்னரே போய்விட்டது என்றுதான் திருத்திக்கொள்ளவேண்டும்.  மரியாதைக் குறிப்பு அறவே ஒழிந்துவிட்டபடியால், எப்படி அதைச் சேர்ப்பது என்று கவலை கொண்ட மக்கள்,  அதற்குப் பதில் ஈர் என்ற சொல்லைச் சேர்த்தனர்.  அது:

வந்தீர், கண்டீர், சென்றீர் என்றாயிற்று. ஏனை இவையொத்த வடிவங்களும் இவற்றுள் அடங்கும்.   இந்த ஈர் என்பதில் ஆடிக்கொண்டிருந்த மரியாதை அல்லது பணிவு,  சிறிது காலத்தில் மறையவே, அப்புறம் "கள் " விகுதியைச் சேர்த்தனர்..  அது அப்புறம் -----

வந்தீர்கள்,  கண்டீர்கள், சென்றீர்கள் 

என்று முற்றுக்களாய்    அமைந்துவிட்டன என்றல்  காண்க.

இதற்குமுன் கள் என்னும் விகுதி   அஃறிணைப் பொருட்களுக்கே வழங்கிவந்தது.  அது பன்மை விகுதியாய் இருந்தது.   அதன் திணைக் குழப்பத்தை மறந்துவிட்டு,  உயர்திணை அஃறிணை என எல்லாவற்றுக்கும் பொதுவிகுதியாய் அது புகுந்து புதுமலர்ச்சி கண்டது.

சங்க இலக்கியங்களில் இவை அருகியே பயன்பாடு கண்டன.  வள்ளுவனாரிலும்  அஃது குறைவே. "பூரியர்கள் ஆழும் அளறு"  என்புழி  (என்று முடியும் குறளிற்)  காண்க.  அதனால் யாம் எழுதும்போது பெரும்பாலும் கள் விகுதியை விலக்கியே எழுதுவேம்.  எடுத்துக்காட்டாக,   ஆசிரியர்கள் என்று எழுதாமல்,  ஆசிரியன்மார் என்றுதான் எழுதுவோம்.  மாரைக்கிளவி செவிக்கினிது.

இந்த விகுதிகள் பேச்சில் மரியாதையை வளர்த்தது குறைவே ஆகும்.  பணிவுக் குறைவாகப் பேசுவோர்,  பேசிக்கொண்டுதான் திரிவர்.

பழங்காலத்தில்  அள் என்ற ஒரு சொல் இருந்தது.  அது அடிச்சொல்.  அதில் இகரம் இறுதியில் சேர்ந்து, அளி என்று ஆனது.  அளி - அளித்தல்.  அன்பினால் பிறருக்குக் கொடுத்தல்.  அள்  அன்பு குறித்தமையினால்,  வந்தனள், சென்றனள், கண்டனள் என்பவை வந்து, சென்று, கண்டு என்பவற்றுடன், அன்பு கலந்த குறிப்புகளாயின. தமிழன் விலங்குகளையும் நீர்வாழ்வனவற்றையும் அன்புகொண்டே கருதினான்.  மீன்+கு+அள்,  பறவை+கு+ அள் என்பவை  மீன்கள்,  பறவைகள் ஆகி,  பன்மை விகுதிகள் ஆயின. மொழியில் இவை போலும் சொல்லொட்டுக்கள் பிற்காலத்தவை. மலையாளம் இன்னும் சில மொழிகளில் எச்ச வினைகளே நின்று செயல் முற்றுப்பெற்றதையும்  உணர்த்தும்.  அவன் வந்நு ( அவன் வந்தான்) என்பது காண்க. ஒருமை பன்மை, இல்லாத மொழிகள் பல.  " இரு பெண்கள் வந்தார்கள் "  என்பதில்,  இரு என்பது பன்மையைக் காட்டுகிறது.  அப்புறம் பெண்கள் என்று ஏன் இன்னொரு முறை பனமையைக் காட்டுதல் வேண்டும் என்பர். அப்பால் வந்தார்கள் என்பதில் வேறு பன்மை. ஒரு தடவை பன்மை சொல்லி வாக்கியம் முடிவதற்குள் அதை மறந்துவிடுவார்களா என்ன?

இப்போது ஐ விகுதிக்குத் திரும்புவோம்.  வந்தனை, சென்றனை என்பவெல்லாம் தம்மில் வரும் ஐ விகுதிகளால் உயர்வு குறித்தன என்பது  உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு - பின்,

முகக் கவசம் அணியுங்கள்

இடைத்தொலைவு கடைப்பிடியுங்கள்

நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.

நலமுடன் வாழ்க.



சனி, 13 பிப்ரவரி, 2021

சலக்கிரீடை ( ஜலக்ரீடை) என்பது

 "ஜலக்கிரீடை" எனற்பால சொல்லை அறிந்துகொள்வோம்.

முந்தையக் காலங்களில் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடம் செல்கையில் இடையில் ஆறு குறுக்கிடும். உடைகளைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டு, குளிக்க விரும்புகிறவர்,  ஆற்றில் இறங்கிக் குளிப்பார்.  சவர்க்காரம் இல்லாத அக்காலத்தில்  நல்ல கரைமணலையோ கிடைக்கும் இலைதழைகளையோ கசக்கி உடலில் தேய்த்துக்கொண்டு குளித்துமுடித்துவிட்டு அப்பால் செல்வர். ஒரு திருகுகோலைத் தொட்டுத் திருப்பியவுடன் நீர் வரும்படியான நகர்வாழ்நர் துய்க்கும் வசதிகளில்  திளைத்தல் அக்காலங்களில் இல்லை.

ஓடும் நீருக்கு அல்லது ஜலத்துக்கு இடையில் நின்றுகொண்டு குளிப்பதால் இது "ஜலம்+  கு + இரு + இடை"  >  ஜலக்கிரீடை  என்ற சொல் பிறந்தது.

ஜலம் -   நீர்.

கு  -   சேர்விடம் (அல்லது நீரில் தோய்தலைக்) குறிக்க  "கு" இடைநிலையாய் வந்தது.  ஜலம் + கு > ஜலத்துக்கு என்று அத்துச்சாரியை வரவில்லை.  அது இங்கு தேவையுமில்லை  கு என்பது வேற்றுமை உருபாகவும் வரும்.

ஜலத்துக்கு இடையில் நின்று அவன் குளிக்கின்றான்.  அதுதான் இரு இடை > இரீடை > (கு) இரு இடை > கிரீடை.

இரு என்பதில் திரிந்த கிரு என்பதைத் தனியாக்கி விளக்குவது ஒரு தந்திரம்.

இரு என்பதன் முந்துவடிவம்  இடு என்பது. இட்ட இடத்தில் உள்ளதாதல் இரு. இத்திரிபில் நுண்பொருள் மாற்றம் உள்ளது.  ட - ர பெரிதும் காண்புறும் திரிபே.

சலசல என்று ஓடுவதால் சலம் (ஜலம்) என்ற பெயருண்மை முன் ஓர் இடுகையில் விளக்கம் பெற்றது.  ஆங்குக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்க.

முகக் கவசம் அணிக.