ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் இருக்கிறது என்று நாம் எண்ணினால் நமக்கு மொழியறிவு போதவில்லை என்று அறிந்தோர் சொல்லி நம்மை ஒதுக்கிவிடுவார்கள். ஒரே பொருளைக் கொண்டிலங்கும் சொற்கள் பல மொழிகளில் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது. யாம் கணக்கெடுக்க வில்லை என்றாலும் இதை நீங்களே பட்டறிவின் மூலமும் உணர்ந்திருப்பீர்கள் என்பது எம் துணிபாகும்.
ஆங்கிலச் சொல்லான, கடவுள் என்று பொருள்தரும் God (கா*ட்) என்பதைப் பார்ப்போமானால் அதற்கு நேரான கிரேக்க மொழிச்சொல் "தியோ" என்பதாகக் கூறுவர். ஆனால் தியோ என்றால் "ஓடு (ஓடுதல்)" என்ற வினைச்சொல்லுடன் தொடர்புள்ள சொல் என்பர். இவ்வாறு சொல்லமைந்திருப்பது வியப்பினையே அளிக்கக்கூடும், இருந்தாலும் ஆய்வாளர்கள் கூறுவது இது. காரணமொன்று இருக்கவேண்டும். பாடிப்பாடி தினம் தேடினாலும் ஓடி ஓடி மறைந்துவிடுபவர்தாம் கடவுள் என்று நீங்கள் நினைத்தால், யாமொன்றும் சொல்வதற்கில்லை. கடவுள் என்ற சொல்லும் நாம் தேடி அணுகுங்கால் கடந்து சென்றுவிடுகிறவர் என்பதை முன்வைப்பதாகத் தெரிகிறது. எளிதிற் கிட்டுபவராகத் தெரியவில்லை.
தெய்வம் என்ற தமிழ்ச்சொல்லும், தேய்தல் என்பதனுடன் தொடர்புடைய சொல்லாகும். பற்றாளன் பரவப் பரவ ( அதாவது கும்பிடக் கும்பிட ) அவர் வந்து முன் தோன்றாமையால் நம்பிக்கை தேய்ந்துபோதலை உடைய, நாமறிதற்கு எளிதானவரல்லாத ஓர் ஆற்றலர் தாம் " தெய்வம்" (தேவன், தேவர்) என்று கூறலாம். எனினும் தெய்வம் என்ற சொல்லின் அமைப்பு வேறுவிதமாக அறியப்பட்டுள்ளது. கடவுளைப் பற்றிய இடுகைகள் பல இங்கு உள்ளன. அவற்றில் தேய்வு பற்றியும் தெய்வம் பறியும் தொடர்புகண்டு கூறும் இடுகையை இங்குக் காண, சொடுக்குங்கள்:-
https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_5.html
(தீயைப் பற்றிய மனித சிந்தனை).
தேவு, தேவன், தேவி முதலிய சொற்களும் மேற்சொன்ன இடுகையில் தொடர்பு கண்டுள்ளன.
"காட்" என்ற ஆங்கிலச் சொல் ஓடுதலுடன் தொடர்புடையது என்று சொல்கையில், தமிழில் கிடைக்கும் துரை என்ற சொல், துரத்துதல் என்பதனுடன் தொடர்பு பட்டது என்பது தெரிந்துகொள்ளற் குரியது.
துர , துரத்து என்ற அடிச்சொல்லின் பரிமாணங்கள்:
துரந்தரன் - பொறுப்பு வகிப்பவன்; ( துர+ அம் + தரு + அன் );
துரந்தரி - பொறுப்பு வகிப்பவன் ( அன் விகுதிக்குப் பதில் இ இறுதி);
துர . துரப்புதல் : (இது துரத்துதல் என்ற பொருளின் திரிந்து தேடுதல் என்று பொருள் படுகிறது .)
துர > துரம் ( துர + அம் = துரம் ( பொருள்: பொறுப்பு).
துர > துரிதல் : தேடுதல்.
துர > துரிதம் : ( துர+ இ + து + அம் ). { துரத்தும்போதும் தேடும்போதும் ஓடும்போதும் ஏற்படுவதுதான் விரைவு, வேகம். }
துர < துரு > துருப்பு (படை ). எதிரியை துரத்தியடிக்க வேண்டியது துருப்பு.
துர < துரு > துருவம்: துரத்தி இறுதியில் அடைவது துருவம் ( துருவிச் சென்று காண்பது)
துர > துரை ( வேலையாட்களைத் துரத்தி வேலைவாங்கி அவர்கள் வேலைகளை துருவி ஆய்பவன் துரை ). துருவல் என்பதற்கு ஆராய்தல் என்றும் பொருள் உண்டு.
பெங்களூர் ரமணியம்மாள் பாடிய ஒரு பத்திப்பாடல் துரை என்ற சொல்லை இடமும் பொருளும் கனியப் பயன்படுத்துகிறது:
தணிகைமலைப் பெருந்துரையே வாவாவா--- என்
தயாநிதியே தரும துரையே வாவாவா.