சனி, 9 மார்ச், 2019

மக்கள் கண்டுபிடித்த இலக்கண அமைதிகள்.

இன்று ஓர் அன்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் அவரைக் கேட்டது:  சாமி! எப்படி இருக்கீங்க?  என்பதுதான்,

பேச்சுத் தமிழிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறதன்றோ?

செந்தமிழ்:   எப்படி இருக்கிறீர்கள்?
பேச்சுத்தமிழ்:  எப்படி இருக்கீங்க?

இது ஒரு சுருக்கமாகவே தெரிகிறது.  தொகுத்தல் என்றாலும் இடைக்குறை என்றாலும் சுருக்கம்தான்.

இரு :  பகுதி.
க்:         சொற்பகுதி புணர்வில் வலி மிகுதல்.
கிறீர்கள் >  கீங்க.

இதைக் கூர்ந்து நோக்கினால் கிறீர்கள் என்பது கீங்க என்று உருமாறியது பெரிய மாற்றம்தான்.

கிறீர்கள் >  கி  ( றீர் ) க ( ள் )  >  கீக >  கீங்க.

ளகர ஒற்றுக் கெட்டது.  கள்  >  க ஆனது.

(க் +  இ )  + ( ற்  + ஈர் )  என்பவற்றிலே பெரிய மாற்றம்.

இவற்றில்  க் + ஈ இரண்டும்  இணைந்து  கீ  என்று மாறி ,   மற்ற இ, ற், ர் ஆகியவை வீழ்ந்தன.

கீ என்பது க என்ற இறுதியைச் சந்திக்க   கீக என்பது ஒரு ஙகர ஒற்றுப்பெற்றது,
ஆக கீங்க ஆனது.

ரகர ஒற்று பெரும்பாலான திரிபுகளில் ஒழிந்துவிடும்.  இங்கும் தொலைந்தது.

வருவார்கள் என்பது வருவாக என்னும் போது  ரகர ஒற்று ( ர் )  ஒழிந்தது. ளகர ஒற்றும் ஒழிந்தது.

ளகர ஒற்று மறைவது தேள்வை என்பதில் தேவை என்ற மாற்றம் ஏற்படுகையில் கண்டுகொள்க.

செய்தீக வந்தீக என்பனவும் உள்ளன. இவற்றில் ர், ள் தொலைதல்.

இடைக்குறை தொகுத்தல் முதலியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் மக்களே.
புலவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லலாம்.  ஆனால் தமிழிலக்கணம் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது,

திருத்தம் பின்
ஒரு பிழை திருத்தம் பெற்றது.


 

வக்கரம் வக்கிரம்

வக்கரித்தல்

வக்கரித்தல் என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. எங்காவது வழங்கிக்கொண்டிருக்கக் கூடும். அதன் பேச்சுவழக்கு சுருங்கிவிட்டது என்பது சரியாகவிருக்கும்.
ஆனால் அது சோதிடத்தில் (கணியக் கலையில்) வழக்குப் பெற்றுள்ளது.  சனிக்கோள் வக்கிரமாய் உள்ளது என்று சோதிடர்கள் சொல்வர்.  வக்கிரம் யாதென்று அறிவோம்.
ஒவ்வொரு கோளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு ஓர் இராசி வீட்டில் தங்கும். பின் அது அடுத்த இராசி வீட்டுக்குப் போய்விடும்.  இப்படிப் போன கோள்  மீண்டும் வந்து விட்டுப்போன வீட்டில் தங்கினால் அதற்கு வக்கரித்தல் என்பர்.
வக்கரித்தலாவது திரும்பி வந்திருத்தல். வக்கரித்தல் முடிந்த பின்பு அக்கோள் மீண்டும் போய்விடும். இஃது இயற்கை நிகழ்வை ஒட்டியே சோதிடத்தில் கூறப்படுகிறது.
இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் கூறுவோம்:
வரு+ கு +  அரு + இ + தல்
=வருக்கரித்தல்
=வக்கரித்தல்.
இதில் கவனிக்க வேண்டியவை:
வரு என்பது வ என்று திரியும்.    வருவான் (  எ.கா)  :  வந்தான் ( இ.கா). ரு என்னும் எழுத்து கெடும் அல்லது வீழும்.
கு என்பது சேர்விடம் குறிக்கும் இடைநிலை. இது தமிழில் ஒரு வேற்றுமை உருபுமாகும்.
அரு என்பது அருகு என்பதன் அடிச்சொல்.  அருகில்  என்ற சொல்லை நினைவு கூர்க.   அரு> அரி.   அருகில் வரல்,
 நெருங்குதல். 
ஒன்றன் அருகில் சென்று இழுத்து எடுத்தலும் அரித்தல் எனப்படும்.  செடிகொடிகளை அரித்தெடுத்தல் போல.
இங்கு அது அருகில்வரல் என்ற பொருளில் வருகிறது,
ஆகவே இதன் பொருள்  வந்து நெருங்குதல்.  அதாவது திரும்பிவந்து நெருங்குதல்.
இனி வக்கரி + அம் =  வக்கரம்.  இகரம் வினையாக்க விகுதி, கெட்டது.  அம் விகுதி புணர்த்தப்பட்டது. இது பின் வக்கிரம் என்று திரிந்தது.
சனி முதலியவை திரும்ப வந்து தொல்லை தருமாதலால் அரித்தல் என்ற வழக்குச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறினும் பொருந்துவதே.
வக்கரம்  என்பது பிற்காலத்து வக்ரம் என்றும் எழுதப்பெற்றது.  இது அயல் சென்றதால் ஏற்பட்ட ஒலித்திரிபு. பின் தமிழுக்குத் திரும்பி வந்த நிலையில் வக்ரம் > வக்கிரம் என்று இகரம் புகுந்து மாறிற்று.
வக்கரம் என்ற ஆதி அமைப்புச் சொல் வழக்கொழிந்தது .
இச்சொல்லுக்கு அடியாய் நின்றது வரு > வ என்பதே ஆகும்,

திருத்தம் பின்பு

வியாழன், 7 மார்ச், 2019

குடக்கு மற்றும் தொடர் கருத்துச் சொற்கள்

 குடக்கு (  குணக்கு ) என்ற பழந்தமிழ்ச் சொற்களை மீள்பார்வை கொள்வோம். இவற்றை நாம் மறந்துவிட லாகாது. இவற்றுள் குடக்கு என்பதை இன்று அறிவோம்.

குடக்கு என்பது மேற்றிசை அல்லது மேற்குத் திசையைக் குறிக்கும். இச்சொல் குடகம் என்று இன்னொரு வடிவமும் கொள்வதாம்.

குடு என்ற அடிச்சொல் வளைவு அன்ற அடிப்பொருளை உடையதாகும். ஒன்று சேர்ந்து வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் தாங்கள் கூடி நிற்கையில் வளைவாக நின்ற அல்லது இருந்த படியால் குடு என்ற சொல்லுக்கு சேர்ந்து இருத்தல் என்ற பொருளும் பின்னர் வந்து சேர்ந்தது, மேலும் அவர்கள் ஆதிகாலத்தில் உள்ளிருந்து வாழ்ந்த குகைகள் முதலியவையும் வளைவுகள் உள்ளவையாய் இருந்தமையும் அவர்களும் வளைந்து நெருங்கி இருந்தமையாலும் வளைவுக் கருத்தினின்றே குடு> குடி; குடு > குடும்பு; குடு> குடும்பம் என்ற சொற்களும் அமைந்தன.

ஆதி மனிதன் நேர், வளைவு, மேல், கீழ் என்றும் முன், பின் பக்கம் - இடம் வலம் என்றும் அறிந்துகொண்டு இக்கருத்துக்களினின்றே பிற கருத்துக்களையும் வளர்த்துக்கொண்டான் என்பதறிக.

பழங்காலத்தில் மேற்குத் திசையாகத் தமிழன் அறிந்துகொண்ட குடக்குத் திசையும் வளைந்த நிலப்பகுதிகளாக இருந்திருத்தல் வேண்டும். இங்கு நாம் கருதுவது கடலோரக் கரை வளைவுகள். அதனால்தான் அத்திசையை அவன் "குடக்கு" என்று குறித்தான்.

குடம் என்ற சொல்லும் அது வளைவாகச் செய்யப்பட்டமையினாலே குடு > குடு+ அம் = குடம் என்றானது. நாம் பிடிக்கும் குடையும் வளைவு உடையதாய் இருந்தமையின் குடு + = குடை என அமையலாயிற்று.

குடம்போன்ற அல்லது அதனை ஓரளவு ஒத்த உருவில் அமையும் பலாப்பழமும் குடக்கனி எனப்பட்டது.

தூணில் அமைக்கும் குடம்போலும் உறுப்பு குடத்தாடி எனப்படும், இந்த குட உருவமைப்பு கீழ் வளைவு உடையதானதால் தாடி எனப்பட்டது. தாடி என்ற சொல் அது கீழ்நோக்கி வளைந்துள்ளதைக் காட்டுகிறது. இது தாழ் + அடி என்பதாகும். தாழ் + அடு + : தாழ நோக்கி மயிர் வளர்ந்து நெஞ்சை அடுத்து இருப்பதால் அது தாழ் + அடு + . நாளடைவில் தாழடி என்பது தாடி என்று குறுகிற்று. இடையில் வரும் ழகரம் டகரமாகவோ இடைக்குறைந்தோ அமையும். எடுத்துக்காட்டுகள்:

தாழ்வு+ அணி = தாழ்வணி > தாவணி. இதில் ழகர ஒற்று நீங்கிற்று.
வாழ்+ அகு + = வாழகை > வாடகை. இடத்தில் வாழ்கூலி. இதில் அகு என்பது அகம் என்பதன் அம் விகுதி குறைந்த கடைக்குறை.

அகம் > அகை.
= அங்கு; கு= சேர்விடம். இப்படி அமைந்த சொல்லே அகமென்பது. உள் சென்று சேருமிடம் அகம். இது சுட்டடிச் சொல் அமைப்பு.

வாடகை குடக்கூலி குடிக்கூலி எனப்படுதலும் உண்டு.

சிலம்பு வளைந்ததாதலின் குடஞ்சூல் எனவும் படும்.

மடித்து இருக்க முடிந்த நம் உடம்புப் பகுதி: மடி. இது காலில் வளையத் தக்க ( மடிப்பதும் வளைவுதான் ) கால் பகுதி ஆதலின் குடங்கால் என்றும் சொல்லப்படும். குடங்காலின் வெளிப்பகுதி ( மடித்து அமர்கையில்) முழங்கால். முடங்குதலும் மடங்குதலும் ஒன்றுதான். இரண்டும் போலிகள். இவற்றுள் முடங்குதல் முந்துசொல். முடங்கால் > முழங்கால்.

ஒப்பீடு:

வாழகை > வாடகை; (> )
முடங்கால் > முழங்கால். ( > ).

சந்திப்போம்.

குறிப்பு:

முடங்குவதால் ( மடங்குவதால் )  (  முடு ) >  ( முடம் )  > முழம் என்றமைந்து ஓர் அளவையைக் குறித்தது.   முடங்கிப் போன கால் கைகள் உடையவன் முடம்> முடவன்,   அடிச்சொல்: முடு. தொடர்ந்து செல்ல இயலாத இடம்: முடுக்கு.  (மூலை முடுக்கு). அங்கு மடங்கித் திரும்புக என்பது கருத்து,

திருத்தம் பின்.
[ இணையத்தில் வாசித்தபோது இதிற்கண்ட
ஓர் எழுத்துபிழையை இப்போது கண்டுபிடிக்க இயலவில்லை.
மீண்டும் வருவோம்.]  14022022 0358