புதன், 13 பிப்ரவரி, 2019

உருளை என்ற சொல்லில் சிந்தனை.

உருளை என்பதைச் சுருக்கமாக:

உருள்+ ஐ =  உருளை என்று அமைத்துச் சொல்லலாம்.

உருளை என்ற சொல்லை அமைத்து முதல்முதலாக வழங்கிய தமிழன் புலவனா அல்லது சிற்றூரானா என்று யாரும் அறிந்தவரில்லை.

எம் ஆய்வில்  :

சக்கரத்தை அமைத்தபின் அதை:

உருள்வளை என்று பெயரிட்டுப் பின் அது:

உருளை என்று குறைந்திருக்கலாம்.

அப்படியானால் இலக்கணப்படி அது:

இடைக்குறை எனப்படும்.

உருளும் வளையம்

உருள்வளை   >  உரு(ள்வ)ளை  >  உருளை.

இரண்டு எழுத்துக்கள் மறைந்தன.

மக்கள் விரைவாகப் பேசவேண்டி நேர்ந்தால் சொற்கள் பல்வேறு சுருக்கங்களை அடைந்துவிடும்.

சறுக்கு அரு அம்:  சறுக்கி அருகில் செல்லும் உதவிப்பொருள்.

சறுக்கரம் >  ச(று)க்கரம் >  சக்கரம்.

சறுக்குவதற்கு அமைந்த அரைவளையம் பின் முழு வளையம் ஆனபோது அதுவும் சக்கரம் என்றே சொல்லப்பட்டது.   மரப்பட்டை சீரை என்று சொல்லப்பட்டு,  அதன்பின் வந்த சீலையும் அதிலிருந்தே திரிந்து பெயர் பெற்றது அறிக.

சீரை > சீலை > சேலை.

சீரை > சாரி  (   அயல் திரிபு).

சீரை = பட்டை.

மரப்பட்டையைக் கோத்து இடுப்பில் அணிந்துகொண்ட காலத்தில் வழங்கியது
எம் தமிழ். இன்று நேற்றல்ல.

பொருளால் தாழ்ந்துவிட்ட சொற்கள்.

ஆள் என்பது முதற்கண் ஆட்சி குறித்த சொல்லன்பது கூறபட்டது. இச்சொல் இன்றும் இப்பொருளில் நன்றாகவே வழங்குகிறது.  இது வினைப் பகுதியாகவே நிற்கின்றது.

அருள் என்ற சொல்லும்  தெய்வக்கொடையைக் குறித்த சொல் என்பது நல்லபடியாகத் தெரிகிறது
இதுபோன்று வினைப்பகுதி உருவில் நின்று பணிவன்புடன் விழைதலைக் குறித்தது.  இதனைக் கருத்தில் கொள்ளுங்கள்:

வந்தருள் என்று உரைப்பாய் -  என் பாங்கி
வந்தருள் என்று உரைப்பாய்.

தெய்வ நிலையில் உள்ளோரை வந்தருள் என்பதுபோலவே  ஆட்சி நிலையில் உள்ள ஒரு மானிடப் பிறவியை " வந்தாள்.  வந்தாள்" என்று கூறினர்.  இவற்றில் உள்ள வழக்கொற்றுமை கண்டுகொள்க.   இன்றுகாறும் இது பெண்பாலாருக்கே உரித்தாய் வழங்கி வருதலால் தொடக்கத்திலும் வந்தாள் என்பது பெண்பாலாருக்கே வழங்கிற்று என்பது உணரத்தக்கது.

ஆள் என்ற ஆட்சிச் சொல் பெண்பாலார் இவ்வழக்குத் தொடங்கிய காலத்து ஆட்சிநிலையில் இருந்தமையைக் குறிப்பதறிக.  நம் குமுகம் ஒரு மாதராட்சி போற்றிய குமுகமாகும். இது ஆங்கிலத்தில் மாந்தவியலில் matrilineal society எனப்படும்.  மாந்தவியல்:  anthropology.

வந்தாள் சென்றாள் கண்டாள் என்பவை உயர் ஆட்சி நிலை குறித்து நிற்க, அந்நிலை எவ்வாறு இழிபுற்றது  என்பது ஆய்வுக்குரியது ஆகும்.  இப்படி உயர்நிலையில் இருந்து இழிபு கண்ட சொற்கள் பல.

நாற்றம்:  பண்டைப் பொருள்:  மணம்.  இற்றைப் பொருள்: தீய வீச்சம்.

தேவரடியாள்:  பண்டைப்பொருள்:  தெய்வத்தொண்டு செய்யும் பெண். இற்றைப் பொருள்:  விலைமாதர்.

வந்தாள் சென்றாள் முதலிய சொல்வடிவங்கள் இவ்வாறே  ஆட்சிநிலை குறிக்காமல் தம் பொருளிழந்தன.  ஒரு மதிப்புக்குரிய மாதை (  அரசகுமாரி என்று வைத்துக்கொள்ளுங்கள் ) வந்தாள் என்று குறிப்பிட்டால் பணிவுக்குறைவு,  (மரியாதைத் தேய்வு)  என்று உணரப்படுகிறது.    அதனால் இவ்வழக்கும் ஒரு பொருளிழிபே  ஆகுமென்பதை உணர்க.  இதை ஈடுகட்ட வந்தார் சென்றார் என்று எழுதவும் சொல்லவும் வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆர் என்பதோ உயர்வு குறிக்கும் சொல்.  அதுவும் பின் ஒரு விகுதியாயிற்று.

ஆர் என்ற அடிச்சொல்லின் பொருள் இன்று உயர்வையே குறித்ததுடன்,  ஆரியன் என்ற தமிழ்ச்சொல்லும் இன்றும் உயர்ந்தோன் என்றே பொருள்தரும்.  ஆரியன் என்ற தமிழ்ச்சொல் ஓர் இனப்பெயர் அன்று.  அது ஆதியில் ஒழுக்கத்தாலும் அறிவினாலும் உயர்ந்தோன் என்று பொருள்பட்டது.  பின்னரே இழிபு அடைந்து ஒரு கூட்டத்தினனைக் குறிக்க வழங்கிற்று, இதுவும் பொருளிழிபே  ஆகும்.   குமுகத்திற் பலவும் இழிபு அடைந்தபோது இப்பொருள் இழிபு விளைந்தது காண்க.

ஆர் :  வினைப்பகுதி.
ஆர்தல் -  தொழிற்பெயர்.
ஆர் + இய + அன் =  ஆரியன்.  (  அல்லது:  ஆர்+ இயன் ).    இயல்> இயன். லகரனகரப் போலி.  ஒ.நோ:  திறல் > திறன்.
பொருளாக்கம்:  உயர்வில் அல்லது உயர்வினால் இயன்றோன்.

இதை விளக்க அயல் வழக்குகள் தேவையில்லை  யாதலறிக.

மேலையர் ஆய்விலும் ஆரியன் என்பது சங்கதத்திலும் இனப்பெயர் அன்றென  சொல்லப்படுவதை இதற்கு ஆதரவான கருத்தாகவே கொள்ளவேண்டும்.

ஆள் என்பதும் விகுதியாகிற்று.
ஆர் என்பதும் விகுதியாயிற்று.

ஆதியில் ஆன் விகுதியிலும் இதுபோலவே  பொருளிழிபு நிகழ்ந்துள்ளது..  முருகன் வந்தான் என்று தெய்வத்தைக் குறிக்க வழங்கும் போது பணிவில் குறைவாக எண்ணப்படுவதில்லை ஆதலால் இதுவும் இத்தகைய வரலாற்றுக்கு உட்பட்டதே ஆகும். மனிதனைக் குறிக்கும் போது மட்டும் மரியாதைக் குறைவு என்று எண்ணப்படுகிறது.

சேரலத்தில் ( கேரளத்தில் ) வழங்கிய பேச்சில் இத்தகைய மாறுபாடுகள் நிகழாமலும் எச்சங்களே முற்றுக்களாக நிற்றலும் கண்டு ஒப்பீடு செய்துகொள்க.

வந்தாள் -   மலையாளம்:  வந்நு   ( = வந்து :  எச்சவினை)
வந்தார் -  மலையாளம் :   வந்நு  (  = மேற்படி)
வந்தான் - மலையாளம்:  வந்நு  ( = மேற்படி ).

வந்தான்,  வந்தாள் :   முற்றுவினைகள்.
வந்து ( தமிழ்) :  எச்சவினை.
வந்நு ( மலையாளம் ) - முற்றும் எச்சமும் ஆகும்.

வந்து நிற்பவள் ஆணா பெண்ணா என்று கண்ணுக்குத் தெரியும்போது அதற்கு ஒரு விகுதி எதற்கு என்று இத்தகைய விகுதிகள் வழங்காத மொழியினர் கேட்பர்.  மொழி கடுமையாகிவிட்டது.  சீனம் முதலிய மொழிகளில் இல்லை.

சுசீலா பாடினார். (தமிழ்)
சுசீலா பாடி ( மலையா.)

சுசீலா பெண் என்பது தெரிய விகுதி எதற்கு? பெயரிலும் காட்சியிலும் கண்கூடு அன்றோ?

டிய டாத்தாங்க,   இய டாத்தாங்   ( மலாய்).   விகுதிகள் இல்லாமலே இந்தோவிலும் மலேசியாவிலும் சக்கைபோடு போடுகிறார்கள்.  தகலோக் மொழியைக் கூர்ந்து கவனித்துப் பின்னூட்டமிடுங்கள். 

ஆகவே மொழியை வேண்டுமென்றே யாரும் கடினப்படுத்துவதில்லை. இவை வரலாற்றுச் செலவில் ஏற்பட்டவை ஆகும்.

தமிழ்போல சங்கதமும் கடினமொழியே.  பிற்காலத்து இந்தோ ஆரிய மொழிகளை ஒப்பிடுக.

எச்சவினையே முற்றுவினையாகவும் நிற்றல் ஒப்பத்தக்கதே ஆயினும் இவ்விகுதிகள் தேவையில்லாமல் மொழியில் புகுந்தன என்று கொள்ளல் அறிவுடைமையாகது.  பெண்ணாட்சி இருந்து பின் அது பிறழ்வு அடைந்ததே காரணம் என்பது உணர்க.

சிந்தித்து மகிழ்க!

பிழைபுகின் திருத்தம் பெறும்.
எமது இலத்தீன் ஆசிரியர்  அமரர் REV BRO VALAERIAN அவர்களுக்குத் தாழ்ந்து பண்வினைத் தெரிவித்துக்கொள்கிறேம்.




ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

விசுவாசம்

விசுவாசம் என்பதனை இப்போது யாங்ஙனம் அமைந்த சொல்லென்று உணர்ந் தின்புறுவோம்.

விசு என்பது விரிவு குறிக்கும் ஒரு திரிமூலம் ஆகும்.

விர் > விய் > விய்+ உ + வியு  >  விசு.

விர் என்ற அடியினின்று இத் திரிபுகள் உருப்பெறும் என்பதைப் பழைய இடுகைகளினின்று ஈண்டு அறிதல் கூடும்.

பண்டை மனிதன் மரம் என்பது பெரிதும் உணர்ச்சியற்ற ஒன்று என நினைத்தான். அது ஈரமுள்ள மரமானாலும் காய்ந்துவிட்ட மரமானாலும் அவன் வேறுபடுத்தி அறிய அவனுக்கு காலம் பிடித்தது. உணர்ச்சியும் உயிரும் அற்றது மரம் என்ற கருத்திலிருந்து அவனது மூலங்கள் எப்படித் திரிந்தன என்பதை இங்கு நோக்கி அறிக:

மர் > மரம்
மர் >  மய் > மாய் >  மாய்தல்
மர் > மரி > மரித்தல்.

பாகத மொழிகளில் :

மர் > மார் > மாரோ.
(  இறப்பு )

மர் > மரணம்;  அதாவது:  மரி + அணம் = மரணம்.

மாள் > மார் அல்லது  மார் > மாள்.  ளகர ரகரப் போலி.

மனமே இல்லாதான் மரம் போன்றவன்; குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்; அவன் தொட்டும் அவள் அவள் மரக்கட்டைபோல் கிடந்தாள் என்ற வரணனைகளிலிருந்து மர் என்ற அடிச்சொல்லின் திறமுணர்தல் கூடும்.
ஒன்றறிவதாவது உற்றறிவதுதான் என்று தொல்காப்பியனார் வகுத்துள்ளதால் மரத்திற்கு அது வெட்டிக் காயுமுன் உணர்வுள்ளதாம் என்பதை அறியலாம்.  வெட்டியவுடன் நீர் வடிந்து காய்கிறது:  காய் >  காயம்.
சகதீச சந்திரபோஸ் முதலியவர்கள் மரங்கட்கும் உயிரும் உணர்வும் உள்ளமையை உணர்த்தியுள்ளனர்.

இங்கு கண்டவற்றுள் யாம் உங்கட்குத் தெரிவிக்க விழைந்தது:  விர்> விய் என்பதுபோன்றதே  மர் > மய் என்ற திரிபுமாகும்.

மேற்குறித்தபடி விய் உ என்பது, முன் விரிதல் என்பது  ஆம்.  உ என்பது முன்.

ஆக விசு என்பது விரிவு  அல்லது  முன்விரிவு என்பது ஆகும்.

இனி வாசம் என்பது இருத்தல் என்பது நீங்கள் அறிந்ததே. இங்கு அதற்கு மணம் அல்லது நறுமணம் என்பது பொருளனறு.

விசுவாசமின்மை ஒரு குறுக்கம்.  விசுவாசம் என்பது ஒரு விரிவு.  தன்மேல் ஒருவன் பற்றுள்ளோன்.   பிறன்மேலும் பற்றுள்ளோன் ஆவதே விசுவாசம் என்பதைச் சுருக்கமாக அறியலாம். நடபடிக்கைளில் எதிர்பார்ப்புக்கு மாறாமை போற்றுதலே விசுவாசம் ஆம்.  தொடர்பறாமை கடைப்பிடித்தல் என்பதும் அதுவாம்.  இதனைப் பற்றன்பு என்று முன் ஓரிடுகையில் குறித்தேம்.  பற்று என்பதும் ஓரிடத்தது  இன்னோர் இடத்துச் சென்று பிடிகொள்ளுதல் ஆகும்.  விசுவாசம் என்பதும் அதுவேயாம் என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  வாசம் என்பது முன் விளக்கப்பட்டுள்ளதாக நினைவுள்ளது. இலதாயின் பின் விளக்கம் பெறும்.

பிழைபுகின் பின் திருத்தம்பெறும்.