சில சொற்களில் எழுத்து மாறினாலும் பொருள் மாறுவதில்லை. இவற்றை இலக்கணியர் போலி என்று குறித்தனர். போலி எனின் போல இருப்பது என்பதே நாமறிவதாகும். தமிழில் போலிச் சொற்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.
பழம் என்ற சொல் போலியாகப் பலம் என்று வரும். சென்னை நகரில் மாம்பழங்கள் மிகுதியாகக் கிடைத்த இடத்திற்கு மாம்பழம் என்ற பெயரையே வைத்தனர். மாம்பழம் என்பது பழத்தைக் குறித்துப் பொருள்மாறாட்டம் ஏற்படுத்தியதால் அதை மாம்பலம் என்று மாற்றிச்சொல்லிப் பொருளில் ஏற்பட்ட குழப்படியைத் தவிர்த்தது ஒரு திறனே ஆகும்.
பழம் என்பது பயம் என்று ஒலிக்கப்படுவதும் உண்டு. இலந்தைப் பயம் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
மரத்தின் பயனே பழம் என்பதை உணர அதிகம் தெரியவேண்டியதில்லை. பயனாவது மரம் பயப்பது. மரம் வெளிக்கொணரும் பொருள்.
பழம் பயம் பலம் பழன் பயன் பலன் என்று பல வடிவங்களில் இச்சொல் போதரும் என்றாலும் எழுத்தில் இப்போது பழம் என்பதே திருத்தமான வடிவம் என்று எழுதுவோரும் படிப்போரும் நினைத்துக்கொள்கிறார்கள். திருத்தமான வடிவம் என்று ஒன்று உலகில் இல்லை. பலராலும் இது சரி என்று ஒப்புக்கொள்ளப்படுவதே திருந்திய வடிவம். ஒரு சொல்லில் இருப்பதெல்லாம் வாயொலிதான். வாயினால் ஒன்றை உச்சரிப்பதன் தேவை பொருளைக் கேட்போனுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை. சொல்வதைச் சரியாக உணர்த்துவதே சொல்லின் வேலை; அதையது செய்து வெற்றிபெறுமாயின் அது ஏற்றுக் கொள்வதற் குரிய தாகிவிடும்.
ழகர ஒலி இல்லாத மொழிக்குப் பழம் என்ற சொல் தாவிச் செல்லுமாயின் அது பலம் என்ற வடிவைத்தான் மேற்கொள்ளவேண்டும். சங்கத மொழியில் ( சமஸ்கிருதத்தில் ) ழகரம் இல்லை. ஆகவே அங்குப் பலம் என்ற சொல்லே ஏற்றுக்கொள்ளப்படுவ தாயிற்று. பலம் பின்னர் இந்திக்கும் அங்கிருந்து உருதுவிற்கும் சென்றது. பலத்தின் பொருள் பழமே.
ஞானத்தை வழங்குபவன் முருகப்பெருமான்.
ஞானத்தைப் பயப்போன்.
ஞானத்தைப் பயனாகத் தருவோன், எனவே அவன் ஞானப்பழம் எனப்பட்டான். அவனை வணங்கினால் ஞானமுண்டாம்.
அரக்கு என்பது முத்திரை இடுவதற்குப் பயன்படும் உருகுபொருள். அது வெம்மையில் உருகிப் பின் குளிரில் கட்டியாகிவிடும். கட்டியான பின் அது சற்றுக் கடினமான மேல்தோல்போல் காகிதம் முதலியவற்றில் ஒட்டிக்கொள்வது. அதனால் அது தோலி எனப்பட்டது. ---- அதன் தோலாம் தன்மையினால்.
தோலி என்பது பின் தோழி என்றும் திரிந்தது. இந்தத் தோழி என்பது திரிபுச் சொல். தோழன் என்பதன் பெண்பால் அன்று, வேறு சொல். இந்தத் தோலின் திரிபாகிய தோழி பின் தோளி என்றும் திரிந்தது. ஆகவே இச்சொல்லும் முந்நிலையிலும் தோலி - தோழி - தோலி என்று வந்துள்ளது. இவற்றில் எதுவும் இப்போது வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணின் அறிந்து மகிழ்வீர்.