திங்கள், 7 ஜனவரி, 2019

தூது

தூதன் என்ற சொல்லைக்  கவனிப்போம்.

தூ என்பது ஓரெழுத்துச் சொல்.

தூ என்றால்:

சீழ்.
பகை
பற்றுக்கோடு. SUPPORT
சிறகு
வெண்மை "தூவெண் மதி சூடி" (சைவத் திருமுறை)
சுத்தம். ( உத்தம் > சுத்தம்: தூய்மை முதன்மை என்று பண்டையர் கருதினர்).
தசை ( தசை> சதை. ச>த)
வலிமை.

இத்தனை பொருள்களும் உள்ள சொல்தான் இந்த ஓரெழுத்துச் சொல்.

தூதனாய் இருப்போன் மன்னன்பால் பற்றன்பு ( விசுவாசம்)   உடையவனாய் இருத்தல் முதன்மையாகும். ஐந்தாம்படைச்செயல்பாடுகள் உடையவன் தூதன் ஆதல் இயலாது.ஆகவே, தூய்மை குறிக்கும் தூ என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து   தூதன் என்ற சொல் பிறந்தது.  முன்செல்லுதலும் தூய்மையும் ஆகிய இரு கருத்துகளையும் அடக்கிய சொல்லாக இது முன்னைத் தமிழில் உருத்து எழுந்துள்ளது.   உருத்து =  தோன்றி.  இஃது ஓர் அரிய நற்சொல்.


மேலும் தூது செல்பவன் அரசுக்கு என்றும்பற்றுக்கோடு தருவோனாக , உடையவனாக செயல்படவேண்டும்  ஒற்றன் என்பவன் ஒன்றியிருந்து இரகசியங்களை    அறிந்துவருபவன்.

ஒன்று(தல்) > ஒன்று > ஒற்று (வலித்தல்) > ஒற்றன்.

தூதன், தூது : இத்தமிழ்ச்சொல் பலமொழிகளையும்
அளாவி நிற்பது பெருமைக்குரித்தேயாம்.

தூ ( அடிச்சொல்)

தூது ( து விகுதி) 
இவ்விகுதி பெற்ற பிற சொற்கள்
: மாது, கைது. விழுது தோது  வாது  சூது.
என்பன  காண்க)

தூது + அன்.

இது இருவகையாகவும் புணரும் சொல்.  தூதுவன் என்பதில் வகர உடம்படு மெய் வந்தது.   தூதன் என்பதில் துகரத்தில் நின்ற உகரம் கெட்டு , தூத்+ அன் என்ற இடைத்தோற்றம் அடைந்து விகுதி சேரத் தூதன் என்றானது.

பெரும்பாலும் ஆடவரே இத்தொழிலில் ஈடுபட்டமையால் பெண்பாற் சொல் வழக்கில் இல்லை.


தூதுவை, தூதினி எனலாம்!

தூ என்ற சொல்லின் மூலச்சொல் ஊ என்பது.  இது அ, இ. உ என்ற
முச்சுட்டுக்களில் ஒன்றான  உ என்பதன் நெடில் வடிவம்.  உ என்றால் முன்னிருப்பது, முன்செல்வது என்ற இவைபோலும் பல
முன்னிகழ்வுகளைக் குறிக்கும். தூதன் என்பவன் முன் செல்பவன்.
அரசன் ஒரு நாட்டிடம் தொடர்பு கொள்ள நினைக்கையில்
தூதனையே முன்  அனுப்புவான்.  எனவே தூது என்ற சொல்
முறையாக அமைந்துள்ளது.  ஒரு காதலி ஒரு தோழியைத் தூது
அனுப்புகிறாள்.  அதாவது உ > ஊ :  முன் சென்று அறிந்துவர
அனுப்புகிறாள் என்று பொருள்.

ஊ என்ற நெடிற்சுட்டில் தோன்றி முன்செலவைக் குறித்து, தூய்மை பற்றுக்கோடு ஆகிய நற்குண நற்செயல்களையும் குறித்து,
முன்னணியில் கருதற்குரிய இனிய அமைப்பை இது
வெளிப்படுத்துவதை பகுத்தறிந்துகொள்க.

ஒற்றன் என்பவன் ஒன்றி இருந்து உண்மை அறிந்து வந்து சொல்பவன். தூதன் ஒற்றன் என்ற இவ்விரண்டு சொற்களையும் ஒருபொருளன என்று எழுதுவோர் / பேசுவோர் கருதினும் இவற்றின் அமைப்புப் பொருள் வேறு என்பதுணர்க.  ஒற்றன் ஒன்றி இருந்து யாரையும் பார்க்காமலும் பேசாமலும்  ( அதாவது பேச்சுவார்த்தைகள் நடத்தாமலே ) திரும்பவந்து   கண்ட உண்மை சொல்பவன்.  ஆகவே அம்பாசடர் என்ற ஆங்கிலச் சொல்லை ஒற்றர் என்று மொழிபெயர்த்தல் பொருத்தமன்று.

தூதன் என்ற சொல்லும் பல மொழிகளில் பரவியுள்ளது.   பண்டைத் தமிழரசர் சீனா,  உரோமாபுரி வரை தம் தூதர்களை அனுப்பியுள்ளனர்.  ஆகவே பரவியதில் வியப்பு ஒன்றுமில்லை.  தமிழரின் உலகு அவாவிய   அரசியல் நட்புறவையே இது காட்டுகிறது.  நாம் பெருமிதம் கொள்வதற்குரிய சொல்.

ஊ ( முற்செலவு என்பது இதன் பொருள்களில் ஒன்று).
ஊ > ஊது > தூது > தூதன்.  தூதுவன்.

முன் சொன்னபடி,   தூது என்பதில் து  என்பது விகுதி.

இதுபோல் து விகுதி பெற்றவை   இன்னும் சில:  கை > கைது;  பழ > பழுது;  விழு > விழுது. மரு > மருந்து;   விரு > விருந்து. கழுத்து.

இது வினையிலும் பிறவகைச் சொற்களிலும் வரும்.

டுத்தா என்ற மலாய்ச் சொல் தூதர் என்பதுதான்.  (ஜாலான் டுத்தா).

அறிந்து இன்புறுவீர்.

திருத்தம் பின்.  உலாவியில் சிறிய கோளாறு உள்ளது.  பின் சரிசெய்யப்படும்.












ஞாயிறு, 6 ஜனவரி, 2019

குரங்கு விலங்குச் சொற்களும் பிறசொற்களும்( திரிபுகள்.)

குரங்கு என்ற சொல்லைப் பற்றி இன்று உரையாடுவோம். பிறவும் அறிவோம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வின் என்னும் அறிஞரின் ஆய்வு முடிவு. பல்வேறு சமய நூல்களில்  எவையும் இம்முடிபினை ஒத்துக்கொள்ளவில்லை.  எனினும் அஃது அறிவியல்  தெரிவியற் கருத்தாகத் தொடர்கிறது.  தெரிவியல் எனின் இன்னும் மெய்ப்பிக்கப்படாத முடிபு.  மெய்ப்பிக்கப் பட்டுவிடுமாயின் அது புரிவியல் எனப்படும்.

குரங்கு என்பது   ஓர் ஒப்பொலிச் சொல் என்று சொன்னூல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.   குரங்கு குர் என்ற ஒலியை ஏற்படுத்துவது.  இந்த "குர்" என்ற ஒலியை ஒத்தபடி,   சொல்லமைந்துள்ள படியினால் அது ஒப்பொலிச் சொல்.

வேறு ஒப்பொலிச் சொற்கள் சில:

மா    -  மாடு.
காழ்காழ்  -  கழுதை.
கொக்கொக்  -   கோழி
கா  கா  -    காக்கை  காகம்

குரங்கு என்ற சொல்  குர் + அங்கு என்று பிரிக்க  அங்கு என்ற இறுதி பெற்றிருப்பதைக் காணலாம்.    அங்கு என்பதை  அங்கு என்னும் இடச்சுட்டு என்பதினும்   அம்  - இடைநிலை,  கு  - விகுதி என்பதே ஏய்வான கருத்துமுடிபு ஆகும்.  ஏய்தல் - பொருந்துதல்.  (  "ஏய உணர்விக்கும் என்னம்மை"  என்ற பாட்டுச் சொற்றொடரை நினைத்துக்கொள்க.  )

மந்தி என்ற இன்னொரு சொல்- பெரிய குரங்கு வகை.  மனிதன்போலப் பெரிதாக இருப்பதனால்  அதற்கு இடப்பட்ட பெயர் :  மன் என்ற அடிச்சொல்லைக் கொண்டே அமைந்துள்ளது.    மன் + தி :  மந்தி.   மன் என்ற அடிச்சொல்லே  மனிதன் என்பதிலும் உள்ளது.  மன்+ இது + அன்.  இது தகரச் சகரப் போலியினால்  மனுசன் என்று பேச்சில் வரும்.   மனிதன் >  மனுசன்.  இது மனுஷன்,  மனுஷ்ய என்று மெருகு பெறும்.  மலாய் மொழியில் மனுசியா என்று திரியும்.

மந்தி என்பது புணரியல் முறையில் மன்றி என்று வராமல் மன்-தி என்றே ஒலித்து மந்தி என்று எழுதப்பெறும்.   முந்தி  பிந்தி என்ற சொற்களில் போல இச்சொல்லிலும் அமையும்.

அன்று என்பது முடிந்த நாள் என்று பொருள்படும்.   அன்றுதல் என்பது முடிதல் என்னும் இதன் வினைச்சொல்.   அன்று என்பதிலிருந்தே  அந்து என்று துணிகட்கு முடிவு கட்டும் ஒரு சிறு பூச்சியும் குறிக்கப்பெறும்.  அதற்குப் போடும் ஓர் மருந்துருண்டை " அந்துருண்டை"  எனப்படும்.   ஒரு பகலின் முடிவு  அந்தி எனப்படும்.     அன்+து =  அன்று.   சுட்டடிச் சொல்.   அன்+தி = அந்தி.  பகலின் முடிதல்.  முந்தி என்பது முன்றி என்று அமையாததுபோலவே அன் தி என்பதும் அன்றி என்று அமைந்திலது.

அன்றை -  அற்றை.  இன்றை - இற்றை என்ற வடிவங்களும் நீங்கள் அறிந்தவையே.

அந்தி என்பது பகலின் இறுதி ஆகும்.  அப்போது   இருளும் ஒளியும் மயங்கும்.  மயங்குதலாவது கலத்தல்.

அந்தி மயங்குதடி  ஆசை பெருகுதடி
கந்தன் வரக்காணேனே

என்பதைப் பாடுங்கள்.

கந்தன் என்பதும்:

கன் > கனல்.
கன் >  கனலி ( சூரியன்)
கன் + து =  கந்து.
கன் > கனல்தல்  ( கனறல் ).  ல்+த=  ற.
கன்  >  கனற்பு  :  அடுப்பு.
கன்  > கனற்று.  கனற்றுதல்.
கன் >  கன்றல்..   கன்>  கன் து  > கன்று >  கன்றல்  ( கன்று அல்)
கன் >  கன்றுதல் :  கருகுதல்.

கன் > கன் து > கந்து அன் > கந்தன்.

இன்னொரு சொல்:  அன் > அன் து > அந்து  >  அந்தி.

அரியது கேட்கின் எரிதவழ் வேலோய் -   ஒளவையார்.

கந்தன் என்ற  முருகன் பெயரும் கனல் என்பதனுடன் தொடர்புடையது.  அடிச்சொல் கன்.

பல சொற்களை விளக்கவில்லை. பின்னொரு நாள் அதை நிறைவேற்றுவோம்.

திருத்தம் பின்

சனி, 5 ஜனவரி, 2019

மனத்தில் கொஞ்சிய முகில்

முன்னர் ஓர் ஏரியைப் பற்றிப் பாடிய போது:

வெள்ளி உருக்கித்  தெளித்த போர்வையோ ----  இங்கு
விரிந்த ஏரி காட்டும் நீரினில்,
துள்ளி எழுந்து விழும்  மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்து வந்த(து)  ஊக்கமே.

என்ற வரிகளில் கருத்து வெளிப்பட்டது.


நேற்றுக் காலையில் சிங்கப்பூரில் கொஞ்சம் மழை. அது கண்டு ஒரு
கவிதை தோன்றியது.  அதுவே இது:

எங்கிருந்தோ எடுத்து நீரை 
இங்கு வந்து தெளித்திவ் வூரை
நுங்குட் கொண்ட  நாவுபோலச்
சிங்கலின்றிக் குளிர வைத்தாய்.

சிங்கலின்றி -  குறைவின்றி.

ஊர்கள் மேலே அலைந்தலைந்தே
ஒவ்வோர் துளியாய் விழுங்கிப்
பாரை வள    மிக்கதாக்கி
யாரைக்   காதல்கொண்ு  செய்தாய்.

உன்மனத்துள் மீட்டும் வீணை 
ஊர்க்குள் ஒருத்தி இருக்கிறாளே
என்மனத்துள் மேகம் நீயே
இணைந்துகொஞ்சி இருப்பதென்ன?