ஞாயிறு, 25 நவம்பர், 2018

அத்தியாயம்

முன் அத்தியாயம் என்ற சொல்லினமைப்பை விளக்கியிருந்தேம்.  கள்ளமென்பொருள் அதை நீக்கிவிட்டது. 

இப்போது அதை மறுபார்வை இடுவோம்.

ஓர் அத்தியாயம் முடிந்தால் இன்னொன்று தொடங்குகிறது.  இருப்பினும் ஒரு நூலில் அத்தியாயங்கள் இயைந்தே இருக்கின்றன.

அற்று =  முடிந்து;

இயை = இணைவது.

அம் =  விகுதி.  இவ்விகுதி வேறுமொழிகளிலும் பரவி வாழ்கிறது.

அற்றியையம்

=  அத்தியாயம்.

அற்று என்பது அத்து என்று வருவது தமிழ்ப் பேச்சில்.

எ-டு:  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.

திரிபுகள் :   ற்ற > த்த

ல > ர.   இது வழக்கமான  திரிபு.

இத்திரிபுகள் பல சொற்களில் வந்துள்ளன.

சனி, 24 நவம்பர், 2018

போகாத இடந்தனிலே.......


வரவேண்டாம் என்`கின்ற கோவிலுக்குள்----- பெண்ணே

போகேனென்றே நீங்கிப்  போயின் என்ன?

தரமாட்டேன் பார்த்தருளை  என்னும்தெய்வம்---- கண்டு

தாரணியில் நீயும்பெறும் தண்மையாதோ?

 

வேறிடங்கள் கைதொழவே பெண்கட்குண்டே -----நங்காய்

வேண்டாத ஒண்தலத்துள் வீழ்தலென்னோ?

கூறிடமோ பெண்மைநீங்கு தேவனென்றார் ---- அந்தக்

கூற்றினுக்கும்  ஓர்மதிப்புக் கூர்ந்தாலென்னோ?

 

போராடிப் புண்பட்டு மீறிச்சென்று  ----- ஆங்கும்

புண்ணியங்கள் மேல்வருதல் எண்ணலாமோ?

வேரோடிப் போய்விட்ட உள்ளமைப்பை----முட்டி

வெற்றியொன்றும் சேர்வதிலை மெள்ளப்பாரே.
 
யாப்பியற் குறிப்புகள்:
இந்தச் சிந்து கவியில் ஓரடிக்கு மூன்று சீர்களும்  முதலடியும் மூன்றாம் அடியும் தனிச்சொற்களும் பெற்று வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. சில சீர்கள் நாலசைச் சீர்களாக வந்துள்ளன.  பொதுவொரு நாலசையே என்று காரிகை சொல்வதாலும் பண்டித ந,மு வேங்கடசாமி நாட்டார் முதலியோர் நாலசைச்சீர்களும் வரும் என்பதாலும் இதனுண்மை உணர்க. இப்பாடல் ஒரு பெண்ணை முன்னிலைப் படுத்தியுள்ளது, 
என்னோ என்பதில் ஓ அசை.
 

வியாழன், 22 நவம்பர், 2018

பிளவர் என்ற ஆங்கிலச் சொல் பிளவு அர்

ஆங்கிலத்தில் பூ என்பதற்கு ஃபிளவர் என்பர்.  இது இலத்தீன் மொழியிலிருந்து ஏனை ஐரோப்பிய மொழிகட்குக் கிடைத்த சொல்.

மற்ற ஐரோப்பிய மொழிகளில் இது பலவாறாகத் திரியும். அவை:

Fleur, Floor, Florina, Fleurette, Floortje Fleur, Flore, Florine, Fleurette, Florette  Flora Flóra  Fiore, Fiorella, Flora Italian Florina  Florinda  Flora   Florina  Florina, Florinda Fflur
என்பனவாம்.

பிளவர் என்பது தமிழ் என்று சொல்ல முந்தவில்லை.

ஒரு மொட்டு என்ற மூடிய பூக்காதது, பிளந்து தன் இதழ்களை விரிக்கிறது. இதனை மொட்டு வெடித்தது என்றும் ஒரு கவிஞன் எழுதியதுண்டு. பிளந்தது என்பதும் அதுவானாலும் இச்சொல்லைப் பெரிதும் நாம் பூ மலர்ச்சிக்குப் பயன்படுத்துவதில்லை என்றாலும் அதையும்  கவிதையில் பயன்படுத்துவது எளிதேயாகும். 

பிள > பிளவு > பிளவர். 

பொருளை நோக்க இது ஒரு நெருக்கமான சொல்லே.

பிளந்த என்ற எச்சமும் பிளரிந்த என்ற ஐரோப்பியச்சொல்லும் நெருக்கமுடையவையே ஆகும்.

இதனை மேலும் ஆய்வு செய்யலாம்.