சனி, 15 செப்டம்பர், 2018

கைகேயி

கைகேயி பற்றி ஓர் இடுகையில் முன்னர் விளக்கியிருந்தோம்.  அது இப்போது இவ்வலைப்பூவில் கிட்டவில்லை. பழைய எம்கையெழுத்துப் படியிலும் நெளிபொதிவு வட்டுக்களிலும் உள்ளது.  நன்`கு சிந்தித்து எழுதியது ஆதலின் அதனை மறுபார்வை செய்யாமலே மனத்தினின்று மீட்டு இங்கு எழுதுகின்றோம்.

கைகேயி என்பவள் இராமாயணத்தில் வரும் ஒரு கதைப்பாத்திரம். தசரதனின் மனைவி. பரதன் என்ற பாத்திரத்தின் தாய்.

கை என்பது தமிழ்ச்சொல்.   தோளிலிருந்து தொடரும் இரு உறுப்புகள். கரம் என்பது மற்றொரு சொல்.

கேசம் என்பது முடி. இங்கு தலைமுடி.  கேசி முடியை உடையவள். இது கேயி என்றும் திரியும்.  சகர யகர ஒலிமாற்றம்.

கைவரை நீண்ட முடி உடையவள். முடியழகி.

கேகய நாடு என்று ஒரு நாடு சொல்லப்படுகிறது.  கேகய நாட்டினள் "கைகேயி"
என்றும் சொல்லமைப்பைத்  தருவர். கேகய நாடு என்பது கைவரை முடியுடைய பெண்ணின் பிறந்த ஊர் என்றும் விரிப்புறலாம். இராமாயணப் பெயர்களில் பல இயற்பெயர்கள் அல்ல.  பத்து இரதங்களை உடையவன் தசரதன் என்பது ஓர் காரணப்பெயர்.

பேச்சில்:

1.   நீட்டமுடிக் காரி:    மறுபெயர்:  கைகேயி.

2   நீட்டமுடிக்காரியின் ஊர்:    மறுபெயர்:   கேகய.

பிற சுவையான திரிபுகள்:

கேரளம் - கைராளி.
சீலம் -  சைலம் > ஷைலஜா.  ஒழுக்கத்தின் உறைவிடமான அம்மன். ஒழுக்கமான வாழ்வில் தோன்றியவள்.

தமிழில்:

தைவருதல் -  தேய்த்தல்.   [ தேய் > தை.]  இது ஏகாரம் ஐகாரமாய்த் திரிதல்.
 இன்னும் பல திரிபுகள் உள்ளன;  அத்துணை எளிதல்ல.

தை >  தைத்தல்.

தைதல் என்ற தன்வினைச் சொல் இல்லை.(  தைகிறான், தைகிறாள் இன்ன பிற )  வழக்கிழந்தது.  இது நடந்தபின் அதைச் சரிசெய்ய தைவருதல் என்ற வினை தோன்றிற்று.  இது சங்க இலக்கியங்களில் கிட்டும் சொல். தைலம் என்ற சொல்லும் மிக்கப் பழையதே. அது சங்க இலக்கியத்தில் இல்லாவிட்டாலும் பழையதுதான். யாரும் எழுதிவைக்காத சொல்லெல்லாம் புதியது என்பது மடமையாகும்.  வீட்டில் தேய்க்கும் மருந்து அல்லது எண்ணெய்.  வீட்டுப் பேச்சில் வாழ்ந்து நம்மிடம் வந்துள்ளது.  தைலம் பற்றிய இடுகை காண்க.

வான்மீகி ஒரு சங்கப்புலவன் என்பது எம் முடிபு. பிறர் ஒப்புவதால் அல்லது ஒப்பவில்லை என்றால் ....................................................

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

அகம் பிரமஸ்மி

இவ்வுலகில் எத்தனையே உடல்கள் உயிருடன் உலவுகின்றன. இவற்றின் உயிர்கள் இறைவனை ஒப்பிடுங்கால் மிக்கச் சிற்றளவிலானவை. எல்லையற்றோன் இறைவன்  --  என்று எல்லா வேதங்களும் ஓதுகின்றன.

உடல் நமக்கு உள்ளது;  அதனுள் ஆன்மாவும் உள்ளது.  நாம் ஒவ்வொருவரும் நான் என்று தன்னைக் குறித்துக்கொள்ளும்போது  அந்த "நான் " எது?  உயிரா அல்லது உடலா?

நான் என்பது இவ்வுடலில்லை.  நான் வெளியேறிய பின் இவ்வுடல் அசைவற்று இயக்கமற்று விறகுபோல் கிடக்கும்.  அப்போது  அது எல்லா உணர்ச்சிகளையும் இழந்து கிடக்கும். உயிர் போய் விட்டதென்பார்கள். " நேரமாகிவிட்டது;  சீக்கிரம் தூக்குங்கள்" என்று பேசிக்கொள்வார்கள்.

குடம்பை தனித்தொழியப் புள் பறந்துவிட்டது என்று வள்ளுவனார் கூறியது இந்நிலைக்கு முற்றப் பொருந்துமொரு வாக்கியமாகும்.  அப்போது சிலர் துயர்தாங்காது அழுதுகொண்டிருப்பர். பட்டினத்தடிகள் சொன்னதுபோல இன்று செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணங்கள் அழுதுகொண்டிருக்கின்றன என்பதே முற்றுமுண்மை ஆகும்.

இக்குடம்பை தனித்தொழியப் பறந்துவிட்டதே அதுதான் ஆன்மாவாகும்.  நான் என்று நாமெல்லாம் குறித்துக்கொள்வது இவ்வுடலன்று; இவ் ஆன்மாவே யாகும்.

இவ்வுடல்பால் உள்ள பற்றினை முற்றும் அறுக்கவேண்டுமென்பதே பெரியோர் நமக்குரைப்பது ஆகும்.   தாயுமானவர் கூறியதற்கொப்ப  எல்லா மலங்களும் ஊறித் ததும்பும் மெய்யுடன் உங்கட்கு உள்ள தொடர்புதான் என்ன?
உங்கள் உடல்கள் நீங்கள் அல்ல.

ஒவ்வொருவரும் நான் இவ்வுடல் அன்று என்று உணர்வேண்டும். அகத்திருப்போன் உங்கள் பெருமான் ஆவான். அவன் ஆன்மாவுடன் ஒற்றுமை முற்றுடையோன்.  ஒரு பெருங்காந்தத்திலிருந்து தெறித்து விழுந்த துண்டு கவர்ந்துகொள்ளுமாற்றலும் உடையது.  அதுபோலவே.

நான் வேறு. இவ்வுடல் வேறு.  " அகம் பிரமஸ்மி".

நான் இவ்வுடல் என்பதோ அகங்கார மெனப்படும். இஃது பூதவுடல்.

பூத்தல் - தோன்றுதல்.  பூ+ து + அம் =  பூதம்.  (தோன்றியது).   தோன்றிய உடல் இறப்பது.  தோன்றாமை ஆன்மாவின் அழிவிலா உண்மை.

பூ -  பூத்தல் : தோன்றுதல்.  பூ+ம் + இ = பூமி:  தோன்றியது.  மகர ஒற்று ஓர் இணைப்பொலியாகும்.

யானே பிரம்மன். இவ்வுடல் வேறு.

வடகிழக்கு அசாமிலிருந்து கும்பகோணச் செலவு.

வடகிழக்கி      னின்று  தொடர்வண்டிப் பயணம்
விடமுடிந்த  தில்லை விழுநீட்சி  உடைத்தாம்
கடகடவென்  றோசை செவிகட்கே இனித்தாம்
கடவுளுந்தம் அன்பில் கனிபோலும் அளித்தார்.




  
திரு மோகன் ஐயப்ப குருசாமி அவர்கள் வடகிழக்கு மேகாலயா
அசாம்  ஷில்லோங்கிலிருந்து தென் திசைக் கும்பகோணம் பயணமானார்.
இப்பயணம் இயற்கை அழகை விரித்துணர்த்தியது.  பல கோவில்களைக்
காணச் செய்து இறும்பூது எய்துவித்தது. தம் இனிய பயணத்தை முடித்துக் கொண்டவர்களாய் அவரும் குழுவினரும் தென்னாடு மேவினர்.
இப்படத்தில் அவர்கள் பயணம் செய்துகொண்டிருப்பதைக் காணலாம்.






 உங்கள்  வடகிழக்கு இந்தியப் பயணம் எப்போது?

பயணமும் மகிழ்ச்சி தரும்.....

அடிக்குறிப்புகள்

தொடர்வண்டி -  கோத்திழுவை வண்டி  ( ட்ரெய்ன்)
இனித்தாம் -  இது முன்னும் பின்னும் வரும் அடிகளில் இறுதிச் சீர்களின் இயைபு கருதி "வலிக்கும்வழி வலித்தல்" என்னும் உத்தி பின்பற்றி வல்லெழுத்து மிகுக்கப்பட்டது. இவ்வுத்தி தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டது காண்க.
=  இனிதாம்.
உடைத்தாம் = உடையதாம்.