திங்கள், 28 மே, 2018

மகர வகர ஒலியுறவும் திரிபுகளும். சிறு கண்ணோட்டம்

மகரமும் வகரமும் ஒலியுறவு உடைய எழுத்துக்கள். நாம் கவிதை எழுதும்போது  முதலடியை மகரத்தில் தொடங்கி அடுத்த அடி தொடங்குவதற்கு  மகரத் தொடக்கமான இன்னொரு சொல்லைத் தேடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மகரத்தில் கிட்டவில்லையானால் வகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லுடன் இரண்டாவது அடியைத் தொடங்கலாம். மோனை வந்ததுபோலவே கேட்போருக்குத் தோன்றுமளவுக்கு இவ்வெழுத்துக்களுக்கு ஒலியுறவு இருக்கின்றது.

இம்முறை சொல்லமைப்பிலும் வந்துள்ளது.

வினவுதல்  -     மினவுதல்.   (பொருள் ஒன்றுதான்.)
விஞ்சுதல்   -     மிஞ்சுதல்.

இதன் தொடர்பில் விரட்டுதல் -  மிரட்டுதல் என்பது கவனிக்கத்தக்கது.

மிரட்டுதல் என்பது அச்சுறுத்துதல் என்ற பொருளிலே மக்களிடை அறியப்பட்டுள்ளது.   விரட்டுதல் என்பது ஓடும்படி செய்தலைக் குறிக்குமென்று நாமறிவோம்.  எனினும் இச்சொல்லுக்கு அச்சுறுத்துதல் என்ற பொருளும் உள்ளது.   ஆகவே  அந்நிலையில்  மிரட்டுதல் என்பது விரட்டுதலுக்கு ஒப்பாகிறது.

எனவே:

விரட்டுதல் -  மிரட்டுதல்.

இதற்குக் காரணம் விலங்குகளை அச்சுறுத்தியே ஓடச்செய்ய இயலும் என்பதாக
 இருத்தல் தெளிவு.

மிகுதியே  பின் விகுதி என்று திரிந்தது என்பது நாம்  முன் இடுகைகளில்
கூறியதாகும்..மி -  வி.  மிகுதி > விகுதி,


அடிக்குறிப்பு:

-------------------------------------------------

1.மால்வரை ஒழுகிய  வாழை வாழை   (   மா -  வா  )  மோனை.
சிறுபாணாற்றுப்படை.   21.

2.  -நாவொலியிலும்  வானம் என்பது மானம் என்றே வரும்.
மானம் மழை வந்தால்தானே இங்கே பயிர் விளையும் என்பர்.

மானாமாரி >  வானாமாரி என்பதும் காண்க.

3  வல் -  தமிழ்ச்சொல்.  பொருள்:  வலிமை.   மல்   வலிமை.
வல் = மல் .   வல்லன் -  மல்லன்.   வல்  + அன்  = வல்லன்  > வலன் .
வகர மகர மோனைத் திரிபு.

வல்  என்பது பல் என்றும் திரியும்.   வலம் > பலம் , (வலிமை ).

ஞாயிறு, 27 மே, 2018

விண் -- என்றுமுள்ளது இருள்.

விண் என்பதே  ஆகாயம்.  இதைப் பண்டைத் தமிழர் ஆ என்ற முன்னொட்டு இன்றிக் காயமென்றனர். இதற்குக் காரணம் எல்லோன் என்னும் சூரியன் முதல் உடுக்களுடன் நிலவுவரை  விண்ணில் காய்பவை.  காய்தல் என்றால் சூட்டில் நீர்வற்றுதல் மட்டுமன்று,  ஒளி வீசுதலும் ஆகும்.  ஒளி வீசுதலின் அது காயமெனப்பட்டது.  அது பின் காசம் என்று திரிந்தது.   இது யகர சகரத் திரிபு. இத்தகைய யகர சகரத் திரிபு தமிழில்மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணலாகும்.  புறத்தே காய்தலே  புறக் காயம் > புறக்காசம் > பிறகாசம் என்று திரிந்தது.  இன்னும் மெருகேற்றப்பட்டு பிரகாஷ் ஆனது.

விண் என்பதே திரிந்து விஷ்ணு ஆனது.  இன்றும் நீலவண்ணன், மேகவண்ணன் என்றெல்லாம் ஏத்தி ஓதப்படும் விஷ்ணு  நிறத்தால் கருமையே. எல்லும் மதியும் தோன்றாக் காலத்து விண் கருமையே.  ஆகவே இயற்கையில் கருமையே நிறமாகும். வெண்மை என்பது பகலோன் வந்து தரும் நிறமாகும். கருமையை நீலமென்பதும் பெருவழக்கு.

இருளே இயற்கையில் காணக்கிடக்கும் நிறமாதலின் நம் தெய்வங்கள் பலவும் கருமை நிறமே தம் நிறமாய்க் கொண்டன.  நம் பண்டைக் கடவுட் கொள்கையில் தெய்வங்கள் இயற்கை நிறத்தில் தோன்றுமாறு நம் முன்னோர் கவனித்துக்கொண்டனர்.

கருமை விலகத் தோன்றும் ஒளி சிவமாகும்.  சிவமெனின் செவ்வொளி.  செம்மையைச் சே என்ற ஓரெழுத்துச் சொல் உணர்த்தும். சேவடி எனின் செவ்வடி அல்லது சிவந்த அடிகள்.  சேயோன் என்பது சிவப்பு நிறத்தன் என்றும் மாயோன் என்பது கருப்பு நிறத்தன் என்று பொருள்படும்.  மா என்பது கருப்பு ஆகும்.

நமது அடிப்படைத் தேவு அல்லது தெய்வங்கள் சிவப்பும் கருப்புமாம்.

இது இயற்கை வண்ணம் பிறழாமை ஆகும்.

என்றும் இருப்பது இருள். அது ஒளி தோன்றுங்கால் விலகும்.

இருப்பது இருள். அடிப்படை.

இரு+ உள்  =  இருள் ஆகும்.  உள் என்பது தொழிற்பெயர் விகுதி.

கட > கடவுள் என்றது போலும்.

ஒட்டுதல் என்ற சொல்லின் அடி ஒள்.  அதனோடு ஒள்+ து  =  ஒட்டு என்று இணைத்து வினையானது.   ஒளி என்பது இருளொடு ஒட்டுகின்றபோது இருள் விலகி நிற்பதை உணர்வீர்.  ஆக ஒள் என்பது  பின்வந்து ஒட்டிய நிலையைத் தெரியக்காட்டும்.  இதுபின் வெளிச்சத்தையும் குறித்தது.

ஒள் >  ஒடு;  ஒள் > ஒட்டு.  ஒட்டு> ஒட்டுதல்.
இருளென்னும் அடிப்படைமேல்  வெளிச்சம் என்னும் ஒளி ஒட்டப்படுகிறது,
ஒளி மேல் ஒட்டு ஆக, இருள் உள் இருப்பதாகி  இரு+ உள்  ஆயிற்று.

இருளும் ஒளியுமே உலகு ஆகும்.  அவையே  இறைமையின் வெளிப்பாடுகள்.  

சொல்: மோகம் (மோகத்தைக் கொன்றுவிடு!)

மோகனம் என்பது இராகத்தின் பெயராகவும் இருக்கிறது.  மோகன் மோகனா என்ற பெயருள்ளவர்களும் பலருள்ளனர்.   மோகனம் என்ற பெயருள்ளவர்கூட சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியுள்ளார். மோகம் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் உள்ள சொல்;  மற்றும் பாடல்களில் எதிர்கொள்வதுதான்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.

மோகத்தைக் கொன்றுவிடு ==== அல்லால் நீ என்
 மூச்சே நின்றுவிடு

என்று பாரதியார் பாடவில்லை. அவர் பாடியது வேறுமாதிரி.



பழைய நூல்களில் மோப்பு என்ற சொல் கிடைக்கிறது.  இச்சொல்லில் பு என்பது விகுதியாதலின் மோ என்பதே பகுதி என்று தமிழாசிரியர்கள் கருதியுள்ளமைக்கு  ஆதாரம் உள்ளது.  மோகம் என்ற சொல்லுக்கும் மோ என்பதே பகுதியாகும்,  மோப்பாகினேன் என்றால் மோகம் கொண்டேன்,  காதல் கொண்டேன் என்று பொருள்.

காதல்வயப்பட்டுத் திரியும் பெண்ணுக்கு "மோப்பி"  என்றும் சொல்வர். இஃது கைப்பெண்களுக்குப் பயன்படுத்தப்படும்  சொல்லாகும்.  இச்சொல்லும் தொடர்புடையதே  ஆகும்.

மோகம்:   இது தமிழ்ச்சொல்லென்று அறிந்து மகிழ்வீர்.  வகையில் இது திரிசொல் ஆகும். வாசனைபிடித்தல் என்னும் பொருளினின்று திரிந்து காதல் என்ற பொருளுக்குச் சென்றுவிட்டபடியால் திரிசொல் ஆவது இது.

மோகினி என்பது மோயினி என்றும் திரியும்.

பிழைகள் தோன்றின் பின் திருத்தம்பெறும்.