ஞாயிறு, 27 மே, 2018

விண் -- என்றுமுள்ளது இருள்.

விண் என்பதே  ஆகாயம்.  இதைப் பண்டைத் தமிழர் ஆ என்ற முன்னொட்டு இன்றிக் காயமென்றனர். இதற்குக் காரணம் எல்லோன் என்னும் சூரியன் முதல் உடுக்களுடன் நிலவுவரை  விண்ணில் காய்பவை.  காய்தல் என்றால் சூட்டில் நீர்வற்றுதல் மட்டுமன்று,  ஒளி வீசுதலும் ஆகும்.  ஒளி வீசுதலின் அது காயமெனப்பட்டது.  அது பின் காசம் என்று திரிந்தது.   இது யகர சகரத் திரிபு. இத்தகைய யகர சகரத் திரிபு தமிழில்மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணலாகும்.  புறத்தே காய்தலே  புறக் காயம் > புறக்காசம் > பிறகாசம் என்று திரிந்தது.  இன்னும் மெருகேற்றப்பட்டு பிரகாஷ் ஆனது.

விண் என்பதே திரிந்து விஷ்ணு ஆனது.  இன்றும் நீலவண்ணன், மேகவண்ணன் என்றெல்லாம் ஏத்தி ஓதப்படும் விஷ்ணு  நிறத்தால் கருமையே. எல்லும் மதியும் தோன்றாக் காலத்து விண் கருமையே.  ஆகவே இயற்கையில் கருமையே நிறமாகும். வெண்மை என்பது பகலோன் வந்து தரும் நிறமாகும். கருமையை நீலமென்பதும் பெருவழக்கு.

இருளே இயற்கையில் காணக்கிடக்கும் நிறமாதலின் நம் தெய்வங்கள் பலவும் கருமை நிறமே தம் நிறமாய்க் கொண்டன.  நம் பண்டைக் கடவுட் கொள்கையில் தெய்வங்கள் இயற்கை நிறத்தில் தோன்றுமாறு நம் முன்னோர் கவனித்துக்கொண்டனர்.

கருமை விலகத் தோன்றும் ஒளி சிவமாகும்.  சிவமெனின் செவ்வொளி.  செம்மையைச் சே என்ற ஓரெழுத்துச் சொல் உணர்த்தும். சேவடி எனின் செவ்வடி அல்லது சிவந்த அடிகள்.  சேயோன் என்பது சிவப்பு நிறத்தன் என்றும் மாயோன் என்பது கருப்பு நிறத்தன் என்று பொருள்படும்.  மா என்பது கருப்பு ஆகும்.

நமது அடிப்படைத் தேவு அல்லது தெய்வங்கள் சிவப்பும் கருப்புமாம்.

இது இயற்கை வண்ணம் பிறழாமை ஆகும்.

என்றும் இருப்பது இருள். அது ஒளி தோன்றுங்கால் விலகும்.

இருப்பது இருள். அடிப்படை.

இரு+ உள்  =  இருள் ஆகும்.  உள் என்பது தொழிற்பெயர் விகுதி.

கட > கடவுள் என்றது போலும்.

ஒட்டுதல் என்ற சொல்லின் அடி ஒள்.  அதனோடு ஒள்+ து  =  ஒட்டு என்று இணைத்து வினையானது.   ஒளி என்பது இருளொடு ஒட்டுகின்றபோது இருள் விலகி நிற்பதை உணர்வீர்.  ஆக ஒள் என்பது  பின்வந்து ஒட்டிய நிலையைத் தெரியக்காட்டும்.  இதுபின் வெளிச்சத்தையும் குறித்தது.

ஒள் >  ஒடு;  ஒள் > ஒட்டு.  ஒட்டு> ஒட்டுதல்.
இருளென்னும் அடிப்படைமேல்  வெளிச்சம் என்னும் ஒளி ஒட்டப்படுகிறது,
ஒளி மேல் ஒட்டு ஆக, இருள் உள் இருப்பதாகி  இரு+ உள்  ஆயிற்று.

இருளும் ஒளியுமே உலகு ஆகும்.  அவையே  இறைமையின் வெளிப்பாடுகள்.  

சொல்: மோகம் (மோகத்தைக் கொன்றுவிடு!)

மோகனம் என்பது இராகத்தின் பெயராகவும் இருக்கிறது.  மோகன் மோகனா என்ற பெயருள்ளவர்களும் பலருள்ளனர்.   மோகனம் என்ற பெயருள்ளவர்கூட சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியுள்ளார். மோகம் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் உள்ள சொல்;  மற்றும் பாடல்களில் எதிர்கொள்வதுதான்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.

மோகத்தைக் கொன்றுவிடு ==== அல்லால் நீ என்
 மூச்சே நின்றுவிடு

என்று பாரதியார் பாடவில்லை. அவர் பாடியது வேறுமாதிரி.



பழைய நூல்களில் மோப்பு என்ற சொல் கிடைக்கிறது.  இச்சொல்லில் பு என்பது விகுதியாதலின் மோ என்பதே பகுதி என்று தமிழாசிரியர்கள் கருதியுள்ளமைக்கு  ஆதாரம் உள்ளது.  மோகம் என்ற சொல்லுக்கும் மோ என்பதே பகுதியாகும்,  மோப்பாகினேன் என்றால் மோகம் கொண்டேன்,  காதல் கொண்டேன் என்று பொருள்.

காதல்வயப்பட்டுத் திரியும் பெண்ணுக்கு "மோப்பி"  என்றும் சொல்வர். இஃது கைப்பெண்களுக்குப் பயன்படுத்தப்படும்  சொல்லாகும்.  இச்சொல்லும் தொடர்புடையதே  ஆகும்.

மோகம்:   இது தமிழ்ச்சொல்லென்று அறிந்து மகிழ்வீர்.  வகையில் இது திரிசொல் ஆகும். வாசனைபிடித்தல் என்னும் பொருளினின்று திரிந்து காதல் என்ற பொருளுக்குச் சென்றுவிட்டபடியால் திரிசொல் ஆவது இது.

மோகினி என்பது மோயினி என்றும் திரியும்.

பிழைகள் தோன்றின் பின் திருத்தம்பெறும்.

சனி, 26 மே, 2018

சேகரித்தல் சேமி இரு; பாயிரம் ஆயிரம் : விளக்கம்

சேகரித்தல் என்பதொ ஒரு பேச்சு வழக்குச் சொல்.  தொல்காப்பிய முனிவர் தம் ஒப்பரிய இலக்கணத்தைத் தமிழ் மொழிக்கு இயற்றிய காலத்திலே  எழுதப்பெற்றிருந்த  ஓலைச்சுவடி நூல்களையும் வழக்கையும் ஆராய்ந்து பின்னர் தொடங்கியதாகவே பாயிரம் கூறுகிறது.

பா என்னும் பாட்டினால் இயற்றப்பட்டது.  நூலின் முனனே முதல் பாடலாக அல்லது தொடக்கப்பாட்டாக வைக்கப்பட்டது. நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூறுவது. இது நாம் சுருக்கமாகக் கூறுவது ஆகும். பாயிரம் - சொல் எப்படி அமைந்தது?   

பா =  -பாட்டு.
இரு =  நூலில் முன்னிருக்க வைக்கப்படுவது.
அம் =  விகுதி.

பா+  இரு + அம் =  பாயிரம்.

இப்படி இரு என்ற பலபொருட் சொல் பல சொற்களில் தோன்றுவதை முன்னர் விளக்கியுள்ளேன்.  எடுத்துக்காட்டாக  ஆயிரம் என்ற சொல்:

ஆ =   மிகுந்த.  கூடுதலான.    ஒன்று ஆகப் பெரியது என்றால் மிகவும் பெரியது என்று சொல்வதான பேச்சுவழக்க்

இரு =  பெரிய.

இருள்சேர் இருவினை என்ற குறள் தொடரில் இரு என்பது பெரிய என்று பொருடரும்.  ஈண்டும் அஃதே பொருளாம்.

அம் = இறுதிநிலை அல்லது விகுதி.

எல்லம் கூட்டினால்:  ஆ+  இரு+ அம் =  ஆயிரம்.  அப்போது அது ஆகப் பெரிய எண்.  இப்போது சிறியதே.  மலேசியாவில் மூன்று டிரில்லியன்  அரசுப் பணம் கொள்ளை போய்விட்டதென் கிறார்கள்.  ஆயிரம் இன்று பெரிதன்று.  சொல்லமைப்பில் அது பெரிது. இன்றைச் சுற்றமைப்பில் குட்டிதான்.

இரு என்பதுபோலும் சொற்கள் சொல்லமைப்பில் பயன்பட்டுள்ளன.

சில சொற்கள் நெல்வயல்களில் உழைத்தோரால் உருவாக்கப்பட்டவை.
அவற்றுள் சேமித்தல் சேகரித்தல் என்பவை கவனிக்கத்தக்க மேன்மை உடையவை.

சேர் + மி =  சேர்மித்தல்.  

இது வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல்  உருவாக்கும் பொதுமக்களின் திறமை. சொல்லிக்கொடுத்ததை மட்டும் படித்த புலவனுக்குப்
புரியாத திறமை.  இது மொழிக்கு உதவியுள்ளது.

தமிழ் என்பது மக்கள் மொழி.

சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று வீழ்ந்து சேமித்தல் என்றானது.  சேர்த்தலும் சேமித்தலும் ஒன்றானாலும் நுண்பொருள் வேறுபாடு உடையவை.  சேமிப்பு வங்கி என்னும்போது இச்சொல் நன் கு பயன்படுகிறது.  சேர்ப்பு வங்கி என்றால் சிறக்கவில்லை.

சேகரித்தல்:   இது சேர் + கு + அரி  + தல்.

இங்கும் ரகர ஒற்று வீழும்.  முதற்சொல் சே என்று ஆகும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல். இங்கு சொல்லிடைநிலையாகப் பயன்பட்டது.

அரித்தலாவது  தன்னருகில் வரும்படியாக இழுத்தல்.  அருகு > அரு> அரி.
இதில் குவிகுதி வினையாக்கச் சொல்லமைப்பு.  இந்தக் கு தேவையில்லை.  ஆகவே  அரு என்பதை மட்டும் கொண்டு, ஓர் இ வினையாக்க விகுதி சேர்த்து
அரி என்ற சொல் படைக்கப்பட்டது.  அரு  இ!   என்றால் பக்கத்தில் வா என்று வாக்கியமாகும் .

சேகரி என்பதில் இந்த   அரி பயன்பட்டது.

இன்னொரு நாள் சந்திப்போம்.