தென் திசையிலிருந்து வீசும் காற்று தென்றல் எனப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டத்திலுள்ளோர்க்கு மிகுந்த இன்பம் விளைவிப்பது என்பது பல பாடல்கள் உரைகளிலிருந்து நாம் தெரிந்துகொண்டது ஆகும். தென்றல் என்பதற்கு நேரான சொல் ஆங்கிலத்திலோ மலாய்மொழியிலோ இல்லை. ஆனால் இனிய காற்றின் வீசுதலைக் குறிக்கும் வேறு சொற்கள் பிறமொழிகளில் இருக்கும். தட்பவெப்ப்ப நிலையும் காற்று போம் திசையும் புவியின் எல்லா இடங்களிலும் வேறுபடுகின்றன. இதேபோல் சீனாவில் வீசும் காற்று வகைகளுக்கு உள்ள பெயர் தமிழில் இல்லை.
தென்றல் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதானால் த சதர்ன் ப்ரீஸ் ஃபரம் த சௌத் வெஸ்ட் மன்சூன் இன் ஜூன் - செப்டம்பர் பீரியட் ( the southern breeze from the south west monsoon in June - September period )என்று சொன்னால்தான் பொருந்துவதாகத் தெரிகிறது.
இதேபோல வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை எனப்படுகிறது. இச்சொல் அமைந்தது எப்படி?
வட > வடக்கு.
வட > வட+ ஐ = வாடை.
இந்த வாடை என்னும் சொல்லானது முதனிலை திரிந்து - அதாவது பல சொற்களில்போல நீண்டு - ஐ என்னும் விகுதி பெற்று "வாடை" என்றாகி இருக்கிறது. இறுதி அகரம் கெட்டது. இறுதியில் நிற்கும் எந்த உயிரெழுத்தும் கெடும் அல்லது மறையும். ( எ - டு : படி + அம் = பாடம் , அறு + அம் = அறம் )( இங்கு இ உ முதலிய உயிர்கள் மறைந்தன ) . அப்படிக் கெடாமல் இருக்குமாயின் வடவை, வடயை, வாடவை, வாடயை என்று எதாவது பொருத்தமான ஒன்று வந்திருக்க் வேண்டும். அவை எதுவும் பொருந்தாமையினால் வாடை என்ற அகரம் ஒழிந்தமைந்த சொல்லே மொழியில் வழங்குவதாயிற்று. உடம்படு மெய்கள் ( யகர வகரங்கள் ) எவையுமின்றி நீண்டமைந்து நன் `கு உருவெடுத்துள்ளது.
ஆனால் வாடை என்பது வடக்குக் காற்றை மட்டும் குறிப்பதாக இல்லை. அது ஒரு கெட்ட வீச்சத்தையும் வழக்கில் குறிக்கிறது. அது வடக்கு என்னும் சொல்லிலிருந்து வந்த சொல் அன்று. அது அமைந்தது பின்வருமாறு.
வாடிப்போன இலை தழைகள் நீரில் நனைந்து அழுகத் தொடங்கிவிட்டால் அது ஒருவித வீச்சத்தை உண்டுபண்ணுகிறது.
வாடுதல். ( சற்றே நீர் வற்றிப் போவது ).
வாடு : கருவாடு: மீன் காய்ந்து வாடி உப்பிட்ட உணவு. சிலர் உண்பர்.
( இது முதற்குறைச் சொல்).
வாடு + ஐ = வாடை.
நீர் வற்றிய - காய்ந்த மரம் செடி கொடி விலங்குடல்கள் எழுப்பும் வீச்சம்.
வாடை என்ற வடக்குக் காற்று வேறு.
வாடை என்ற வீச்சம் வேறு.
இருவேறு தோற்றத்தின ஆகும்.