சனி, 14 ஏப்ரல், 2018

பதுமை

பதுமை என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பொம்மை என்ற சொல்லைப்பற்றி முன்பு ஓர் இடுகையில்
விளக்கியுள்ளோம்.

பதுமை :  இச்சொல் பதுக்கு, பதுங்கு, பதுக்கம், பதுக்கை, பதுங்கல்,
என்னும் தமிழ்ச்சொற்களுடன் தொடர்புடையது.

இவற்றின் அடிச்சொல் "பது"  என்பது.

பத்ததி, பத்தி,  பத்தாயம்,  பத்தியம்,  பந்தல்.  என்பனவும்
தொடர்பு காட்டும் சொற்கள்.

பம்மல் என்ற தொழிற்பெயர், கவித்தல் மூடுதல் என்றும்
பொருள்தரும்.

இவற்றுள் எளிதான ஒரு சொல்லிலிருந்து புறப்படுவோம்.

பழங்காலத்தில் நெகிழிப் பொம்மைகள் கிடையா..  பஞ்சை
உள்ளிட்டுத் துணியால் தைத்து   மூடியே பதுமைகள்
செய்யப்பட்டன.  பஞ்சு துணிக்குள் பதுங்கி நின்றது.

பதுங்குதலாவது உள்ளமைதல். புலி பதுங்குதல்
பூனை பதுங்குதல் திருடன் பதுங்குதல் முதலியவற்றால்
ஏற்பட்ட  செயல்சார் பொருளழகினை விடுத்து அடிப்படை
உள்ளமைதலினை உன்னுதல் வேண்டும் .

பது என்ற அடிச்சொல்லே  பதி என்று திரிந்தது.
பெண்வழிக் குடும்ப நிலை ஓங்கியிருந்த காலத்தில்
பெண்ணை மணந்துகொண்டு பெண் வீட்டிலே
பதிந்து வாழ்ந்த மாப்பிள்ளை பதியெனப்பட்டான்.
தம்பதி என்ற சொல் தமக்குள் ஒருவருக்கொருவர்
பதிந்து வாழ்ந்த நிலையைக் குறித்தது. பதிதலாவது
அகத்திருந்து வாழ்தல். தளத்தில் பதிந்து படைகளைக்
கவனித்தவன் தளபதி.

பதுமை > பதுமல் (பது+ம்+அல்) > பம்மல்.

பம்முதல் என்பதும் வினைச்சொல்.

(பதுமை )< (பதுமு ) > பம்மு .> பம்மை > பொம்மை .

பொதியப்பட்டது  பொய்.

பொய்ம்மெய் > பொம்மை என்பதும் அது. பொய்
என்ற சொல்லின் அமைப்பை விளக்குங்கால் இது
தெளியும். 


ஏனைச்சொற்களைப் பின்பு  அறிவோம்.
அவற்றுள் விளக்குதலுக்குரியவை சில உள.

பம்ப்  pump  என்ற ஆங்கிலச் சொல்லைக் கவனிக்கவும்.
அங்கு காற்று அன்றோ பதுங்கி உள்ளிருக்கிறது.
பம்முதல் என்ற சொல்லைக் கருதவும்,

பதுமை என்பது மட்டும் அறிந்து பின்வரும் பிறவற்றுக்கு
எதிர்நோக்குக . 

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தலைவர் சொல்லைத் தட்டலாம் - நன்மையானால்

ஒரு பெரிய சமயத் தலைவர் இருந்தார்.  இவரைப்
பின்பற்றிச் சென்றுசொண்டிருந்த சீடர்கள் அல்லது
அடியார்கள் பலர் கூடவே இருந்தனர்.  தமக்கு உடம்பு
அவ்வளவு சிறந்த நிலையில் இல்லை என்று
கவலையுடன் இருந்த இவர்,  தாம் இறந்தபின்
தம்மை எப்படி அனுப்பிவைப்பது என்பதைப் பற்றிச்
சீடர்களுக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இவர்தம் அடியார்கள் அவற்றை மிகக் கவனமுடன்
உள்வாங்கிக் கொண்டனர்.

இவருக்கு முன்னிருந்து மறைந்த தலைவர்களின்
சடலங்களெல்லாம் நன்`கு  பாடம் செய்யப்பட்டு,
கெட்டுப் போகாமல் வைக்கப்பட் டிருந்தன , ஆதலால்
இவர் அருகிலிருந்த அடியார்கள்: " கவலை வேண்டாம்,
உங்கள் உடலையும் அப்படியே பாடம் பண்ணி
வைத்துவிடுகிறோம்" என்றனர். இவருக்கோ
மனநிறைவு ஏற்படவில்லை. "அழிய வேண்டிய
உடலை எதற்குப் பாடம் செய்து வைத்துக்கொண்டு
இருக்கவேண்டும்,  மேலும்  பாடம் பண்ணுகிற
வர்கள் பல உள்ளுறுப்புகளையும் அகற்றிவிடு
வார்கள்;  அவர்கள் கைகளும் என் உடல்மீது
புரண்டு என் உடலை மாசுபடுத்திவிடும்" என்று
கூறிவிட்டு,  "வேண்டாம், வெறும் வாசனை
முதலியவற்றைத் தெளித்து நேரம் வந்ததும்
புதைத்துவிடுங்கள்"  என்று சொல்லிவிட்டார்.

சிறிது காலம் சென்றபின் இவர் மறைந்துவிட்டார்.
இவருடைய அடியார்கள் இவர் சொன்னதை
மீறமுடியாமல் உடலைப் பாதுகாக்கும் பாடம்
பண்ணுதலை விடுத்து  நல்ல மணப்பொருள்களைத்
தெளித்துப் புதைப்பதற்குத் தயார்ப்படுத்தினர்.

பலருக்கும் அருள் வழங்கிய வள்ளல் ஆதலால்
இவர் உடல் கெட்டுப்போகாது என்று எதிர்பார்த்தனர்
அடியார்கள்.  இவரைப் புதைப்பதற்கு ஒரு வாரம்
ஆகிவிட்டது. அந்த நாட்டு அரசர் மற்றும்
அதிகாரிகள் உட்படப் பலர் வந்து குழுமினர்.
இவர் கிடத்திவைக்கப்பட்டிருந்தார்.  அவர்கள்
நோக்கும்போது உடல் சிறிது அழுகிவருவது
போல் அவர்களுக்குத் தோன்றியது. இவர்தம்
உடலும் ஊதிப்பெருத்துவிட்டது. சீக்கிரம்
எடுக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன்படியே இவர் சடலம் புதைக்கப்பட்டு
இடம் தூய்மைப்படுத்தப்பட்டது.

தம் தலைவர் ஒரு விதத் தலைத்  தடுமாற்றத்தில்
சொல்லியதை அப்பால் வைத்துவிட்டு சரியானது
எது என்று எண்ணிச் செய்யாமையால் அங்கு
குழப்பம் நேர்ந்துவிட்டது.  யார் எதைச் சொல்லிச்
சென்றிருந்தாலும்  அது ஒத்துவராது என்று
தெரிந்துவிட்டால் அதைத் திருந்தச் செய்வதே
சரியாகும்.   பிணம் பதம் செய்வோர் கைகள்
பட்டால் தம் உடலுக்குக் கேடு என்று சொல்லி
விட்டார் என்பதற்காக அதை நாறவைத்துக்
கொண்டுசென்று புதைப்பது எப்படியும்
பொருத்தமற்றது அன்றோ?

பாடம் பண்ணுவோர் கைபட்டிருந்தால் பிணம்
கெட்டுப்போகாமல் நிகழ்ச்சி நன்றாகவே
நிறைவேறியிருக்கும். இந்த வேலைகளில்
ஈடுபடும் வல்லுநர்கள் உண்மையில் தங்கள்
தொழிலின்மூலம் ஒரு மாபெரும் சேவையைச்
செய்துவருகின்றனர்.

இது ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெற்ற      ஒரு
நிகழ்வு ஆகும்.

திருத்தம் பின்

வியாழன், 12 ஏப்ரல், 2018

இட்டமும் இச்சையும்.

இட்டம் இச்சை என்ற இருசொற்களையும் இன்று
ஒப்பாய்வு செய்வோம், உள்ளம் மகிழ்வோம்.

இட்டம் என்பதும் இச்சை என்பதும் முன் இடுகை
களில் விளக்கப்பட்டன. ஒப்பாய்வில் இரண்டையும்
ஓரளவு  சுட்டுவதும் சீரியைவு காட்டுவதும்
தேவையாகின்றன.

இரண்டுக்கும் அடிச்சொல் இடு என்பதே.

(  இடு )  >  இடு+ அம் =  இட்டம்.

ஆசைப்பட்ட மனத்தை எங்காவது இட்டுவிட்டால்,
இட்டது இட்டமாகிறது.  இடு+ அம் = இட்டம்.
மனத்தை இடாதவிடத்து இட்டமில்லை.

இட்டம் என்பது ஈடுபாடு. மனம் விரும்பிய
ஈடுபாடு.   இந்த ஈடுபாடு என்பதிலும் அடிச்சொல்
இடு என்பதுதான்.  இடு> ஈடு. முதனிலை நீண்ட
தொழிற்பெயர்.

படு > பாடு என்பதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
அதுவும் முதனிலை திரிந்து பெயரானது.

இனி இச்சை என்பதைக் காண்போம்.

இச்சையும் மனம் இடுவதே ஆகும்.

இடு > இடு+சை > இடுச்சை.

இதில் டுகரம் விலக்கி, இச்சை ஆகிவிடும்.

இடு இழு என்பன டகர ழகரப் பரிமாற்றம்.
பாழை > பாடை என்பதுபோல.
வாழகை > வாடகை போல.  வாழ்கூலி என்பதே
வாழகை.
இடுச்சை. இழுச்சை என்பன இரண்டுமே
இச்சை என்றே திரியும்,

மனம் இடுவது இச்சை. (  இடுச்சை).
மனம் இழுக்கப்படுவது இச்சை  ( இழுச்சை).

மனம் இட்டாலும் மனம் இழுபட்டாலும் விளைவு
விருப்பமாதலின் வேறுபாடு கண்டிலர்.

இரண்டு சொற்களும் ஒரு குட்டையின் மட்டைகள்.

மேலும் வாசிக்க:

http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_9.html


http://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_46.html

http://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_15.html

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_13.html

http://sivamaalaa.blogspot.com/2016/12/broadband-collapse.html 

இங்கு கூறப்பட்டவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை
ஆய்ந்தறிக. 

பாலிமொழியும் புனைமொழியே என்பர்.  புத்த மத போதம்
பரப்ப அது தேவையாய் இருந்தது.  தருமம் என்ற சொல்லை
ரு எடுத்துவிட்டு தம்மா என்று மாற்றவில்லையோ?  அதுபோல
கேடுது என்று டுவை வைத்துக்கொண்டு மடுவில் மாட்டி
நாக்கு நலியாமல்  கேது என்று புனைந்தது திறமையிலும்
திறமையே. இத்திறமைகள் வாழ்க.