ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஏமாற்றும் மழை



வலியதோர் இடி முழக்கம்
வருமழை நெடிதென் றேனா
தொலியிலே குளிரு ணர்ந்தேன்!
துவண்டுபோய்ச் சாயந்து கொண்டேன்

சடசட கொஞ்ச நேரம்,
சலிப்பில்லை இன்னும் வேண்டும்.
கொடகொட என்றே ஊற்றி
குளிர்விக்க நிலத்தை என்ன,

கடுமழை கனவாய் ஆகி
கண்மூடு முன்னே ஓய
விடுவிடு எனைஏ மாற்றும்
வீண்படை  எனவெ ழுந்தேன்!

சொல்லும் சுருக்கமும்



போகலாம், செல்லலாம், பேசலாம் என்பன போலும் சொல்லமைப்புகளைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

போ என்பது ஏவல் வினை. இதில் அல் என்னும் தொழிற்பெயர் விகுதி கொண்டு புணர்த்தால் போவல் என்று வகர உடம்படு மெய்தான் தோன்றவேண்டும். சிலர் போவலாமா என்று கேட்பது சரியாகத் தோன்றுகிறது,

ஆனால் பெரும்பாலோர் “போகலாமா!” என்றுதான் கேட்கின்றனர். யாம் புள்ளி விவரங்கள் எடுக்கவில்லை எனினும் பெரும்பான்மை பற்றிய எம் சிந்தனை சரியென்றே தோன்றுகிறது’

இப்போது போகலாம் என்பதை அலசுவோம்.
போ + கு+  அல் + ஆம்.
சில சொல்லமைப்புகளில் குகர ஒலி இடைவருகின்றது. ஆகவே இதனை வகர உடம்படுமெய்க்குப் பதிலாகத் தோன்றிய போலி அல்லது திரிபு என்று கொள்ளலாம்.

ஆயினும் செல்லலாம் என்னும் சொல்முடிபில் கு தோன்றவில்லை. செல்கலாம் என்று யாரும் பேசுவதில்லை.. போகலாம் என்பது சரியானால் செல்கலாம் என்பதும் சரி என்று வாதிடலாம்.  ஒப்புமையாக்கம் ஆயிற்றே!.ஆனால் எதிர்மறையாக வரும்போது செய்கலாதார்,  என்று  கவிதையில் வரலாம்.  செய்+கு+ அல்+ ஆ+ து + ஆர் என்று நோக்குங்கள். இதில் வரும் அலாதார் என்பது அல் என்னும் தொழிற்பெயர் விகுதி அன்று. அது “அல்”  என்னும் எதிர்மறை ஆகும்.   அன்மைப் பொருளீல் வருகிறது. நிற்க.

சங்ககாலத்தில் யாம் செல்லாமோ?   யாம் போகாமோ?  யாம் கொள்ளாமோ என்று பேசிக்கொண்டிருந்த தமிழர்கள்  செல்லல் ஆமோ, போகல் ஆமோ.  கொள்ளல் ஆமோ என்று தொழிற்பெயர் விகுதியாகிய அல் என்பதைப் போட்டுச் சொற்களை நீட்டமாக்கினார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.. சீனமொழியில் இன்னும் பல சொற்கள் நீளாமல் சுருங்கியே நின்று பொருள் தருகின்றன.! சுருக்கிப் பேசுவதே உலகக் கடைப்பிடிப்பாகும். “சினிமாட்டோகிராபி” என்பது பழைய இங்கிலாந்தின் நாடாளுமன்றமியற்றிய சட்டங்களில் இருந்திருக்கலாம்.. அது பேச்சில் சினிமா ஆனது. இப்போது சினிபிளக்ஸ் என்ற புதிய சொல்லுக்கு வசதி தந்தது. ஒம்னி பஸ் என்றது வெறும் பஸ் ஆனது. பிரசிடென்ட் கூட பிரஸ்ஸ் ஆகிவிடுகிறார்.

செல்லாமோ? என்பதுபோன்ற வடிவங்கள் இன்னும் மலையாள மொழியில் மட்டும் மாறாமலுள்ளன.

தமிழனே! ஆயிடைச் சென்று செவிகொடுத்துக் கேளாமோ?
சேச்சிகளும் சேட்டன்மாரும் கேட்டா?



சனி, 16 செப்டம்பர், 2017

பாடாண் திணை; விறலியாற்றுப்படை. சிறு விளக்கம்.

விறலியர் என்போர்  பண்டைக் காலத்து கலைச்செல்விகள்.  நாட்டியமணிகள். கலைநுணுக்கங்கள் அறிந்த வித்தகிகள். என்றாலும் அவர்களில் எல்லோரும் செல்வச் செழிப்பில் திளைக்கவில்லை. சிலருக்குச் சாப்பிடக் குழம்புடன் கூடிய சோறுகூடக் கிடைக்கவில்லை.  நாட்பொழுதில் நடித்துவிட்டு, இரவில் வீட்டுக்கு வந்து  நன்றாகத் தண்ணீர்விட்ட சோற்றை உண்டு உறங்கினர்.  ஊறுகாய் போன்றவற்றைக் கடித்துக்கொள்ள கிட்டுமானால் அது நல்ல இரவுதான். பிள்ளைகுட்டிகளும் கணவனும் வீட்டிலிருந்தால்,  நீர்ச்சோற்றை அவர்களுக்கு அளித்துவிட்டு எஞ்சியதை உண்டு உறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. என்னே இவ்விறலியர் வாழ்ந்த வாழ்க்கை.

நடிகைகள் நடனமணிகள் ஆனோர் சிலர் திரைப்படங்கள் கொழிக்கும் இக்காலத்திலும் நாமறியாமல் வறுமையில் வாடினோருமுண்டு. அவர்களின் கதைகள் வெளிப்படுங்காலை அவை அறிந்து வருந்துவோர் என்போலும் பலராவர். எதைத்தான் எழுதினாலும் கதறினாலும் நம்மாலும் ஏதும் முடியவில்லை.

இன்னாரைப் போய்ப்பார்! !  உன் துன்பமெல்லாம் தோற்றோடிவிடும் என்று வழிப்படுத்தலாம்.   அதுவும் ஒரு தொண்டுதான். எங்கு சென்றால் வறுமை தீரும் என்று தெரிந்திருந்தாலும், அஞ்சி அடங்கிக் கிடப்பாருமுண்டு. அவர்களுக்கும் வேண்டிய பிறருக்கும் வழியுரைப்பதே சங்ககாலத்தில் விறலியாற்றுப் படை எனப்படும்.  ஆற்றுப்படுத்தியவர் உடன் வந்தாலும் வராவிட்டாலும் சென்று தன் வறுமையைப் போக்கிக்கொள்ள முயல்வது கடன். இவற்றைக் கூறுபவை விறலியாற்றுப் படை நூல்கள். அல்லது பாடல்கள். விறலியாற்றுப்படைத்துறை பாடாண்திணையில் அடங்குபவை.
அறிந்து இன்புறுக.