வியாழன், 14 செப்டம்பர், 2017

மீனவ நண்பர்கள்.

நாம் மீன் உண்ணாதவர்களாக இருக்கலாம். சைவ உணவினிகள் உண்ணார். என்றாலும் மீனவ   நண்பர்கள்  ஆபத்தில் உதவக்கூடியவர்கள்..  மனத்தில் ஏது நினைத்தாளோ ஒரு சீன நங்கை பினாங்குப் பாலத்துலிருந்து கடலில் குதித்துவிட்டாள். அருகில் யாருமில்லை. யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டுதான் குதித்தாள்.

ஆனால் அவளும் அறியாமல் நம் மீனவ நண்பர்கள் இதைப் பார்த்துவிட்டனர்.
அவர்கள் இருந்த படகில் அங்கு விரைந்து வந்து அவளைக் காப்பாற்றிவிட்டனர். இப்படிக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும்.

அன்புடன் பேசித் தற்கொலை  வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று போதித்தனர்.

அவர்களை மீனவ நண்பர்கள் என்பது வெகு பொருத்தமே.

இந் நிகழ்வு பற்றி 2016ல் எழுதிய கவிதை இதோ.



பினாங்குப் பாலமே ஆனால் என்ன?
பிறரருகில் இல்லாமல் போனால் என்ன?
 

விலாங்குப் பாணியிலே  நீருக் குள்ளே
விழுந்ததுமே எங்கிருந்தோ கூட்டம் வந்து
 

மீனவர்கள் நாங்களெனக் குதித்து மீட்டார்! 
மேனிலையர் வேறுசிலர் மேனி முந்தார்.
 

இனாங்கு தீர்மொழியால் தண்மை காட்டி
எடுத்தார்கள் குதித்தாளை மூழ்கு முன்னே. 



இன்னாங்கு  இனாங்கு என எதுகை நோக்கிச் சுருங்கிற்று. 
பொருள்: துன்பம்.
தண்மை :  குளிர்ச்சி.


வாத்தியமும் வாத்தியாரும்



வாழ்த்தியம் என்பது  வாத்தியம் என்று திரிந்தது ஓர் இயல்பான திரிபு. இதில் ழகர ஒற்று போய்விட்டது. வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் வாத்தியார் எனப்பட்டார். அதில் யகர ஒற்று ஒழிந்தது. இப்படி எழுத்துக்கள் ஒழிந்தமைக்குக் காரணம், தமிழர்கள் எப்போதும் தம்மொழியைத் திரிபுறப் பேசியதுதான் . ஆனால் இத்தகைய திரிபுகளால் ஒரு நன்மையும் விளைந்தது. ஒரு புதிய சொல் பயன்படுத்துவோனுக்குக் கிடைத்தது. வாத்தியம் ஆனமையால், வாழ்த்து என்ற சொல் அவன் எண்ணத்திலிருந்து மறைந்தது. பொருள் விரிவு அடைந்தது. எப்படி   ?  வாழ்த்து ஏதும்வழங்காத போதும் சொல் பயன்பாட்டில் தடையேதுமின்றிச் சென்றிணைந்தது. அதாவது, வாழ்த்தியமாகவே இருந்திருந்தால், வாழ்த்தும்போதுமட்டுமே அது பயன்பட முடியும். ழகர ஒற்று மறைந்ததால், ஏனைச் சூழ்நிலைகளிலும் கருத்துத் தடையின்றிப் பயன்பட்டது.ஓர் இறந்தவீட்டில் வாசிப்பதும் வாத்தியமே ஆனது.
வாத்தியார் ஆனதால்,  வாயாற்பாடம் சொல்லாமல் தபால் அல்லது அஞ்சல்மூலம் கற்பிப்பவரும் வாத்தியார் என்ற சொல்லில் அடங்கினார்1
  ஆனால் அப்படி மாறியபின் இன்னொரு தொல்லையும் விளைந்தது. அது என்ன ? அச்சொல் உப அத்தியாயி என்ற சொல்லுடன் குழம்பியது. சிலர் உப அத்தியாயி என்ற சொல் வாத்தியார் என்று திரிந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் இதனால் பயன்படுத்துவோனுக்குக் கருத்துத்தடை ஏதும் ஏறபடவில்லை.
பல்லியத்தனார் என்று ஒரு கங்கப்புலவர் இருந்தார்.  அவர் பாடலைச் சுவைத்துக்கொண்டிருந்தகாலை இந்தக் கருத்துக்கள் மேலெழுந்தன.  இவற்றை எழுதிவிட்டபடியால் அடுத்த இடுகையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாமே! 

-----------------------------------------------------
குறிப்புகள்
------------------------------------------------------
 உப + அத்தியாயி =  உபாத்தியாயி, >  உபாத்தியாயர்.  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர்.

திருத்தங்கள்:  பின்.

புதன், 13 செப்டம்பர், 2017

சமஸ்கிருதத்துக்கு முந்திய சந்தாசா மொழி.



சம்ஸ்கிருதம் என்ற சொல்லை மேனாட்டறிஞர் ஆய்ந்துள்ளனர்.  அதன்படி  “ நன்றாகச் செய்யப்பட்டது “ என்பது அதன் பொருள் என்று  கூறினர். இந்தப்பெயரை யார் எப்போது எந்தக் காரணத்தினால் வைத்தார் அல்லது வைத்தனர் என்பதற்கான ஆதாரம் ஒன்றும் யாருக்கும் அகப்படவில்லை. எனவே முன்னரே ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் இனி யாராவது ஆய்வு செய்வதற்குத் தடைகள்  எவையும் இல்லை.


தமிழ் என்ற சொல்லும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்றது. தொல்காப்பியப் பாயிரத்திலும் இப்பெயர் வருகின்றது.  தமிழ்வழங்குமிடத்தைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பிய நூல் குறிக்கின்றது. இவ்விடத்தை “ நாடு”  என்னாமல் “  உலகம் “ என்று குறித்தபடியால் இது சிலபல நாடுகளை உள்ளடக்கிய நிலப்பகுதி என்று பொருள்கொள்ளலாம். ( உலகம், நாடு என்பன ஒருபொருளனவாய்த் தோன்றுமிடங்களும் உளவெனினும். ).  

 தமிழ் என்ற சொல் எங்கனம் யாரால் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதும் யார் புனைந்தது என்பதும் தெரியவில்லை. தமிழ் என்னும் சொல்லமைப்புக்குப் பலர் பல பொருள் கூறியிருப்பினும், இது  அமிழ் என்ற சொல்லினின்றும் திரிந்தது என்று அறிஞர் சிலர்  கூறுவர்.   அமிழ் > தமிழ்.  அகர வருக்கச் சொற்கள் தகர வருக்கமாகவும் திரியும் என்பது சொன்னூல் முடிபு ஆகும்.  அமிழ்தல்  என்பது தமிழ் நிலப்பகுதி கடலில் அமிழ்ந்து  போனதைக்  குறிக்கும் என்பர். சமஸ்கிருத நூல்களும் தமிழ் நிலப்பகுதி கடலிற் சென்றதைக் குறிக்கின்றன. கடல்கோள்கள் பல நிகழ்ந்துள்ளன.  அண்மைய சுனாமிகள்  இவற்றுக்குச் சான்று பகரும். 

சமஸ்கிருதம் என்ற பெயர் முதன்முதலில் இராமாயணத்தில்தான் கிடைக்கின்றது.  ஆகவே சமஸ்கிருதம் என்ற பெயர் பிற்காலப் பெயராகும். முன்னர் இம்மொழிக்குச் சந்தாசா என்று பெயரிருந்தது.  சந்த மொழியாகச் சமஸ்கிருத மிருந்ததால், இப்பெயர் பொருத்தமானது ஆகும். இது “சந்த  அசை” என்ற தமிழ்ச் சொற்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

சந்த அசை > சந்தசை > சந்தாசா

சிலவகைச் சந்தங்கள் பலரும் அறிந்தனவாய் உள்ளன. தம்-தம், தாம்-தாம், தன-தன- தனதாம்,  தாம்-தன எனப் பல உள.   தம்-தம் என்ற சந்தங்கள் திரிந்து  சந்தம் ஆயின.   த என்ற முதலுக்கு  ச என்பது ஈடாக நிற்குமிடங்களைப் பல இடுகைகளில் உரைத்துள்ளோம். தம்தம் என்பதே சந்தம் ஆம் என்றுணர்க. ஒரு திரிபைக் கண்டவுடனே மூளை குழம்பி அது வேறே   என்பார்  மொழியின் பல்வேறு திரிபுகளை அறியாதார்.  தசை = சதை:.  மறவாதீர்.

இங்ஙனம் சந்த அசை என்பது சந்தாச ஆகி அகில இந்தியச்  சேவை புரிந்ததும் நம் பாக்கியமே ஆகும்.