வியாழன், 10 ஆகஸ்ட், 2017

விருத்தத்தை வெண்பாவாய் மாற்றுவது ...எப்படி?




ஆங்கில மொழியில் ஒரு பழமொழி இருக்கின்றது. ஒன்றைப் பலவழிகளிலும் செய்யலாம் என்ற பொருளுடையது அது.  இப்போது இந்தப் பாடலைப் பாருங்கள்.  இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்போல் புனையப்பட்டுள்ளது.  பாடுபொருள் அருள்மிகு துர்க்கையம்மன்.


என்றும் சுமங்கலி துர்க்கையம்மன்
இணையில் துணையென நிற்பவளே
வென்று மகிழ்வுறு வாழ்வினிலே
வினைகள்


இந்த வரிகளிலிருந்து சீர்களை எடுத்துக் குறள்வெண்பா போல் அமைக்கலாம்.


சுமங்கலி துர்க்கையம்மன் என்றும் இணையில்
துணையென நிற்பவளே வென்று.


வெண்டளை மட்டுமே வந்துள்ளது.  வேற்றுத் தளை விரவாமல்
தொடுக்கப்பட்டுள்ளது.  சொற்களை மாற்றிப் போட்டால் குறள் போல
ஒலிக்கிறது.  என்ன ஆனந்தம்.  இதைக் குறளாக மாற்றுவதற்கு
இன்னொரு மாற்றம் செய்யலாமே:


இணையில் சுமங்கலி துர்க்கையம்மன் என்றும்
துணையென நிற்பவளே வென்று.


சீர்களை மாற்றிப் போட்டதில் எதுகைகள் வந்துவிட்டன.  மோனையை
வரவழைக்கச் சில மாற்றங்கள் தேவை.


இணையில் சுமங்கலி துர்க்கையம்மன் இன்றும்
துணையெனத் தோன்றுவளே வென்று.


இப்போது ஒரு குறள்போல மாறிவிட்டது. (குறள்வெண்பாதான்).  (தொல்காப்பியர் குறளைக் குறுவெண்பாட்டு என்பார். ) மேற்கண்ட விருத்தத்தை வெண்டளையில், செப்பலோசையில் அமைத்துப் பாடியதால் எளிதாக மாற்றிவிட்டோம். மிச்சமிருப்பதை நீங்கள் மாற்றி விளையாடி மகிழுங்கள்.

ஸ்ரீ சிவதுர்க்கா துணை.


புதன், 9 ஆகஸ்ட், 2017

13.8.2017 சுமங்கலிப் பூசை



என்றும் சுமங்கலி துர்க்கையம்மன்
இணையில் துணையென நிற்பவளே
வென்று மகிழ்வுறு வாழ்வினிலே
வினைகள் அகற்றும் நிலைப்பொருளே
இன்று பணிந்தஎம் மந்திரத்தால்
இன்றே அருளும் புரிந்தவளே
நன்று நிகழ்ந்திட எம்வசமிந்
நகருள் வருவாய் நிறைதருவாய்.

வரும் ஞாயிற்றுக் கிழமை 13.8.2017  காலை
சிங்கப்பூர் போத்தோங்பாசீரில் அருள்பாலிக்கும் 
அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயத்தில் 
( ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயம்  8, POTONG PASIR AVE 1,)
சுமங்கலிப் பூசை நடைபெறும். அன்னதானமும் 
நடைபெறும்.  உபயதாரர்கள் சுமார் $15000 (வெள்ளி 
பதினையாயிரம்) செலவில் நடத்தும் இவ்விழாவில் 
கலந்துகொண்டு அம்மன் அருள்பெறுக என 
வேண்டிக்கொள்கிறோம். 
அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.

அம்மன் அலங்காரம் என்னும் இப்பாடலைப்
படித்து, பூசையின்போது அம்மன் எப்படி ஒப்பனை
செய்யப்பட்டாள் என்பதை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.


இனிதாய் நிறைவை அடைந்து --- அம்மன்

இன்னருள் பெற்றே மகிழ்ந்தனர்காண்!
கனிதேன் கலந்து சிறந்து ---- கோவிலில்
கண்டவை யாவும் ஒளிர்ந்தனகாண்.

ஈரா    யிரம்பெறும் மாமாலை  ----- அணிந்தே
ஏற்ற முடன் திகழ்ந்த்  தாள் அம்மையே
ஆரும் அறியா அழகுடனே --- அம்மை
அருள்வடி வாகினள் கேள் உண்மையே.

பிறவி எடுத்தேனே அம்மனது ---- மனங்கவர்
பேரலங் காரமே கண்ணுறவே.…!
சிறையுள் புகுந்தேன் அவள்மனமே ---- இனி
விடுதலை என்பதெம் கைக்கனியே.

தகத்தக என்னும்நல் தாலிதனை ---  அணிந்து
தன்னே ரிலாதொரு காட்சிதந்தாள்;
மிகத்தரு புன்னகை கண்டயர்ந்தேன்  -----  இக்கவின்
இகத்தினில் காணவும் உண்டென்பையோ  ?






 


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சர்க்கரை நோய்



எங்கெங்கு நோக்கினும் சீனியடா --  அதை
எடுக்காமல் வாழ்வோனே ஞானியடா!--- எதிலும்
தங்கி ஒளிந்திடும் சீனிதன்னை --- உண்டால்
தாங்காமல் நோய்தாக்கும் மேனிதன்னை.

ஈரல் இருதயம் கண்களென ---  உனக்
கிருந்திடில் கால் இவை புண்ணழுகி,
தீரல் இலாவோர் கோரநடம் --- காட்டித்
தேரா மடுக்குள் ஊரவிடும்.

சில சொற்களுக்குப் பொருள்:



எடுக்காமல் -  உணவில் சேர்க்காமல் ; உட்கொள்ளாமல்.
இருந்திடில் -  வெட்டப்படாமல் இருந்துவிடுமாயின்.
தீரல் =  தீர்தல்; முடிதல்.
தேரா -  மீண்டுவராத.
மடு = நீர்நிலை;  மடுக்குள் = மடுவிற்குள்.
 

அடுத்து வியாதி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.