திங்கள், 7 ஆகஸ்ட், 2017

தமிழ்நாட்டுக்கு உச்சப் பாதுகாப்பு.... எப்படி?




அயலோரும்  அங்குவந்து  தங்கிடுவர் என்ற
அச்சத்திற்கு என்செய்வோம் நம்தமிழர் நாட்டில்?
புயலூரும்  முகில்மழையோ பகலோன்மற் றுள்ள
புதைமணலும் ஆறுகளும் தரும்பாது காப்பு
நயமாரும் பொருளல்ல நாடிவந்தார் தம்மை
நன்றாகக் கடிப்பதற்குக் கொசுப்படைகள் உண்டே!
இயவாரும்  இவைகொண்டு பயங்காட்டு போதும்
எதிர்நின்ற எப்படையும் ஓடிவிடும் காணே!

இயவு =  ஊர், காடு, வழி.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஆலகால விடம் (விஷம்).



இன்று  ஆலகால விஷம் என்பதை ஆய்வு செய்யலாம்.

இந்தப் புனைவுச் சொல்லில் இரண்டு சொற்கள் இருத்தலாலும் இரண்டுமிணைந்து ஒரு சொன்னீர்மைப் பட்டு ஒருபொருளுணர்த்துவதாலும் இதையொரு கூட்டுச்சொல் என்னலாம்.
ஆலகாலம் என்பதில் ஆலம் என்பது அகலம் என்பதன் திரிபு.  எக்காலத்திலும் தன் நச்சுத்தன்மை நீங்காதது என்பதைக் குறிக்க, ஆல், ஆலம் என்ற சொல்வடிவம் பயன்படுகிறது.  ஆல மரத்தைக் குறிக்கும் ஆல் என்பதும் அகல் (அகலம்) என்பதினின்று வந்ததே ஆகும். விழுதுகளைப் பரப்பிக்கொண்டு இடம் கொண்டு நிற்பதால் அதற்கு ஆல், ஆலமரம் என்ற பெயர் உண்டானது.

சில பொருள்கள் நச்சுத் தன்மை உடையவாய் இருந்தாலும், வேறு ஒரு பொருளை அதிலிடும்போது நஞ்சு மாறிவிடும். அப்படி எந்த மாற்றமும் அடையாததே  ஆலகால விடமாகும். இதனை  7 அல்லது 8 ஆண்டுகட்குமுன் யாம் விளக்கியதுண்டு.
காலம் என்பது நீட்சி குறிக்கும் சொல்.  கால நீட்சி.
எனவே ஆலகாலம், பொருட்டன்மை பற்றி உண்டானதொரு பெயர்.
விடம் என்பதென்ன? விடுதல் என்பதனடிப் பிறந்த சொல் இது. இங்கு ஊற்றுதல் அல்லது கலத்தல் பற்றி ஏற்பட்ட பெயர்.
சோற்றில் மோர் விடுதல் என்றால்,  அதை ஊற்றுதல். பாம்பு அதன் விடத்தைக் கொத்துமிடத்தில் விடுகின்றது.  விடு> விடு+அம் > விடம்.  இதுபின் விஷம் ஆனது.  நச்சுப்பொருள் என்பது இதன் பொருள்.  இது காரண இடுகுறிப் பெயர்.

விடங்களை விடமல்லாததுடன் கலந்தே கொடுத்து வந்தபடியால். “விடம்”கலக்கும் நஞ்சு என்று பொருள்பெற்றுப் பின் நஞ்சு என்ற பொதுப்பொருளில் வழங்க்கிற்று.




அமெரிக்காவைப் பார்த்து வடகொரியா......!

உலகளந்த நாடுஅ   மெரிக்காவைப் பார்த்துச்
சிறிதாம் வடகொரியா சீரழிப்போம் என்றால்
பலபோரும் வென்ற வலம்சேர் பழமையைப்
பார்க்காக் குருடர்- தென் கீழ்த்திசைப் பக்கம்
உளவாய மக்கட்கோ உள்ளத்தில் அச்சம்;
வட கொரியன் நம்தலைக்கு வைத்தான்  வெடியே !
தளவாடம் ஆக்கும்  தலைதெரித்த போதையோன்;
தாரணி ஓரணியில் நிற்க அமைதிக்கே.

குறிப்பு:


1.மூதலடி: "உலகளந்த நாட மெரிக்காவைப் பார்த்து "
என்று வெண்டளையாகும்.
2. குருடர்தென் என்று சேர்த்திசைக்க. (புளிமாங்காய்ச் சீர்)

3. தென்கீழ்த் திசை: தென் கிழக்காசியா.