ஞாயிறு, 25 ஜூன், 2017

குள் என்பதிலிருந்தே அமைந்த இன்னொரு கருத்து


குள் என்னும் அடிச்சொல்லிருந்து குண்டலம் ஈறாகப் பலசொற்கள் அமைந்திருத்தலை முன் இரு இடுகைகளில் கண்டோம்.  இப்போது குள் என்பதிலிருந்தே அமைந்த இன்னொரு கருத்து அளாவிய
சில சொற்களைக் காண்போம்.

குள் என்பது நீட்டக் குறைவையும் குறிக்கும்.

குள் >  குள்+து  =  குட்டு.

குட்டு என்பது இரகசியம் என்று பொருள்படும். அகத்துள் இருந்து வெளிப்படாததே இரகசியம். (இரு+ அக(ம்) + சி+ அம்).  இதில் சி, அம் என்பன விகுதிகள். இனிக் குட்டு என்பதென்ன எனில், நீளக் குறைவினால்  வெளிவராது உள்ளடங்கி  இருக்கும் விடயம் ஆகும்.  இது மிகவும்
எளிமையானதும் சற்று நகைச்சுவையானதுமாகும் ஆகும்.நீட்டமானால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்.  நீட்டக்  குறைவினால் வெளிவராது உள்ளிருப்பது என்று பொருள்.  இது புலவன் புனைவு அன்று. சிற்றூரான் சொல்லும் கருத்து.

குள் > குட்டு + அம் = குட்டம்.

நோயின் காரணமாக, விரல்கள் கை கால்கள் குட்டை ஆகி விடுகின்ற ஒரு நோய்.  இது பின்பு வேறு மொழிகளில் "குஷ்டம்" என்று மலர்ச்சி அடைந்தது.

குள் > குள்+து = குட்டு+ ஐ  = குட்டை

இங்கு து,  ஐ என்ற இரு விகுதிகள் சேர்ந்தன.  குறுஞ்சொற்கள் பின் ஒட்டிச் சொல் மிகுவதே விகுதி.   மிகுதி > விகுதி. ( விகுருதி அன்று)   ம-வ போலி.

குள் > குட்டு > குட்டி  (குட்டு+ இ ).

இளம் விலங்குகள் உயரமும் நீளமும் குறைந்தவை.

குள் > குள்+து+ ஐ = குட்டை.    (நீட்டக் குறைவு).

சனி, 24 ஜூன், 2017

குண்டலம் 2

குண்டலம் II

குள் என்ற அடிச்சொல் இன்னொரு பொருளையும்
தெரிவிப்பதும்  ஆகும். அது திரட்சிக் கருத்து.
உருண்டையாகத் திரண்டதும் குண்டு எனப்படும்.
இப்போது வெடிக்கும் எல்லாக் குண்டுகளும்
உருண்டு திரண்டனவாய் இருப்பதில்லை. சில
 நீட்டுருளையாகவும் கூர்முனையுடையனவாயும் 
உள்ளன.. என்றாலும் வெடிக்கும் தன்மை உடையன
 யாவுமே குண்டு என்றோ வெடிகுண்டு  என்றோ
குறிக்கப்பெறுகின்றன. இது ஒரு  பொருள்விரிவாக்கம் 
என்க.

பயங்கரவாதம், படையினர் மோதல் முதலிய பற்றிய
நாளிதழ்ச் செய்திகளில் சொல்லின் அடிப்படைக் 
கருத்தாகிய திரட்சி கருத்து மனத்தினின்று அகன்று 
வெடிப்பு என்பதே முன்னிலை பெறுவதால். இப்பொருள்
விரிவாக்கம் ஏற்படுகின்றதென்பது வெள்ளிடைமலை.

இனிச் சொல்லமைதல் எப்படியென்று காண்போம்.

குள் அடிச்சொல். திரட்சிக் கருத்தில்.

குள் + து = குண்டு. (திரட்சி.)

"தடி"யாக உள்ள பெண்ணை (தடிச்சி ) " குண்டுப்பாப்பா"
என்றும் குண்டாக இருக்கிறாள் என்றும் பேச்சு
வழக்கில் வருதல் காண்க.

குண்டு என்பது பெயர்முன் அடைமொழியாகவும் 
பயன்பெறும். -டு: "குண்டு மாரி"

வெடிமருந்து உள்ளடங்கு திரட்சியாகச் 
செய்யப்பட்டிருப்பதால்  வெடித்திரளை "குண்டு"
என்றனர்.

குண்டுவீச்சு = bombing

யப்பானியர் குண்டுவீச்சு என்பது வழக்கு.

இப்போது குண்டலம் என்ற சொல்லுக்குச் செல்வோம்.

காதணி, தோடு, குழை,  கடுக்கன், மஞ்சிகை என்று
பல்வேறு பெயர்களாலும் குறிக்கப்பெறுவது குண்டலம்.,

குண்டு + அல் + அம் = குண்டலம்.

இங்கு இரு விகுதிகள் உள.

அல் என்பதை இடைநிலையாகவும் அல்லது 
இடைநிலை விகுதியாகவும் அம் என்பதை 
இறுதிநிலையாகவும் விளக்கலாம். இருவிகுதிகள் 
பெற்ற சொற்கள் பல.எம் முன் இடுகைகள் காண்க.

இங்கு குறித்த நகைகள் யாவும் திரட்சியாக்கங்கள்
திரண்டு குண்டுபோலுமிருத்தலால் குண்டலம் 
ஆயின. இது  பொருத்தமான சொற்புனைவு ஆகும்.

வான், அல்லது காயமும் (ஆகாயமும்) புவியைச் 
சுற்றித் திரண்டிருத்தல்போல் தென்படுதலால்
இது ஆகாயத்துக்கும் பெயரானது. நிலவு, பகலோன் 
முதலியவை காயுமிடமே காயம் (ஆகாயம்
எனப்படுவது.


குள் என்னும் அடிப்பிறந்த சொற்கள் இன்னும் உள
இவற்றைப் பின்பு கண்டு இன்புறுவோம்.

வெள்ளி, 23 ஜூன், 2017

குண்டலம் I - ( குளம் முதல் குண்டலம் வரை )

குண்டலம் என்ற சொல் நாடோறும் வழங்கும் சொல் அன்று என்றாலும் சில பழங்கதைகளில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. இது எங்ஙனம் அமைந்தது என்பதைக் காணுமுன் இதன் அடிச்சொல்லான "குண்டு" என்பதை நடுவணாக வைத்து நாம் நம் ஆய்வினை மேற்கொள்வது எளிதாகவிருக்கும் என்று எண்ணுகிறோம்.

குண்டு என்பது பல்பொருளொரு சொல். இதன் பொருளாவன: ஆண், ஆண்குதிரை, ஆழம், சிறு நிலம், தாழ்செயல், நிறைகல், குழி, குளம், விதை, முட்டை வடிவமாய்க் கனக்கும் பொருள் -- என்பன.


குண்டு என்னும் சொற்கு குளம் என்னும் பொருளும் இருப்பதை மேலே காணலாம். இது எப்படி
ஏற்படுகிறது என்று காண்போம்.

குள் என்பது அடிச்சொல்.

குள் + அம் (விகுதி) = குளம்.
குள் + து = குண்டு. ஒப்பு நோக்குக: கொள் + து= கொண்டு. (எச்ச வினை).
குள் + து + = குட்டை. "குளம் குட்டை".(இணைத் தொடர்).
குள் > குழி.
குழிதல், குழித்தல்.

குளத்தைக் குறிக்கும் குண்டு என்பதும் குள் என்ற அடியினின்றே தோன்றியதென்பது இதன் மூலமாக விளங்கும்.

குழிவான நீர் தங்குகின்ற இடத்தையே இதுகாறும் விளக்கினோம். இன்னும் இதன் வேறு பரிமாணங்களையும் காணவேண்டும். அவற்றை அடுத்துக் காண்போம்


தொடரும்.