புதன், 7 செப்டம்பர், 2016

பூக்காரியைச் சுட்டிய புறநானூற்றின் இனிமை

https://sivamaalaa.blogspot.my/2016/09/blog-post_7.html

குறித்த முன் இடுகையைத் தொடர்ந்து:

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.


இப்போது என்ன நடந்தது?   மறவர்களை நோக்கி ஓர் இனமானம் காக்கும்
ஏவலன்றோ வீசப்பட்டது?  பகை அழிக்கப் போருக்குப் புறப்படு என்ற ஆணையன்றோ அந்தத் தண்ணுமையால் எறியப்பட்டது? இது நன்கு வெளிப்படும்படியாக: 'குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை" என்று புலவர் இனிமை தோன்றத் தெளிவிக்கிறார்.  ஆகவே இதிலேதும் இரங்கலுக்கு இடமில்லை என்பது முன்வரு குறிப்பாயிற்று.  குறும்பர் -  மறவர் . குறு  என்ற இக் குறுமைச் சொல்  அடித்தளப் போர்மறவரைக் குறிக்கும் பொருள்பொதிந்த சொற் பயன்பாடு.  அவர்களே நாடு காவலர்கள் .


இந்தத் தண்ணுமைத் தட்டொலி இரக்கத்தையா வரவழைக்கிறது?  யாருக்கு
அந்த இரக்கம் வேண்டும்? போருக்கு அஞ்சியவர்களாய் வாழ்ந்து சாகும்
நாணுடை மாக்கட்கு அது வேண்டும்!  மக்கட்கு அன்று,  அந்த மாக்கட்கு!
அவர்கட்கு வேண்டுமானால் இது இரங்குதலைத் தரும்.  எமக்கன்று, யாம்
மறக்குலத்து மாது என்பது தோன்ற: " நாணுடை மக்கட்கு இரங்கும்" என்றார் புலவர்.


எப்போதும் பூச்சூடிக் கொள்பவள். இன்று அது சூடவில்லை. தன் அழகில்
கொஞ்சத்தை அவள் இழந்துவிட்டவள்தான்.அழகிய மலர்கள் சூடி மணச்சாந்துகள் இட்டுக் கணவன்முன் நின்றால் அழகு அழகுதான். ஆனாலும் என்ன? போருக்குப் புறப்பட்ட கணவனைக் கண்டு உள்ளம் பூரித்து அது முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்ட அந்த அழகு அந்த இழப்புக்கு ஈடு செய்யவில்லையோ?  "அதனால் யாம் இழந்தது சிறிதே. எம்மினும் மிகுதியாய் தன் பேரெழில் இழந்து, என்ன வினை ஆகிவிட்டது என்று நொந்துகொண்டு இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பூவிலை கூற முனைகிறாளே,,, அவள் இழந்தது அதிகம்; அதிகம். இன்று பிழைப்பே அவளுக்குக் கேள்விக்குறி ஆகிவிட்டதே! வினை ஆகிவிட்டதே. பாவம் பாவம் அவள்தான் பாவம் என்கிறாள் இம்மறவர் மாது. யான் இரும்பு வருக்கத்துப் பெண் என்கிறாள் இவள்.


 ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

என்பதைப் பாடி இன்புறுக.






புறநானூறு :" பூக்காரிக்கு இரங்கு, எனக்கன்று"


இது புறநானூற்றுப் பாடல். 293. அழகிய இப்பாடலை நொச்சியூர் நியமங்கிழார் பாடியுள்ளார்.சங்க காலத்தில் இவ்வூர் நொச்சிநியமம் என்றிருந்தது என்பர்.

திணை: காஞ்சி. துறை: பூக்கோள் காஞ்சி.

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

சினம்கொண்ட யானையின் மேலமர்ந்து தண்ணுமை (போர்க்கழைக்கும் பறை) முழக்கி, மறவர்களை அழைக்கின்றான் ஒருவன். மறவர்கள் அது கேட்டுக் காஞ்சிப் பூச்சூடி, அரணைச் சூழ்ந்துள்ள பகைப்படையை அழிக்கப்
புறப்பட்டு வருகின்றனர்.

அங்ஙனம் போந்த மறவன் ஒருவனின் மனைவி, வீட்டில் இருக்கிறாள். அப்போது அங்கு வந்த பூக்காரி, பூ வாங்குக என்று அவளிடம் கேட்கிறாள்.
காஞ்சி சூடிச் சென்றுவிட்ட கணவனை எண்ணியபடி, தான் பூச்சூடிக்கொள்ளாமல் இருந்த அவளுக்கு, அந்தத் தண்ணுமை ஒலி இரக்கம் காட்டுவது போலிருக்கிறது. தண்ணுமை ஒலியே!  எனக்கு இரங்காதே!.
அந்தப் பூக்காரிக்கு நீ இரங்கு. இந்த ஒலியால், அடுத்தடுத்து உள்ள மனைகளிலும் எந்த மறவனின் மனைவியும் பூ வாங்கமாட்டாளே. பூ விற்க முடியாத அவள் அல்லளோ இரக்கத்திற்கு உரியவள்......?

இவ்வாறு பாடுகிறார் நொச்சி நியமங்கிழார்.
தண்ணுமை ஒலிக்கிறதே, அது இரக்க உணர்வினை மேலெழுப்பும் ஒலி.
அந்த இரக்கத்திற்கு உரியோர் மறவர்களின் மனைவிமாரல்லர். பூக்காரிகள்
தாம்.  மறக்குலத்துப் பெண்டிர் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை.


தண்ணுமை முழக்குவோனும் அஞ்சுவதில்லை. அவனிருப்பது யானையின்
மேல். கீழ் நிற்கும் பகைவர் அவனைக் குத்த முடிவதில்லை." நிறப்புடைக்கு
ஒல்கா"  யானையின் மேலிருக்கிறான்.   கீழ்  நின்ற படி புடைத்தல் ‍ நிறப்புடை.
நின்ற> ‍ நிற.  னகர ஒற்றுக் குறைந்தது. புடைத்தல் ‍:  பக்கத்திலிருந்து குத்துதல். நில் > நிறு > நிற எனினும் அதுவே. அடிச்சொல் நில்.








செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இடக்கர்ப் பொருள் வரு தமிழ்

தமிழில் சொல்லும்போது இடக்கராகத் தோன்றும் சில சொற்களையும்
தொடர்களையும் அவை தமிழ் என்னாமல் வேறு மொழியினுடைய என்று கூறிவிட்டால் அந்த இடக்கான பொருள் மேலெழாது அடங்கிப்போகும். சிலவிடத்து இவ் வுபாயத்தை அல்லது ஆம்புடைமையைக் கையாண்டுள்ளனர் இந்திய இலக்கியவாதிகள். இது ஒரு செயலாற்றுத்
திறன் என்றே உயர்த்தவேண்டும். எந்த எந்த இடங்களில் அவ்வாறு செய்துள்ளனர் என்று விரித்து விளக்கலாம். ஆனால் அது புதைத்ததை மீண்டும் கிண்டி மேலெடுத்தது போலாகிவிடும்.

ஆனால் எடுத்துக்காட்டாக மட்டும் ஒன்றைக் காட்டி முடித்துவிடலாம்.
அது சாணக்கியன் என்பதே. பிரித்துப் பார்த்தால், சாண் நக்கியன் என்று
இடக்கர்ப் பொருள் வருகிறது.  ஆகவே இவன் தமிழனே ஆனாலும்
இவனை வடதிசைக்குப் பெயர்த்துவிடின் தொல்லை இராது.

இவன் எழுதினான் என்று சொல்லப்படும் அர்த்தசாத்திரமும் தமிழிற்போந்து பின் சமஸ்கிருத மொழியிற் பெயர்க்கப் பட்டதென்றே
தெரிகிறது. தமிழ் மூலம் தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கிடப்பதாகக்
கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமரசாமிப் பிள்ளை இதனை மீண்டும்
அழகிய வெண்பாக்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைப் பாடி
இன்புறுக.

எடுத்துக்காட்டுக்கு:

ஆடையால் மற்றை அணியால் அலங்கரித்துப்
பீடடைய வந்த பெருமூடர்  -நீடவையில்
எத்துணையும் பேசாது அடங்கி இருப்பரேல்
அத்துணையும் மேன்மை அவர்க்கு ".

(சாணக்கிய நீதி வெண்பா)

இது அவையடக்கம் வலியுறுத்தியது. பேச வேண்டிய சமையத்துப் பேசவேண்டும்.  இன்றேல் " நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய 
மாட்டாதவன் நன்மரம் "  என்று குற்றமாகும் .  இ
துபோலும்  கருத்துக்கள் மன்னர் அவைக்குரிய என்றாலும் இன்றும் பொருந்துவனவாம் .