வியாழன், 16 ஜூன், 2016

உலகெங்கும் தமிழ்

எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார் என்பதனை இணையத்தால்  உணர்ந்துகொண்டேன்;
பங்கிட்டே  பல்லரசும் ஓச்சுகின்ற கோல்வரைக்குள்
பதியாமற் கடந்து நின்றேன்;
தங்குற்றேம் ஓரிடத்தில் என்றபடி தவியாமல்
தமிழன்னை  தரணிபரவி
எங்குற்றும் மிளிர்கின்றாள் இதுவன்/றோ வளர்ச்சியிதை
எனைத்தானும் காத்தல்கடனே

கோல் வரை  :   செங்கோல் செலுத்தும் ஆட்சி எல்லை.
பதியாமல்  -   உள் அடங்கி  நின்றுவிடாமல்.
தங்குற்றேம்  -  தங்கிவிட்டோம் 
தரணி பரவி  =  உலகெங்கும் பரவி 
எங்குற்றும்   -  எங்கெங்கும் 
எனைத்தானும்  -  எப்படியாகிலும் .

உலகெங்கும்   தமிழ் 

வெயில் விழைவு :LongSunnyDay

பன்னிரண்டு மணிநேரம் பகலவன் ஒளிப்புனலில்
பயின்றவெலாம்  மறந்திருந்தேன்;
என்னிரண்டு விழிகளும் இறைஞ்சிய போதெல்லாம்
இருந்தநிழல் விருந்துமுண்டேன்;
அன்னியமோ கதிரவனே அன்னியமோ  வெண்ணிலவே
அன்னியமோ உடுக்களெல்லாம்
பொன்னிறமே பட்டொளிரும் எழிலியொடு   தென்றலுமே
மன்னுயிர்க்கெல் லாமினிமையே.

கதிரோனும் மறைந்திட்டான் கவிமெல்ல  இனிப்பாடு
காதுணவு விழைகின்றன;
மதிதானும் மாருதமும் மலர்களிலே வண்டினமும்
மருவினிய மாலையழகில்!
இதுநாளில் யான்பெற்ற இன்பங்கள் யாவுமினி
என்றென்றும் எனதுமாகும்
மெதுவாக எழுந்திந்த  இடம்நீங்கு  வேன்விரைவும்
உதவாத இசைந்தநாளே.

வெயில் விழைவு 

செவ்வாய், 14 ஜூன், 2016

காணிக்கை

தெய்வம்  காக்கவேண்டும் என்ற  வேண்டுதலில் தரப்படுவதே காணிக்கை.

இது  கா + நிற்கை  என்பதன் மரூஉ  ஆகும்.

கா =  காவல்.  தெய்வக்காவல்.

நிற்கை =  நிலைபெற விழைதல் .

காநிற்கை >   காணிக்கை  என்று மாறிற்று.

காவலுக்காக வேண்டிக் கட்டப்பட்டது  காப்பு.  இப்போது அது வளையல் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.