செவ்வாய், 3 மே, 2016

அகமும் புறமும் - எல்லைகள்.



ஓர் ஆண்மகனும் பெண்மகளும் ஒத்த அன்பினால் செல்லாது
 மாறுபட்டு  நிகழ்வன அனைத்தும் பெருந்திணை  என்னும் திணையின்பால் கொள்ளப்பட்டன .  எடுத்துகாட்டாக மனைவியை நீங்கி இன்னொருத்திபின் சென்று அவள்பால் உள்ள காதலை ஒருவன் கூறுவதாக ஒரு பாடல் வருமானால் அது பெருந்திணை ஆகும்.  அதாவது எல்லை மீறிய காம ஒழுக்கம்.   பண்டைத் தமிழர் பண்பாட்டில்  இவை போற்றப்படவில்லை.

இன்னோர் எடுத்துக்காட்டு:   ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.   அந்த ஆடவன் அடக்கத்துடன் நிற்க
பெண் முந்திக்கொண்டு  நீ என்னை   உடன் கொண்டுசென்று என்னுடன்  கூடியிரு என்று  கேட்பாளாயின் அதுவும் பெருந்திணை  ஆகும்.   வேட்கை முந்துறுத்தல் என்னும்  துறை  இது.   இஃது  மாறுபாடான நிகழ்வு ஆகும்.

"கையொளிர் வேலவன்1 கடவக் காமம்
மொய் 1வளைத் தோளி  முந்துற மொழிந்தன்று."


என்பது புறப்பொருளின் கொளு.

கடவுதல் = தூண்டுதல்.

இத்தகைய  மாறுபாடான ஒழுக்கங்கள் புறப்பொருளில்  அடக்கப்பட்டன.  தூய ஒழுக்கங்களே அகப்பொருளில் ஏற்கப்பட்டன.

1 :   errors rectified


திங்கள், 2 மே, 2016

வம்மின் (சொல்வடிவம் ) > வம்மிசம்


இச்சொல் எங்ஙனம்  அமைந்தது  என்பதை  இங்கு விளக்கி இருந்தோம்

வம்மின் (சொல்வடிவம் )  >   வம்மிசம்

http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_30.html



வருமின் என்பது வம்மின் என்றும் வரும். --  என்றால் வருக என்று பொருள்.

" நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என "

என்ற புறநானூற்று வரியில் ( பெருந்தலைச் சாத்தனார்  - பாடல் 294) இதைக் காணலாம் .

வ + மிசை + அம்  =  வம்மிசம்

தலைமுறைகள் மென்மேலும் வந்துகொண்டிருப்பதே வம்மிசம் .

மிசை - மேல்.

இதில் ஐகாரம் கெட்டது .

இது ஒரு நாட்டுப் புற வழக்குச் சொல்.

கிழவியர் திட்டுப்போது " உன் வம்மிசம் கருவற்றுப் போக " என்று அலறுவர்.

வா என்ற பகுதி  வ என்று திரியும்.

வா  >  வந்தான் ;  

வா>  வருக. (அதாவது  வாருக  அன்று )

வா > வரு . அல்லது  வரு> வா .

வா  முதலா  வரு முதலா என்பது இருக்கட்டும்.

  


சனி, 30 ஏப்ரல், 2016

கவிஞன் அறிவுரை: ஆட்சியாளர் மதிப்பரோ?


கவிஞர், புலவர்,பாரதிகள் என்போரெல்லாம் உணர்ச்சி வயப்படுபவர்கள். உணர்ச்சி கலந்துவிட்டால் உள்ள விடயம் சிதைந்துவிடும்.  சிதைந்துவிட்ட, உருமாறிவிட்ட, பாலில் நெய் போல மறைந்துவிட்ட வரிகளிலிருந்து நடந்தவைகளை வெளிக்கொணர்ந்து உண்மை உருவைக் கொடுத்து மக்களிடம் தருவதென்பது,ஒருவகையில்  முயற்கொம்புதான் அன்றோ?
கவிதைக்குப் பொய்யழகு எனப்படுவதால், அந்தப் பொய்யைக் கலந்தபின் மெய்யைக் கண்டெடுப்பது எப்படி?

இதனால்தான் கவியரசர் கண்ணதாசனை,  நபிகள் நாயகம் வரலாற்றைக் காவியமாக்க வேண்டாம் என்று இஸ்லாமிய நண்பர்கள் கூறினர் போலும் --என்பது அனைவரும் அறிந்திருக்கக் கூடும்.

அப்படியானால்  கவிஞனொருவன்  அரசுக்கோ  ஆட்சியாளனுக்கோ வழங்கும் ஆலோசனைக்கும் அதே மதிப்பெண்தான்  கிட்டுமோ?

கிறித்துவுக்கு ஏறத்தாழ 300 ஆண்டுகட்கு முன் ஒரு சீனக்கவிஞன் இருந்தான், கவிஞன் மட்டுமோ?   அவனோர்  அரசியலறிஞனும் கூட.
இவன் பெயர் ச்யு யுவான்.  சூ என்னும் நாட்டின் மந்திரியாக அரசன் ஹுவாயின் பணியிலிருந்தான். அடுத்த நாடான சின்  தம் நாட்டின் மீது படையெடுத்து வருவது உறுதி என்று அறிந்துகொண்ட ச்யு யுவான், அரசனுக்கு ஓர் ஆலோசனை வழங்கினான்,  பக்கத்திலிருந்த ஐந்து நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நட்பு நாடாகிவிட்டால் இந்த மிரட்டலைச் சமாளிக்கலாம் என்று உரைத்தான்.
அரசன்பால் மாறாத மன ஒருமைப்பாடும் நாட்டுப் பற்றும் இவன் கொண்டிருந்தான் என்றாலும்,  அவனறிவும் நேர்மையான போக்கும் வேறு மந்திரிகளுக்குப் பிடிக்கவில்லை.  வேண்டுமென்றே பல பழிகளை யவன்மேல்சுமத்தி, அவன் நேர்மைக்குக் களங்கம்  கற்பித்தனர். புகழைக் கெடுத்தனர். அந்த எதிரிகள் கொடுத்த அழுத்தத்தினால், அரசனும் தடுமாறி, ச்யு யுவானை ஹூனான் மாநிலத்துக்கு  நாடுகடத்தினான்.  பதவி இழந்த நிலையில் அவன் ஹூனானில் வாடினான். கொஞ்ச காலத்தில் அவன் கூறிய படையெடுப்பு உண்மையிலேயே நடைபெற்று,  மாற்றார்  நாட்டைப் பறித்துக்கொண்டனர்.  இதைக்  கேள்வியுற்ற ச்யூயுவான், தன் தாய் நாட்டின் வீழ்ச்சிக்கு மிகவும் இரங்கிச் சொல்லொணாத் துயரால் டோங்டிங் என்னும்  ஏரியில்வீழ்ந்து உயிர் நீத்தான்.இந்த அரசுக் கவிஞனின் நினைவாகச் சீனர்கள் இன்றுவரை கடல் நாக விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் வீழ்ச்சி அடைந்தான் ச்யு யுவான் , என்றாலும்  அவன் நாட்டு மக்கள் அவனை மறந்தார்களில்லை. வெகு உயர்வாய் அவனையும் அவன் வாழ்க்கையையும் அவன் கவிதைகளையும் கொண்டாடினர். மிக்க நேரிய உயர் எண்ணங்களை வெளிப்படுத்தியவன் அவன். "சந்தித்த துயரங்கள்"  என்ற 373 பாடல்கள் கொண்ட காவியம் உயர்த்திக் கொண்டாடப் பட்டதாகும்.  கான்பூஷியஸின் கவிதைகட்கு அடுத்தபடியாக  அவன் கவிதைகள் வைத்து மதிக்கப்பெறுகின்றன . பண்டைச் சீனப் பேரரசின் எழுச்சித் தோற்றத்திற்கு முன் இருந்த காலத்தில், மேல் எல்லையைத் தொட்ட‌ சீனப் பண்பாட்டினைப் படம்பிடித்துக் காட்டும் இலக்கியங்களில் இவன் கவிதைகளும் ஒன்றாம். இன்னும் "ஒன்பது பாட்டுகள்"   " மேலுலகுக்கு விடுக்கும் கேள்விகள் " என்பனவும் இவனுடையவை ‍  யாங்ஸி ஆற்றங்கரை நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்வோர்க்கு இனிய உதவி நூல்கள் இவை  ஆகும். இங்குத்தான்  அவன்றன்  சூ நாடுமிருந்து  பகைவரிடத்து வீழ்ந்து மறைந்தது.  பின் போரிடு மாநிலங்களும்  (the Warring States ) ஒழிந்து  சீனப் பேரரசு உதயமாயிற்று.