வியாழன், 21 ஜனவரி, 2016

சிவஞான போதம் பாடல் 5

உயிர் என்பது ஒரு பழந்தமிழ்ப் பதம்.  இது சீவன் என்றும் வழங்கி வருவதாகும். உயிருடையோன் அல்லது உயிரன்,  சீவன் என்றும் கு
றிக்கப்பெறுவதுண்டு. உயிரனுக்கு ஆன்மா உண்டென்பதையும்  அவ் ஆன்மா பேரான்மாவைப் போன்ற ஆனால் அதனின் சிறிதாகிய ஒரு துண்டு என்பதும் கூறப்பட்டது.

இவ் ஆன்மா உடலில் வதியுங்கால் எவ்வாறு பேரான்மாவாகிய சிவனைக் கண்டுகொள்கிறது என்பதே ஐந்தாவது சிவஞானப் பாடல் எழுப்பும் கேள்வியாகும்,  அப் பேரான்மா கட்புலனுக்கு தெரிதலுறாமல் மறைந்தன்றோ உள்ளது?   அப்படி மறைவாயிருத்தலும் அப் பேரான்மாவின் இயல்புகளில் ஒன்றாயிற்றே!

சிவமோ  எங்கும் முழு நிறைவாகி இலங்குகின்றது. இம் முழு நிறைவைத்தான் பரிபூரணம் என்கின்றனர்.  ஆனால்  இதை இயல்பாக  ஓர் உயிரனின் ஆன்மா உணர்ந்துகொள்ள முடிவதில்லை.  வழிபாட்டுத் தலங்களில்  தெய்வச் சிலைகள் நிறுவப்படுதல் மூலமாக  கடவுளிருத்தல்  சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது, நிறுவுபொருட்களால்  சொல்லுதலும்
பதிவிசை மூலம் சொல்லுதலும் எனச் சொல்லுதல் பலவகை.  உணர்த்த உணர்வது ஆன்மாவின் இயல்பு ஆகும் .

கண்  வாய் மூக்கு  செவி மெய் முதலிய கருவிகள்  (  இந்திரியங்கள் ) தாமே எதையும் உணரமுடிவதில்லை. அவைகட்கு சீவன் அல்லது உயிரன்  ஒருவன் வேண்டும்.  அவனுடன் ஒன்று கூடி நின்று அவை நிகழ்வுகளை அறிகின்றன,
இந்த "நிற்பியைபு"  இன்றியமையாதது  ஆகும் . இதுவே  சந்நிதானம் எனப்படும். உயிரனும் தானே எதையும் உணர முடிவதில்லை.  முழு நிறைவாயுள்ள  சிவம் அல்லது  இறைமை  உயிரனைச் சூழ நிலவுகின்றது. அதனால் உயிரனும் செயல் பட்டு உணர்ந்துகொள்பவனாகிறான்.   இது விசேட சன்னிதானம் ஆவதாம் . சிவமில்லையேல்  உயிரன் சடம் .  உயிரன் இல்லையேல் ஐந்து இந்திரியங்களும் சடம்  ஆவனவாம்.

இதனை ஐந்தாம் பாடல் உணர்த்தும்.  பாடலை அடுத்துக் காண்போம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளக்கம் அடுத்து  \வரும்  இடுகையில். 

>
















ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு

மாடு பிடிக்கின்ற  மாவலியோர் சட்டத்தின்
ஏடு படித்துயர்   ஏற்றறிஞர் ‍‍‍=== கூடிமன்றில்
போடும் தடையாற்  புகவில்லை கட்டுக்குள்! 1
நாடும் அவர்பக்கல் நன்று.

வீர விளையாட்டில் 2புக்குதம் தோள்களின்
வீறு வெளிக்காட்டும் வேணவா‍‍  ‍‍==  ஊறுபடச்
சீறு செழுங்காளை சேர்ந்து முடங்கிவிட‌க்
கூறு படலான தே


ஏறு தழுவும் எழுச்சி இளைஞர்மான்3
தேறு நிலைவருக தெள்ளிய ‍‍‍=== நீரினைப்போல்!
நேரும்  துயரனைத்தும் நீங்குக இல்லங்கள்
தோறுமே பொங்குநல் நாள்

அடிக்குறிப்புகள் :

1. கட்டு = ஜல்லிக்கட்டு. : ஜல் ஜல் என்று மணியொலியுடன் பாய்ந்து வரும்   மாடுகளை அடக்கிக் கட்டுதல்.  இந்த ஜல் ஓர்  ஒலிக்குறிப்பு.  ஜல் என்பது  குறைவுபட நின்ற  முதற்குறை . என்று இலக்கணம் உரைக்க .
2 புக்கு = புகுந்து 
3 மான் = மனம்,   மன்+அம் = மனம்; மன்>மான்,  முதனிலை நீண்ட பெயர்ச்சொல்
ஜல் ​+ இக்கட்டு =  ஜல்லிக்கட்டு;   ஜல் என்ற ஒலியுடன்  விரையும் மாடுகளால்  இக்கட்டு=  அதாவது  இடர் என்றும்  வேறு பொருளும் தரும் .. 

 will edit.  

சனி, 16 ஜனவரி, 2016

பொன்னாள்தைப் பொங்கலே greetings


போற்றும் திருவுடைய 
பொன்னாள்தைப் பொங்கலே
ஆற்றும் செயலனைத்தும் சீர்மிக்கு---
நேற்றினும்
இன்று சிறந்தினி 
நாளையும் புத்தொளியால்
நின்று நிலைபெறுக 
நேர்.

நேர் -  நேர்க;  நடைபெறுக. (ஏவல் வினை )
சீர்மிக்கு  =  சீர் மிகுந்து