செவ்வாய், 27 ஜனவரி, 2015

நற்றமும் குற்றமும்.


குற்றம் என்ற தமிழ்ச் சொல் இப்போதெல்லாம்,  சட்டத்திற்கு முரண்பட்ட, தண்டனைக்கு உட்பட்ட ஒரு செயலைக் குறிப்பதாகப் பெரிதும்  வழங்கி வருகிறது.  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற பழமொழி, சட்டப்படியான குற்றம் மட்டுமேயன்றிப் பிற தகாதனவற்றையும்  உட்படுத்துவதாத் தெரிகிறது.

குற்றமின்மை என்பதை innocence என்ற சொல்லுக்கு ஈடாக வழங்கலாம்.  ஆனால் எந்த நீதி மன்றமும் ஒருவனைக் "குற்றம் அற்றவன்" என்று கூறுவதில்லை; சுமத்தப்பட்ட குற்றம் நிறுவ (அல்லது "நிறுவிக்க" > நிரூபிக்கப்) படவில்லை என்றே கூறி விடுப்பதாகத் தெரிகின்றது. இவ்விரு முடிவுமொழிதலும் வெவ்வேறானவை என்பது எளிதில் புரிந்துகொள்ளத் தக்கனவே.

நிரபராதி என்ற சொல்வழக்கும் உள்ளது. இது நிர்+ அபராதி என்று பிரியும்.  நிரபராதி என்றால் அபராதம் விதித்தற்கு உரியனல்லன் என்பது பொருள். அபராதி என்பதன் முன்னதான அபராதம், குற்றத்தையும் தண்டத்தையும் ஒருங்கே குறிப்பதால்  பண்டு இவை ஒன்றாகவே கருதப்பட்டன என்று தோன்றுகிறது. எனினும்  அபராதம் "குற்றம்" என்னும் பொருள் உடையதாய் இருப்பதால் இக்கருத்து   இலக்கிய வழக்கன்று.

அபராதபஜ்ஜின என்பது சிவனின் பெயர்களில் ஒன்று. நேர்ந்துகொண்டபடி செலுத்தாத காணிக்கை பின் செலுத்தப்படும்போது அதற்கு அபராத காணிக்கை என்பர்.

குற்றமும் நற்றமும் என்பது சொற்கள் இணையாக நிற்கும் தொடர்

நற்றம் என்ற தமிழ்ச்சொல் இப்போது பெரிதும் வழக்கிலில்லை. அது குற்றமற்ற தன்மையைக் குறிக்கிறது. இப்போது மறக்கப்பட்டுள்ளது. தகுந்தபடி மீண்டும் பயன்படுத்த எளிமையானது.

வெள்ளப் பெருக்கினை.........

வெள்ளப் பெருக்கினைப்போல் == மூளை
வேலை செயத் தொடங்கி
நள்ளி  ரவுகழிந்தும் == எண்ணம்
நயமாய்க் குவிந்ததடி!

நுள்ளி விரல்களிலே --- வெல்லம்
நுகரக் கிடைத்ததுபோல்
கள்ளம் இலாததடி --- சுவை
காணப் பொருந்துவதே ,

கொழுந்துச்  சுடுநீ ரை   === அருந்தவிக்
கோலம் விளைந்ததுவோ?
எழுந்த கருத்துகளும் -=== கவியின்
விருந்தாய்  இனித்திடவே

கொழுந்துச் சுடு நீர் -  hot tea.




திங்கள், 26 ஜனவரி, 2015

காசு கப்பி

தமிழ் மொழியில் இணைச் சொல்  தொடர்கள்  பல  வழங்கி வருகின்றன. "கையில் காசு கப்பி  இல்லாமல் கட்டப் படுகின்றான் " என்று பேசுவது காதில் விழுகிறது. 
கப்பி  என்பதென்ன?
இது பல பொருள் உடைய சொல்லாகும்.

1.  அரை குறையாய் அரைத்த மாவு. அல்லது தானியங்கள் பிற.  2 சாலை செப்பனிடுதலில் பயன்படும் சிறுசிறு கற்களின் குவியல், சீமைக்காரையும் கல்தூள் முதலியவையும் கலந்தது. அகழ்த்துபாரத்தில் கலக்கப்படுவது. 3. கயிறு இழுப்பதற்குரிய தொங்குருளை . 4 தறி உருளை.  5. பொய், உண்மைக் கலப்பு ஏதுமில்லாச்   செய்தி.  

தோசைக்குக் கப்பி  காய்ச்சி ஊற்றினால் மென்மை பெறுமென்பர்.

காசு கப்பி என்ற தொடரில் அகரவரிசைப் பொருள்கள் ஏதும் பொருந்துவதாகத் தெரியவில்லை.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்றான் கம்ப நாடன். கடன் வாங்கினவன் உள்ளத்தைக் கவலை கப்பிக்  கொள்ளும். கடன் என்பது பொருள். கப்பி  என்பது கடன்பெற்றதன் (அப்பொருளின்)  விளைவு. விளைவானது பொருளுக்கு ஆகுபெயராய் காசில்லாத காரணத்தால் பெற்ற கடனைக் குறிக்கும்.

தொடருக்குக்  "காசும் இல்லை; கடன்பெற வழியும் இல்லை; அப்படிக் கட்டப்படுகிறான்" என்று பொருள்.