சங்க காலப் புலவர் பெருஞ்ச்சாத்தனார் பாடிய ஓர் அழகிய பாடலைப் பாடிப் பொருளை அறிந்து இதுபோது மகிழ்வோம். சங்க இலக்கியச் சுவை கண்டு சின்னாட்கள் கழிந்துவிட்டன.
மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்கத்
தோற்றமல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக் கன்றே தோழி மால்வரை
மழை விளையாடு நாடனைப்
பிழையேம் ஆகிய நாம்இதற் படவே . குறுந் 263.
அருஞ் சொற்கள்:
மறி = ஆடு . குரல் = குரல்வளை. பிரப்பு = படையல் பாத்திரம். இரீஇ = படையலிட்டு . செல்லாற்றுக் கவலை - ஆற்று நடுவில் உள்ள திட்டு .
பல்லியம் = பலவகை வாத்தியங்கள். கறங்க = இசைக்க. தோற்றம் = இங்கு முருகன், அல்லது = அல்லாமல்.; நோய்க்கு = காதல் நோய்க்கு ; மருந்து ஆகா:= தீர்வு தரும் மருந்து ஆகமாட்டாது. வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி = மற்ற தெய்வங்களுக்கு வாழ்த்து , வெறுப்பில்லை ; அவை பலவும் போற்றினோம் என்றபடி .
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல் = இவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று சொல்வதும் நடந்துகொள்வதும் ; நோ = வருத்தம். தக்கன்று = (அடையத்) தக்கது . மால் வரை = பெரிய மலை இடத்து ; மழை = மழை (தரும் முகில்கள் ). நாடன் = நாடுடையோன் (அவனை )
பிழையேம் = மாற மாட்டோம் ; ஆகிய = (என்று) நடப்பில் காட்டிய ; நாம் = (தலைவி தோழி ஆகிய) நாம். இதற் படவே = இந்தப் பேய் விரட்டில் பங்கு பெறவே . இதற் படவே = இதன் +படவே , இதனில் படவே.
பேய் விரட்டு நிகழ்வுகள் இப்போது சில இடங்களில் இன்னும் நடத்தல் போலவே சங்க காலத்திலும் .நடைபெற்றன . மலை நாட்டுக் காதலன்பால் மனம் பறிகொடுத்த தலைவி முருகப் பெருமானிடம் வேண்டி அக்காதல் நிறைவேறும் நாள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்னையோ இக்காதலின் ஆழம் உணராதவளாய், தலைவிக்குப் பேய் பிடித்துவிட்டதாக நம்பிக்கொண்டு, ஆற்று நடுவில் உள்ள திட்டில் பேய் விரட்டுப பூசை போடத் துவங்கி விட்டாள்.
பூசைகளுக்குத் தேர்வாவன பெரும்பாலும் பாடலில் வரும் இதுபோலும் .இடங்களே. தெய்வங்கள் வாழ்விடம் .இவை என்ப .( சீரங்கம் இத்தகையதே. அரங்கன் அமர்விடம்.) இந்நிகழ்வால் தலைவியும் தோழியும் வருந்தினர். எங்ஙனமாயினும் காதலைக் கைவிடாள் தலைவி. மழைமுகில்கள் கொஞ்சும் நாடனைப் "பிழையேம்" என்கிறாள். பேய் விரட்ட ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் பங்கு பெறுதல்போல் நடந்து`கொள்ள வேண்டியதுதான்.
பிரம்பினால் பின்னப்பட்ட பாத்திரத்தில் படையல் செய்தனர் . இது பிரப்பு எனப்பட்டது, பிரம்பு > பிரப்பு . (வலித்தல் ) தினை என்பது ஒரு கூலம்.
முருகன் சிவனின் தோற்றம் எனவே, "தோற்றம் " என்றார் புலவர். அருணகிரியாரும் இங்ஙனமே பாடினார்.
முருகன்தான் காப்பாற்ற வேண்டியவன் . மற்ற தெய்வங்கள் வாழ்த்தப் பெறும். என்றாலும் காதலுக்குக் கைகொடுக்க வரும் கடவுள் முருகனே. என்பது தலைவி தோழி ஆகியோர் துணிபு. வாதாடும் குறவரிட வள்ளிப் பங்கன் ஆதலினாலோ?
அளபெடைகள் அழகுடையான.
நோ தக்கன்றே : இங்கு "தக்கன்றே " என்பதைப் பிரித்துப் பார்ப்போம்.
தகு + அ +து = தக்கது.
தகு + அன் + து = தக்கன்று.
தகு + அ + து = தகுவது .
இவை ஒரே பொருளன . இங்கு அன் எதிர்மறைப் பொருளில் வரவில்லை.
செய்தனம் என்ற வினைமுற்றிலும் finite verb அப்படியே.
நில்லன்மீர் = நில்லாதீர். இங்கு .எதிர்மறை.. அல் > அன் .
புலவர் பெருஞ்ச்சாத்தனார் இங்கு தலைவியை ஓர் இறைவணக்கப் பண்பாடு உடைய பெண்மணியாகக் காட்டியது அறிந்து போற்றத்தக்கது ஆகும். அவள் நம்பிக்கையுடன் வேண்டிகொண்டது முருகப் பெருமானிடம். பூசையோ மற்ற தெய்வங்களுக்கும் நடைபெறுகின்றது. வேற்றுப் பெருந்தெய்வங்கள் அவளுக்கு உதவும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும்,
அவற்றையும் வாழ்த்த அவள் தவறவில்லை. இதுவே நல்ல நாகரிகம் என்பதும் இறைக்கொள்கை நல்லிணக்கம் என்பதும் இங்குக் கோடிட்டுக் காட்டவேண்டிய உயர் பண்புடைமை ஆகும்.
edited
edited again: 19.2.2019 some letters (alphabet) missing. Inserted.