வெள்ளி, 14 செப்டம்பர், 2012

different views


பற்றாயம் பட்டு மீண்ட
பாழெலி தனக்குக் கண்ணில்
உற்றன அனைத்தும்  ஊறே
உய்த்திடும் பொறியாய்த் தோன்றும்
குற்றமொன்  றறியாக் கொள்கைக்
குரிசிலுக் கெல்லாம் நன்மை
பற்றின வாகும் என்றே
பகர்தலும் வேண்டா மன்றோ!

பற்றாயம் -  எலிப்பொறி, கண்ணில் உற்றன =  கண்ணிற் பட்டவை  ஊறு = துன்பம்  உய்த்தி டும் = ஏற்படுத்தும், 

வியாழன், 6 செப்டம்பர், 2012

தாயவட்கோ ஈடொன் றில்லை,



சென்றுவிட்ட தாயுடலைப் புதைத்தல் இன்றி
சீரூட்டிப் பேழைக்குள் கிடத்தித் தானும்
பொன்றுமட்டும் தன்னறைக்குப் பக்கம் வைத்த
புதல்வனுமே தாய்ப்பற்றுக் கெடுத்துக் காட்டாம்.
இன்றெவரும் செய்தற்கோ  உரிய தன்றே
என்றாலும் நெஞ்சகத்துள் பொங்கும் அன்பாம்
மன்றறியக் காட்டியதோர் மகனே என்போம்
மாநிலத்துத் தாயவட்கோ ஈடொன் றில்லை,

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4308306.stm
Twenty years with mother's corpse
By Omar Farooq
BBC News, Hyderabad                     

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

multiple marriage scam

Now, on a recent funny criminal case in TN.


ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!

மடுத்தசெவி எல்லாம் விழுந்து -- அதை
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார் எவ்வாறு அறிகிலேனே.

மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு அறிகிலேனே!


#அணல் -தொண்டை, வாய்.  அதை : இங்கு " அணல்  " என்ற சொல்லைப் பயன்படுத்தி வேறிடத்தில் எழுதியுள்ளேன் 

ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.

மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )

வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.