வியாழன், 29 டிசம்பர், 2016

நத்தை என்பது..........

நத்தை என்பது ஓர் ஊரும் உயிரி.  இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டதென்பது எவ்வித ஆய்வுமின்றியே அறிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

நத்துதல் என்பது ஒட்டிக்கொண்டு இருத்தல்,  பிறவற்றை  அடுத்து வாழ்தல்  என்று பலபொருளைத் தரும்.  "பிறரை நத்தி வாழமாட்டேன்" என்ற வாக்கியம் காண்க.

நத்து + ஐ = நத்தை.

நத்தை என்பது தமிழ்ச்சொல், தவளை என்பதுபோல.

செடி,  மரம் என்று ஏற்ற எதிலும் ஏறி ஊர்வது  நத்தை. நீர் நத்தைகளும் உள .

புதன், 28 டிசம்பர், 2016

ஜெய லலிதா பொற்செல்வி

பாண்டியனின் மகள்போலப்
பைந்தமிழ்ப்பொற் செல்வியெனப்  
பணிந்துபலர்  உயர்ந்தேத்தப்
பார்புகழக் கோலோச்சி
மறைந்தஜெய லலிதா,      தன்னை ~~

ஈண்டுவளர்த் துயர்த்தியவர்
இருந்தாரேல் இக்கதியும்
எய்த லுண்டோ   என்றுகுரல்
எழும்பிடவே நன்றுபல
புரிந்தவரே முதல்வர்    முன்னாள்..



நல்லவரும் புகழ்கின்றார்;
நல்லதுமுன் செய்தவராய்
உள்ளசில நிகழ்வுகளால்
ஊரெதனைக்  கூறிடினும்
 நல்லோரே யாங்க     ளென்பார்,


எல்லவரும் புகழ்கின்றார்
என்றிடிலோ யார்க்குமொரு
மீட்பரெனத் திகழ்ந்தவரே
அவரெனவே தெளிவுறுத்தும்
வரலாறே        இதுவோ     பண்பால்..


செவ்வாய், 27 டிசம்பர், 2016

சொல் திரிபுகள் : ய > க;( மற்றும் கி ள் கெடுதல் )

இந்த  மூன்று வடிவங்களையும் பாருங்கள்.

சொல்றீங்க >  சொல்றீக >  சொல்றிய.

சொல்றீங்க என்பது சொல்கிறீர்கள் என்பதிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

கி ~  கெட்டது, அதாவது இல்லாமல் போய்விட்டது.
ர் ~  இதற்குப் பதிலாக ங் தோன்றியது.
ள் ~  கெட்டது.

இதுபோல,  ஒன்றோ பலவோ எழுத்துக்கள் அல்லது ஒலிகள் மாறுதலையும் மருவுதலையும் உடைய வேறு சொற்களைக் கண்டுபிடியுங்கள்.

 சொல்றீக >  சொல்றிய.

இங்கு ஈற்று எழுத்து க என்பது ய என்று மாறியுள்ளது. இப்படிப்
பிற சொற்களில் மாறியுள்ளதைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.

இதற்குப் பல உதாரணங்கள் முன் இடுகைகளில் உள்ளன.

இப்படிச் செய்தால் சொற்கள் எப்படித் திரிகின்றன, எப்படி மருவுகின்றன என்பதைச் சொல்லும்போது, தெரியாமல் அதை
மறுப்பது தவிர்க்கப்படும்.

சொல் திரிபுகள் :  ய  > க;(  மற்றும் கி  ள்  கெடுதல் )