வியாழன், 31 ஜூலை, 2025

அமானுடம் சொல்

 மனிதன் என்பவன் தன்னையே சீரிய, மிக உயர்ந்த  பிறவியாக எண்ணிக் கொண்டவன். என்றாலும் இயல்பு நிலை கடந்த நிகழ்வுகளைக் காணும்போதும் கேள்விப் படும் போதும்  அவற்றை "அமானுட மானவை  " என்று சொல்வதுண்டு. இச் சொல் ஒரு  பிற்காலப் புனைவு தான்.  சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தமிழர்கள் உண்டாக்கிய சொல்தான்.

இது எப்படி அமைந்தது என்பது காண்போம்.

மனிதன் என்ற சொல் மன்  என்ற  அடியில் தோன்றுவது. மன் என்ற  அடிச்சொல்லுக்குரிய பொருள்களில் நிலைபெறுதல் என்பது சிறப்பானது. எல்லா உயிரினங்களிலும் சிறப்புடையவன் ஏன் எனில் கலை பல அறிந்தவன். அறிவியல் கண்டவன் . மன் + இ+ து +அன் என்றபடி அவனுக்குச் சொல் அமைந்தது. மற்ற உயிரினங்களைவிடத் தன்னைப் புவியி லெங்கும் நிலைபேறு உடையோனாய்க் கருதிக் கொள்பவன்.

முன் எப்போதினும் நிலைபேறு என்பதற் குரிய பொருள் இப்போதுதான் மனிதனுக்கு  மிகுதியும பொருந்தினதாகத் தெரிகிறது. படைப்புத் திறன் மிக்குவந்து சி றந்தவனாகிவிட்டான்.

நாளேற நாளேறச் சிறப்படைந்துவிட்டான்

இப்போது "அமானுடம்" என்ற சொல். அ என்பது  மறுதலை , ( "மாற்று இடம்").  அல்லாதது என்பது பொருள்.  மனிதனுக்குரிய இயல்புகளுக்கு மாற்றம் உடையதாய் இருத்தல் என்று பொருள்.

அகரம் இங்கு முன்னொட்டாக வருகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது




ஆபயன் என்னும் சொல்

 இன்று ஆபயன்  என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.

இது  இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட்  பட்டால்  ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும்.  அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.

பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி  மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்க.









திங்கள், 28 ஜூலை, 2025

வெடி, வேட்டு என்னும் சொற்கள்.

 இன்று வெடி வேட்டு என்னும் சொற்களைக் கருதுவோம்.

வெடி வேட்டு என்பன இடையின வகரத்தில் தொடங்கிய சொற்களாயினும் வல்லின டகரம் வருதலால், வெடிப்பு நிகழ்வுக்குப் பொருத்தமான சொற்களாய்விடுகின்றன. இடிபோலும் இயற்கை நிகழ்வுகளி லிருந்து மனிதன் வெடியொலியையும் அதன் தாக்ககத்தினையும் நன்கு அறிந்துகொள்வா னாயினன்.  வெடுக்கெனல் என்பது வேகத்தையும் ''டுக்''கென்ற ஒலியையும் ஒருங்கே குறிக்கவல்லதாய்  இருக்கிறது.

வெடி என்பதில் ஒலிமுறையில் நாம் காதில் அதிர்வையும் காட்சிக்கு விரைவையும் கண்டுபிடித்தாலும் சேர்த்துவைத்த வெடிபொருள் ஓரிடத்திலிருந்து சட்டென்று பிளந்துகொண்டு வெளிப்படுவதையே முதன்மையாக அறிகிறோம்.  இவ்வாறு விடுதலுக்கு விள்> விடு>வெடு> வெடிப்பு; விள்> வெள்> வெடி> வெடிப்பு;  விள்> வெள்> வெடு> வேடு> வேட்டு என்றபடி சொற்கள் திரிவன வென்பதை அறியலாம்.

வெடிக்குமிடத்தில் உள்ள நிலம் அல்லது பிற இடம் சேர்ந்து இருத்தலை விட்டு, அங்கு விடுபாடு அல்லது பிளவு ஏற்படுவதையும் அறியலாம்.

வெடிக்கும் இடத்தில் ஒரு வெட்டு விழுந்திருந்தால்,  வெட்டு> வேட்டு என்று முதனிலைத்  திரிபு இருப்பதை உணரலாம்.

இவற்றை உணர்ந்து தமிழ்ச் சொல்லமைப்பை உணர்ந்து மகிழ்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


ஞாயிறு, 20 ஜூலை, 2025

சியாமளா என்ற பெயர்.

 மால்  என்பது மாலுதல் என்று வினைச்சொல்லாய்  மயங்குதலைக் குறிக்கும். மயங்குதலாவது கலத்தல்.  எடுத்துக்காட்டு:  இருளும் ஒளியும் கலந்து மயங்கிய நேரம் மால் - மாலை எனப்படுதல் காண்க.  பல பூக்கள் கலந்த தொடுப்பு மாலை என்பதும் அறிக.  மனிதன் மயங்குதல் தெளிவும் தெளிவின்மையும் கலந்திருத்தல். இதிற் தெளிவின்மை கூடுதலாக இருக்கும்.

கருமையும் வெண்மையும் கலந்த நிலை மால்> மா என்று வரும். லகர ஒற்று மறைந்த சொல். 

சியாமளா என்ற சொல்லில் மால் என்ற சொல் மாலா> மலா என்று குன்றி நீண்டது அறிக.

சீரிய மால் >  சீரிய மாலா >  சீயமாலா >  சியாமளா என்று திரிந்த சொல்லே இது.இதில் மாலா என்ற சொல்லே நிறம்  காட்டிற்று. சீரிய என்ப ரி இடைக்குறை. தமிழல்லாத மொழியில் சீரிய > சீய > சியா என்று பிறழ்வு மேற்கொண்டது.

மாலுதல் என்ற வினைச்சொல் தமிழ். மாலினேன், மால்கிறேன், மாலுவேன் என்பன வினைமுற்றுக்கள்.

சீரியமாலை > சீயமாலை > சீயமாலா > சியாமலா>சியாமளா.

லகரத்துக்கு ளகரம் மாற்றீடு ஆனது.  மங்கலம் > மங்களம் ஆனது போலும் திரிபு . மங்கல் என்பதில் அல் என்பதே விகுதி.  மங்குதல் வினை: >மங்கு, அல் அதனுடன்  அம் விகுதி இணைந்தது.  வெண்மை குன்றி மஞ்சள் நிறம் ஏற்படும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது.

வியாழன், 17 ஜூலை, 2025

மூலிகை என்ற சொல் தமிழ்

 இப்போது மூலிகை என்ற சொல் காண்போம்.

மூலச் சொல் முல் என்பது. இதிலிருந்து அமைந்த பண்டைச் சொற்களில் இன்னும் வழங்கிக்கொண்டிருக்கும் சொல் முலை என்பது.  முல் என்ற அடிக்கு அர்த்தம் என்ன என்றால் ''முன்னிருப்பது''  என்பதுதான். முல்லை என்ற பூவின் பெயர் இன்னொன்று. ஐந்து நிலங்களில் முல்லை நிலம் என்பதும் ஒன்றாக இருப்பதால் முல்லை என்பது ஒரு மிக்கப் பழமையான ஒரு சொல்லாகும். நிலங்கள் நான் காகவோ ஐந்தாகவோ பிரிக்கப்படு முன்பே இச்சொல் இருந்த காரணத்தால்தான், முல்லைப்பண் முதலிய சொல்லமைப்புகள் ஏற்பட்டன. காந்தன், காயாகுருந்து, கொன்றை, துளசி முதலிய மண்ணில் முளைப்பன முல்லை நில மரங்கள் எனப்பட்டன என்பதும் காண்க.  வேறெங்கும் எவையும் முளைப்பதில்லை என்று கூறலாகாது.  வெள்ளி முளைக்கிறது என்ற  சொல்வழக்கு இருக்கிறதே. அது வேறுவகையான முளைப்பு ஆகும்.

இவை கூறியது முல்லை, முலை எனப்படுவன பழஞ்சொற்கள்   என நிறுவுதற் பொருட்டு.

முல் > மூல்.  குறிலும் நெடிலும் சொற்களுக்கு முதலாய் வரும். வருக, வாருங்கள் ( வாங்க)  என்று வா என்ற சொல்லே நெடிலிலும் குறிலும் பகுதிகள் மாறுகின்றனவே,  இவை அறிந்து தெளிக.

இ -  என்பது ஓர் இடைநிலை.  அன்றி ''அருகில்'' என்ற பொருளை எடுத்துக்காட்டினும் இழுக்காது என்று உணர்க.

கை என்பது பக்கத்திலிருப்பவை என்று உணர்த்தும் ஒரு விகுதி.  தமிழன் வாழ்ந்த நிலத்தில் இந்த மூலிகைகள் வளர்ந்து கிடந்தன.  அவற்றை அவன் பயன் கொண்டான் என்பதுதான் சரித்திர உண்மை.  கட்டுக்கதைகள் ஏதுமின்றி சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுபவை சரித்திரம் அல்லது வரலாறு எனப்படும்.  திறம் என்பது விகுதியாக வருகையில் திரம் என்று மாறிவிடும். ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொல்லமைப்பின் பகவாக வரும்போது திறம் என்ற சொல் திரம் என்றாகும்.

மூலிகை என்ற சொல் இவ்வாறு அமைந்த எளிமையான சொல்.  இது சமஸ்கிருதம் என்று சிலர் கூறுவதுண்டு.  மூலிகை என்பது சிற்றூர்ச்சொல். இது பூசைமொழியிலும் சென்று வழங்கியது.  இப்போது பூசைமொழியும் இந்திய மொழியே ஆதலால், அதுவுல் தமிழினுள் அமைந்ததே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.

இப்பதிவு பகிர்வுரிமை உடையது,. 

செவ்வாய், 15 ஜூலை, 2025

புன்மை ஒழிந்து இனிமை உண்டானால் அது புனிதம்.

 புனிதம் என்பது தீமை அற்ற நிலை. விலக்கத்தக்க எதுவும் இல்லாமலாவது. இதற்கான சொல் எப்படி உண்டாயிற்று?

ஓரிடத்தில் சேறும் சகதியுமாய் இருக்கிறது.  புவியில் எந்த இடத்தை நோக்கினாலும் கல்லும் மண்ணுமாகத்தாம் இருக்கிறது.  இந்த இடங்களைத் தூய்மைப் படுத்தி கடவுளைத் தொழத் தொடங்குகிறோம். தூய்மைப் படுத்தும்போது அது புனிதமான இடமாக மாறிவிடுகிறது.

புன்மை என்பதன் அடிச்சொல் புல் என்பதுதான். புல்+ மை > புன்மை. தூய்மை செய்யப்பட்டு இனிதானால்:

புல் + இனிது + அம் >  புல்லினிதம் > புனிதம்  ஆகிவிடும்.

அழுக்கு நீங்கும் வண்ணம் தூய்மை செய்து முடிக்கவேண்டும்.

மறைமலையடிகள் அதைப் புனல் என்ற சொல்லினின்று விளக்கினார். புனல் இனிதாக்குகிறது என்றார்.

இதன்படி புனல்+ இனிது + அம் > புனலினிதம் >  புனிதம்.  கழுவுதலால் புனிதம் உண்டாகிறது.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  ,மேலைநாட்டு மொழியன்று.  அதிலிருந்து பல சொற்களை மேலை நாட்டினர் கடன்பெற்றனர். மொழிவளத்தை உண்டாக்கிக் கொண்டனர்.  

உரோமப் பேரரசுக்கு ஓர் ஆட்சிமொழி தேவைப்பட்ட போது அவர்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களைக் கடன்பெற்றனர்.  தமிழ் நாட்டிலிருந்து  ஒரு புலவர் குழுவே சென்று உதவிற்று என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஆய்ந்து கூறியிருக்கிறார்.  இந்த விவரங்களை மயிலை சீனி வேங்கடசாமி விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

புன்மை ஒழிந்து இனிமை ஆவதே புனிதம் ஆகும்.  இச்சொல் ஓர் இருபிறப்பி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.

திங்கள், 14 ஜூலை, 2025

ஐப்பசி மாதம், அப்பியை மாதம் என்னும் மாதப்பெயர் திரிபுகள்.

 இப்போது ஐப்பசி என்ற மாதப்பெயரையும்  அதன் மாற்று வடிவங்களையும் ஆய்ந்து காண்போம்.

ஐப்பசி என்ற சொல்லை  ஐ+ பசி என்று பிரித்து  அதற்குப் பொருள் சொன்னால் ஒருவேளை பொருளும் ஆய்வும் தவறாக முடியலாம்,  ஏனெனில் ஐ என்பது சொல்லாக்கத்தில் ஒரு பகவு ஆயினும் பசி என்பது  சரியான பொருளைத் தரவியலாத திரிபு   ஆகும்..

பசி என்பதற்கு இங்கு உடலுக்கு உணவு தேவைப்படுதல் என்ற பொருளுடைய சொல்லன்று.

ஐ என்ற முன்வரும் பகவு முன்  ஆசு என்பதன் திரிபு.   ஆசு என்பது  ஆதல் என்ற சொல்லின் முதலெழுத்து.  சு என்பது ஒரு விகுதி.   ஆசிடையிட்ட எதுகை என்ற தொடரில்  ஆதலென்ற வினையின் முதலெழுத்து வருகிறது.  ஆசு என்றால் பற்றுக்கோடு என்ற பொருளும்  உள்ளது. பற்றுக்கோடு என்பது பேச்சுவழக்கில் ஆதரவு என்ற சொல்லால்  குறிக்கப்படும்.  ஆ என்பது பசு என்ற பொருளில் வருவதுடன்  ஆ(தல்) என்றும் வினையாகவும் உள்ளது.   ஆ என்பது  மாடு என்று பொருள்படுகையில்  ஆக்கம் தரும் விலங்கு என்று உணர வேண்டும்.  அதனால்தான் அதற்கு ஆ என்று பெயர்.  மாடு என்பதும் செல்வம் என்று பொருள்தரும்.  

இகம் என்பது  இ+ கு+ அம் என்பன இணைந்த சொல்லாதலாதலின் இவண் சேர்ந்து இணைந்திருப்பது என்று பொருள் காணவே,  இவ்வுலகம் என்றும் இங்கிருப்பது என்றும் பொருள்படும்.

ஐப்பசி   என்பது முன்னர் ஐப்பிகை என்று கல்வெட்டில் வந்துள்ளது. இது ஐ+ பு + இகை என்ற பகவுகளின் இணைப்பு.  பு என்பது இடைநிலை.  இகை என்பது இகம் என்பதன் திரிபுதான்.  இறுதி ஐ  விகுதி  பெற்றது.

இகு என்பது அம் விகுதிபெறாமல்  இகரவிகுதி பெற்று  இகி என்றாகிப் பின் இசி என்றாயிற்று. இது ககர சகரப் போலி.    சேரலம் >கேரளம் என்பது போல.  இது பிற மொழிகளில் வரும்.  ஆங்கிலத்திலிலும் ஐரோப்பிய மொழிகளிலும் காணலாம்.  அக்டோபர் மாதத்தில் தொடரும் பருவ காலமாகையினால் ஐப்பசி என்பதற்குத் தொடரும்  மாதம் அல்லது காலம் என்று பொருள் உரைத்தல் வேண்டும். 

ஆய்ப் பயில்வது என்ற தொடரை எடுத்துக்கொண்டால்  :  ஆய் > ஆயி>  ஆசி> இது குறுகி: அசி  >  பசி  ( ஐப்பசி)  என்று  ஐப்பசி என்பதுடன் தொடர்பு படுவதை உணரலாம். ஐப்பசி என்பது  பு+ அசி தான். பயி என்ற இரண்டெழுத்துகளும்  பயி > பசி என்றாதலைக் காணலாம்.  ஆகவே ஆய் என்பதை அய்> அயி> ஐ  என்று நிறுத்திவிட்டு,  பயி > பசி என்று காணின்,  ஐ-- பசி  என்று எளிதாக வந்திருக்கின்றது. ஐப்பசி என்பதற்குப்  பலவாறு விளையாடிக்கொண்டிருந்தாலும்  அன்பருக்கு ஆய்ப் பயில்வது என்று மட்டும் சொல்லி மற்றவற்றைத் தராவிட்டாலும் ஐப்பசி என்பதை விளக்குதல் எளிதுதான்.

தொடர்பு குறிக்கும் மாதம் ஆதலால்  அப்பி இயைப்பதான மாதம் என்றும் சொல்லிவிடலாம். எல்லாம் இதன் பால் உள என்று சொல்லுமளவுக்குப் பொருத்தமுடைய மொழி தமிழ். ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தமிழில் காட்டுவது  இந்த வசதியினால்தான்.

உலகத் தொடக்கமாய் இருந்ததனால் பலவும் ஒன்றாய்க் காணக்கிடைக்கின்றது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை தரப்படுகின்றது.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

வில்லாளன், விக்கிரமி சொற்களில் மறைந்திருக்கும் உண்மை..

 விக்கிரமி என்ற சொல்லுக்குச் சிங்கம் என்ற பொருளுடன் வீரம் என்ற பொருளும் கிடைக்கிறது.  என்ற போதிலும் ஒப்பீட்டுச் சொல்லியல் என்று வருகையில், அதனை வில் என்ற பழைய போர்க்கருவியின் அடிப்படையில் அமைந்த சொற்களுடனும் பொருண்மையுடனும்தான் நிறுத்திப் பார்க்கவேண்டும்.  விக்கிரமி என்ற சொல் ஒரு கருவிப்பெயரின் அமைப்பிலிருந்து எழுந்த சொல்லாகும் என்று உணர்க. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வில் + கு+ இரு + அம் + இ  என்று இதைப் பிரிக்கவேண்டும்.  இவ்வாறு செய்கையில் வில்லுக்கு இருக்கின்ற அமைப்பில் இணைந்திருப்பது என்ற பொருள் கிடைக்கிறது. இந்த வில்லின் அமைப்பில் இணைந்திருப்பது எது என்று ஆராய்ந்தால் அதுதான் வீரம் என்று பொருண்மை கிட்டுகின்றது.  ஆகவே விக்கிரமி என்பதற்கு வீரம் என்ற அகரவரிசைப் பொருள் கிட்டிவிடுகின்றது.

பண்டைக் காலத்தில் வில்லும் ஒரு சிறந்த போர்க்கருவியாய் இருந்தது. வில்லாளன் என்ற சொல்லும் இக்கருவிகளைப் பயன்படுத்திய வீரர்களின் மறப்பண்பினைப் போற்றி எழுந்த சொல்தான். இதையே விக்கிரமி என்ற சொல்லும் எடுத்தியம்புகின்றது.

சொற்புணர்ச்சித் திரிபின் காரணமாக விக்கிரமி என்ற சொல் அவ்வளவு தெளிவாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.

வில்லுக்கும் விக்கிரமிக்கும் உள்ள தொடர்பினைக் கண்டீர்கள்.

இதில் விற்கு என்பது விக்கு(இரு) என்று வந்தது முறையாக வந்த திரிபுதான். விற்கு என்பது விக்கு என்று வருவது பேச்சுவழக்குத் திரிபுபோல் தோன்றலாம். நல்+கீரன் என்பது நக்கீரன் என்று வர, இந்தவகைத் திரிபுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. நல் என்பது ந என்று கடைக்குறையானது என்றால் அதுவேபோல் வில் என்பது வி என்று கடைக்குறையாகலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.



சனி, 12 ஜூலை, 2025

நாள் தினம்

  இன்று நாள் தினம் என்ற சொற்களை ஆய்வு செய்வோம்.

நாள் என்ற  சொல் நள் என்ற அடி யிலிருந்து வருகிறது. முத னிலை நீண்டு திரிவதன் மூலம் இச் சொல் அமைகிற து.

அதாவது   நள் > நாள் .   நள் என்பதன்  பொருள் "நடு"  என்பதும் "நாள்" என்பதும் ஆகும்.  ஒரு விடியலுக்கும் இன்னொரு விடியலுக்கும் நடுவிலிருப்பதால்  இது பொருத்தம் ஆகிறது  

நள் > நடு :  இதற்கு "இடைப்பட்டது"  என்ற பொருள் உள்ளதனை "நள்ளிரவு" என்பதில் நள் என்பதற்கு உள்ள பொருளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 தினம் எனபது தமிழன்று என்பர் எனினும் இதுவும் தமிழச் சொல்லே என்று ஆசிரியர் பிறர் கூறுவர்.  தினம் என்பது தீ என்பதிலிருந்து  திரிந்தமை  இதற்குக் காரணம்.  தீ + இன் + அம் > தி + ன் + அம்> தினம் என்று முதனிலை குறுகுதல் வா> வந்தான் என்று பகுதி குறுகுதல் கொண்டு  அறிக.  இனி, சா + அம் > சவம் என்பதனாலும் தெளியலாம்.  இவை [ தினம் ] ஆசிரியர் பிறர் அறிந்து கூறியவை.   

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

இதை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 





FOR YOUR KIND ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 





அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு



FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 


செட்டியார் சிறஷ்டார்

 இந்தச் சொல்லை இன்று பார்ப்போம்.

செட்டியார்கள் என்போர், வணிகத்தின் மூலம் அரசனிடம் மிக்க மதிப்பு பெற்றவர்கள் ஆயினர்.  குடிமக்களில் மிக்கச் சிறப்புடையோர் செட்டியார்கள்.

சிறப்பு என்ற சொல்லில் உள்ள சிற என்ற சொல்லிலிருந்தே அவர்களுக்குப் பெயர் அமைந்திருக்கலாம். சிறப்புற்றார் >சிறற்றார்>  சிறஷ்டார் என்று வடமாநிலங்களில் பெயர் உண்டாகிற்று/

ஆனால்  எட்டிப்பூ அணிவித்து உயர்த்தப்பெற்றதால்,  எட்டி> செட்டி என்று உண்டானது என்பது தேவநேயப்பாவாணர்  ஆய்வு 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிவுரிமை  உடையது.


செவ்வாய், 8 ஜூலை, 2025

மகிமை இன்னொரு முடிபு

 மகிமை என்ற சொல்லுக்கு ஆக்கம் கூறிய புலவர் பலர். யாமும் முன் கூறினோம். இப்போது இன்னொன்று  கூ  றுவோம்.    

இச்சொல்லை மக + இம்மை என்று பிரித்துப் பின் இம்மை என்பதை இமை என்று இடைக்குறை  ஆக்குக. பின் "மக இமை" என்ப து புணர்க்க, மகிமை ஆகும். .மக என்பதன் ஈ ற்று  அகரம் கெடும். கெடவே "மக் + இமை" என்பது மகிமை யாம்.

பொருள்: இம்மையில் மக்களுடையர் ஆதல் மகிமை. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.



வியாழன், 3 ஜூலை, 2025

மாலுதல் மாலை

 மாலுதல் என்னும்  வினைச் சொல்: மயங்குதல் -  கலத்தல் என்பன பொருள்


சொல்லின் அடி மால் என்பதுதான். இதனுடன் ஐ விகுதி இணைந்து வர, மாலை என்ற சொல்  உண்டாகும். பூக்கள் பலவும் கலந்து தொடுப்பதால் கலத்தல் பொருளதாயிற்று. பூக்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குவன என்பதும் அறிக. 

இனி அடிச்சொல் ஆ விகுதி பெற்றும் சொல் ஆகும். அப்போது மாலா என்றும்  சொல்லாம். இச்சொல் பிறமொழிகள் பலவினும் சென்று கலக்கும். இது தமிழுக்கும் பெருமையே. பலா நிலா என்பனவும் ஆ விகுதி உடையனவே . நீலா என்ற பெயரில் ஆ விகுதி கண்டு கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பிறருடன் பகிர்ந்து கொள்க.







செவ்வாய், 1 ஜூலை, 2025

வருத்தகம் அல்லது வர்த்தகம்,

 ஒரு நாட்டுக்கு வேண்டிய பொருள்களை வருவித்துக் கொள்ளுதல் அதாவது அப்பொருள்களை விளைவிக்கும் நாடுகளிலிருந்து வரவழைத்துப் பெற்றுக்கொள்ளுதல்  என்பது  வருத்தகம் எனப்பட்டு, நாளடைவில் இச்சொல் வர்த்தகம் என்று சற்றுச் சுருங்கிற்று.  இது அமைப்புப் பொருளில் இறக்குமதிப் பொருள்களையே  குறித்தது.

காலக்கடப்பில் இது ஏற்றுமதியையும் குறித்து விற்றல் வாங்குதல் ஆகிய  பொது வணிகத்தையும் குறித்தது.

மொழியில் சொல் உண்டாகும்போது இருக்கும் பொருளே தொடர்ந்து இருப்பதில்லை.  இச்சொல்லில் ஏற்பட்டதுபோல் பொருள்  மாறுபாடுகள் விளைந்து வேறு பொருண்மை பெறுவதும் உண்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது