திங்கள், 11 ஆகஸ்ட், 2025

பராக்கிரமம் என்றது

 இந்தச் சொல்லை இன்று அறிந்துகொள்வோம். 

இது வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் சொல். வேறு எந்தச் சொற்களால் இதனை விளக்கினாலும் இதன் இறுதியில் நாம்  இந்தப் பொருமையைத்தான்  அடைகிறோம். 

மக்கள் பராக்கிரமம் என்பதை மிகப் பெரியது அல்லது பரியது என்று நினைத்தனர்.  பருமைக்கும் பெருமைக்கும் இடையிலுள்ள நுண்பொருளை அவர்கள் கருத்தில் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. நடைமுறையில் பெருத்தலும் பருத்தலும் ஒன்றாகவே பலரால் எண்ணப்பட்டது. 

இந்தச் சொல் பரு அல்லது பருத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்தது. உருவில் பரியது இறுதியில் மதிப்பீட்டிலும் தன்மையும் பெரியதாய் எண்ணப்படுவது உலக மக்களிடையே காணப்படும் இயல்பாகும். இந்தச் சொல்லமைப்பில் நாம் இதை முன்மை வாய்ந்த கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது.  பருமையானது பெருமைக்கு ஓர் உவமையாகக் கருதப்படுதலிலும் பெரிய தவறு ஒன்றுமில்லை..

இச்சொல்லுக்குரிய வினை பருத்தல் என்பதே.  

பரு+ ஆக்கு + இரு + அம்+ அம் என்ற சொற்கள் உள் நின்று பாராக்கிரமம் என்ற சொல் விளைந்தது.

பரியதாய் ஆக்கப்பட்டு இருந்து அல்லது நிலைபெற்று  அமைவதான தன்மை உடையது என்பது சொல்லமைப்புப் பொருளாகிறது.  அது யாது என்ற கேள்விக்கு வீரமென்ற தன்மை அல்லது வலிமை என்பது பதிலாகிறது.  இவ்வாறு அமைந்ததே இச்சொல்.

வீரமானது பரவலாகப் போற்றப்படுவது என்று பொருள் கொண்டு  பர என்ற வினையிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் அதனால் பொருளுக்கு அது எதிராக அமைந்துவிடாது. படைவீரரிடம் பரவலாகக் காணப்படும் தன்மை என்றிதற்குப் பொருள் கூறலாமென்றும் உணர்க.

வீரவுணர்ச்சி வீரனிடம் எழுந்து  அல்லது ஆக்கப்பட்டு,  நிலைத்துத் தங்கி ( இரு என்ற சொல்)  அம் என்பதால் நன் கு அமைந்து  ஆவது என்று வரையறவு செய்யலும் ஆகும்.

எளிய சொற்களைக் கொண்டு தமிழில் உண்டான சொல் இது.  உடன் எழுந்த தொழுகை மொழிக்கும் உரியதாகிறது.. எல்லாம் இந்திய மொழிகளே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

சீடன் என்ற சொல் எங்கிருந்து வந்தது.

 சீடன் என்ற சொல்லைப் பற்றி இன்று சிந்திப்போம்.

சிந்தித்தல் என்றாலே ஒரு குடத்திலுள்ள நீரை சிறிது சிறிதாகச் சிந்துவது போல மூளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணருதல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும் வெளிக்கொணரக் கொஞ்சம் நேரமும் ஆகலாம். ஆர அமர எண்ணிப்பார்த்தல்  என்றும் இதனைக் குறிக்கலாம்.  இப்படிச் செய்வது சீடனுக்கு நல்லது.   அவன் கற்றுக்கொள்ளவும் உணர்ந்து போற்றவும் வாய்ப்புகள் அதிகம் கிட்டும்.

சீடன் சிறிது சிறிதாகக் குருகுல வாசம் செய்யவைத்து ஆசானால் வளர்க்கப் பட்டு முழுமைப் படுத்தப்படுகிறவன்.  ஆனால்  சீடன் குரு சென்றுவிட்ட பிற்காலத்தில் சீடனும் ஒரு குருவாகித் தனக்குச் சீடர்களை வைத்துக்கொண்டு புகழும் பெறக்கூடும். அவன் இன்னாருடைய சீடன் என்று சொல்லப்பட்டாலும், குருவின் மறைவுக்குப் பின் அவருக்கு இணையாகக் கூட எண்ணப்படுபவன். குரு இருந்த இடத்தில் அமர்வதால் அவருக்கு இணையாகிவிடுகிறான் சீடன்.  குரு செய்தவை அனைத்தையும் சீடன் செய்வான்.

ஆகவே சீடன் என்றால் அவன் ஈடன் என்பவனே.  ஈடு> ஈடன் ( ஈடு+ அன்), >  சீடன். அமணர் என்ற சொல் சமணர் என்று வருவது போல் ஈடன் என்ற சொல் சீடன் என்று திரியும். அகர வரிசையில் உள்ள பல சொற்கள் சகர வரிசையினவாகத் திரிந்து வழங்கு இயல்பு.  ஆடி  என்பது சாடி என்று திரிந்து பின் ஜாடி என்றும் வந்தது காண்க. ஆலை> சாலை என்பதும் கருதத் தக்கது.  சோறு ஆகிவிட்டது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  அதாவது முடிந்து விட்டது என்ற பொருளில் இது வருகிறது. ஆனால் ஆகு> சாகு என்பது பின்னர் உயிர் உடலில் இல்லை என்பதைக் குறிக்க வருகிறது.   பொருள் சற்றே திரிந்துவிட்டது.  முடிதற் கருத்து இன்னும் அங்கு இருக்கின்றது. 

ஈடன் என்ற சொல்லுக்கு வலியோன், திடமானவன் என்று பொருள். இதுவே  பின் சீடன் என்ற திரிந்து குருவிற்கு ஈடனாவன் என்ற பொருளில் வழங்கி, பின்னர் சீடன் சிஷ்யன் என்று திரிந்து வழங்குகிறது.  இது சீஷன் > சிஷ்யன் என்று குறுகியிருத்தல் இயல்பே  ஆகும்.  நாளை குருவுக்கு ஈடாகுபவன் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆயிரம் நாமங்கள் எங்கிருந்து வந்தன? சகஸ்ரநாமம்

 ஸகஸ்ர என்ற வடமொழிச் சொல்லே ஆயிரம் என்ற பொருளுடைய சொல்தான்.

இறை வழிபாட்டின் போது ஆயிரத்தெட்டு நாமங்கள் சொல்லி அவரை வழிபடுதல் பண்டை நெறி.  அதனால் கணபதி சகஸ்ரநாமம்,  லலிதா சகஸ்ரநாமம் என்றப்டி ஒவ்வொரு கடவுளுக்கும்  ஆயிரத்தெட்டு கூறப்படும்.

இந்த நாமங்களெல்லாம் பற்றனின் அகத்தில் சுரந்தவை தாம்.  அகத்தில் என்றான் மனத்தில்.  மனத்துள் குடிகொள்பவனே  ஆண்டவன்.

அக சுர >  சக(ஸ்)ர   என்று மாறிற்று. இது அமணர் > சமணர் என்பதுபோலும் அகர சகரத் திரிபாகும். நாமங்களின் பிறப்பிடத்தால் ஏற்பட்ட இனிய பெயர் இது.  எண்களின் பிறப்பிடமும் மனித மனமே ஆகும்.  எண்ணப்படும் பொருள் அகத்தின் வெளியில் இருந்தாலும் எண்ண அறிந்து வெளிப்படுத்தியது மனமே ஆகும்.

சகஸ்ர என்பதற்கு வேறு பிறப்பும் கூறுவதுண்டு,  அவற்றை இங்கு ஆராயவில்லை.

நாவினால் சொல்லி அறியப்படுதலால் நாமங்களுக்கு அப்பெயர் உணடாயிற்று.

நா + அம் > நாமம்,  இந்தில் ம் என்பது இடைநிலை. பழங்காலத்தில் எல்லா நாமங்களும் நாவினால் சொல்லப்பட்டவையே. எழுத்தில் உள்ளவையும் நாவினால் சொல்லப்பட்டுப் பின் பதிவுற்றவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.