வெள்ளி, 19 ஏப்ரல், 2024

விதிநிரல் : மிரட்டு - விரட்டு

 மிரட்டிய பின்னும் மிரட்டப்பட்ட மனிதன் அஞ்சி ஒடுங்கிய பின்னுமே அந்த மனிதனைத் துரத்திவிட முடிகிறது  

ஆகவே:

மிரட்டு ( மி )  >  விரட்டு.

இவ்வாறு சொற்கள் அவற்றின் தொடர்பொருள் நிரலுடன் தமிழில் அமைந்திருப்பது கண்டு வியக்கத் தகுந்ததாய் உள்ளது.  இதுபோலும் நிகழ்வு நிரலை யாம் ஏனைச் சொற்களிலும் கண்டுள்ளோம்.  ஆங்காங்கு எழுதியும் உள்ளோம்.

இது மிஞ்சு> விஞ்சு என்ற விதிநிரல் படியான  திரிபுவகையாகும், 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 18 ஏப்ரல், 2024

அ/திருஷ்டம் திட்டம் [ கேள்விக்குப் பதில்]

முன் இடுகையில் எழுப்பிய கேள்விக்கான பதிலை இங்குக் காண்க:

 இங்கு தெர் என்ற அடிச்சொல்லிலிருந்து தொடங்குவோம். இதுவே எளிதாகவும் சுருக்கமாகவும் முடிப்பதற்குரிய வழி.

தெர் >  தெரி >  தெரிதல்.

தெர் >  தெர் + உள் > தெருள்.  ( உள் என்பது விகுதி,  எ-டு:  கடவுள் ).

தெருள் > தெருட்டு >  தெருட்டுதல்.   தெளிவாக்குதல்.

பூசைமொழியில் இது மாற்றப்பட்டது:

தெருட்டு > திருட்டம் > திருஷ்டம்.

அதி + திருஷ்டம் >  அதிருஷ்டம்  :  மிகத் தெளிவான நிலை.  நற்பேறு உண்டான நிலை.   உயர்ந்த காட்சி பெற்ற தன்மை.

இது உண்மையில் தாயுமானவர் பெற்றதுபோலும் இறுதிக் காட்சி. சிலரே அடைவது, பிறரால் அடையமுடியாதது.  பணத்தை அடைவது அன்று. பணம் பிணத்துக்கு ஒப்பானது,  நிலையானது அன்று, 

திருஷ்டாந்தம் -  தெளிவுபடுத்துவது. சான்று. விளக்கம், எடுத்துக்காட்டுகள்.

திட்டம்: இது இடுகை இன்னொன்றில் விளக்குவோம்.

இங்குச் சொடுக்கி வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_31.html

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


புதன், 17 ஏப்ரல், 2024

அதிருஷ்டம் என்பதன் அமைப்பு.[கேள்வி]

 இன்று அதிருஷ்டம் என்ற பதம் கணித்தறிவோம்.

திருஷ்டம் என்பதனோடு  அ என்ற எதிர்மறை முன்னொட்டு சேர்க்கப்பட்டு இச் சொல் புனையப்பட்டுள்ளது. இந்த அகரத்தை விலக்கிவிட்டு, திருஷ்டம் என்பதனைப் பல்கலைக்கழக அகரவரிசையில் தேடினால், கிடைக்கவில்லை. வடவெழுத்தை, தொல்காப்பியமுனி சொன்னதுபோல் விலக்கிவிட்டு, அதற் குரிய எழுத்தைப் போட்டு,  திருட்டம் என்றாக்கினால்  அதுவும் கிடைக்க வில்லை. ஆகவே அது தமிழாகிவிடும் என்று முனிவர் நமக்குச் சொன்னபடி, ஒன்றும் நடக்கவில்லை. இப்படித் தேடியது கிடைக்காவிட்டால்தான் மகிழ்ச்சி மேலிடுகிறது.

இது திருட்டம் என்று வந்துவிட்டாலும், திருட்டினுடன் தொடர்பு உடையசொல் அன்று.  திருட்டு அம் என்று பிரித்து  ஆனந்தம் கொண்டாட முடியவில்லை.

அ என்பது அல்லாமை என்றால்,  திருட்டல்லாமை என்பது மகிழ்ச்சிக் குரியது தான்.  நம் பொருள் திருடப்படாமை ஆனந்தம் தானே?  ஆகவே சொல்லின் பொருள்  வந்துவிட்டது  எனலோமோ?

திருட்டில்லாவிடில் ஆனந்தமே. நம்மை அறியாமல் மனத்தில் பொங்கும் ஆனந்தமே.

என்னை  அறியாமல் மனம் கொப்பளிக்கும் ஆனந்தமே?

எண்ணமெல்லாம் வெல்லும் கனவாலே

விண்ணிலே கண்ணைவைத்த  அதிருஷ்டமே!

இங்குக்  கண்ணுறும் தொடர்பில் அடுத்த இடுகையைச்  சொடுக்கி வாசித்து உண்மை அறிக:-

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.