வியாழன், 2 மார்ச், 2023

அமெரிக்கத் தேர்தல் ( கண்டெடுத்த கவிதை)

 இது  அமெரிக்கத் தேர்தலைப் பற்றிய  பாடல். ஹிலரி கிளின்டன் நின்றபோது வடிக்கப்பட்டது.  இவர் வரவேண்டுமா என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்கவேண்டும்.  வந்தால் பெண்மையைப் போற்றுவதாகும் என்பதையே இப்பாடல் கூறுகிறது.  (


(அறுசீர் விருத்தம்)


தோயுற மக்கள் கொள்ளும்

துலையிலாத் தேர்தல் கண்டீர்.


பெண்மணி ஒரு வேட்   பாளர்,

பீடுடைச் செல்வர் மற்றார்.

தண்ணுறு பொழிவு செய்து

தகவினை அறிவித் தார்கள்.

ஒண்பெறு  மிகுதி  வாக்கில்

ஓங்கிட நிற்பார் யாரோ?

பெண்மிகை என்றால் ஞாலம்

பெருமையில் மிளிரும் அன்றே!


தோயுற  -   மிகுந்த ஈடுபாடு கொண்டு

துலையிலா -  ஒப்புமை இல்லாத


பீடுடை  -   பெரிய

செல்வர் -  பணக்காரர்

தண்ணுறு -  குளிர்ந்த

பொழிவு  -  சொற்பொழிவு.  

தகவு  -   தகுதிகள்

ஒண்பெறு  - ஒளி மிக்க

ஓங்கிட -   வெற்றி பெற்று 

பெண்மிகை -  பெண்ணே அதிகம் வாங்கினால்

பெருமை -  பெண்களுக்குப் பெருமை விளைத்தல்

அன்றே  -   ஆகுமே. (  அல்லவோ என்பதுபோல், இது ஒருமை)


இத்தேர்தல் முடிவுக்குமுன் பாடிய பாடல்.

சீமான் வெற்றிபெறவில்லையே! காரணம்?



காட்சிச் சிறப்பாகப் பேசும் சீமான் வெற்றி பெறவில்லை.பாவம் அவர் எதுவும் கொடுக்கவில்லை. அதுதான் காரணம். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு திட்டம் வைத்திருப்பார். வாக்கு யாருக்கு என்பதில் மக்கள் ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். அது காசு வேண்டும் என்பது. இந்தத் திட்டங்கள் பொருந்தாத நில்லையில் வெற்றி  கைவசமாவதில்லை. அதைத்தான் இக்கவிதை கூறுகிறது. இந்தத் திட்டங்களை இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

நோக்கங்களையும் திட்டங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டுமா என்பது அவர்கள் பாடு. நாம் கூறும் காரணம் சரியானதன்று என்று ஏற்படும் போது, 
அதைத் தள்ளுபடி செய்துவிட வேண்டியதுதான்.

எண்சீர் விருத்தம்.

யாருக்கும் யாதொன்றும் தாரா விட்டால்

யார்வந்து போடுவரோ  தேர்தல் வாக்கு

போருக்குப் போவதுபோல் குதித்தெ ழுந்து

போற்றுதற்குப் பற்பலவே  புகன்ற போதும்

பாருக்குள் கைதட்டல் பயனொன் றில்லை

பழக்கமுண்டு பரம்பரையாய் இறைஞ்சி வாங்கி!

நாருக்கு மணம்வேண்டின் பூவைப் பற்று

பூவுக்குள் புழுநின்றால் மறைந்து போகும்.


புகன்ற  -  பேசிய

போற்றுதற்கு  - புகழ்வதற்கு

பாருக்குள்- உலகில் 

இறைஞ்சி  -  கெஞ்சி

பற்று -- பற்றிக்கொள்

மறைந்து போகும்  -  ஊர்ந்து எங்காவது போய்விடும்




நார் என்பவர் வேட்பாளர். அவர் சொல்லென்னும் பூவைப் பொழிகிறார் மக்கள் மேல். அதற்குள் இலஞ்சம் என்னும் புழுவிருந்தால் அந்த நாடுகளில் தெரிவ தில்லை.  யார் வெற்றிபெற வேண்டுமென்பது மக்களுக்கு உரியது ஆகும்.

 அதை இக்கவிதை சொல்லவில்லை.  கொடாமையால்  தோல்வி என்பதுதான்..

புதன், 1 மார்ச், 2023

துர்க்கையம்மன் கருணை







துர்க்கையம்மன்


பாட்டு:


இரக்கத்து   அன்னை எழில்திருக்   கருணை

பரக்கப் பயன் தரு பாயருள்  பொருநை

கரக்கு  மனமிலாக்  கனிவுடன் அணைத்து

சிறக்க   வாழ்தரும்  செம்மலர்க்  கையள்


இரக்கத்து   -   ரட்சம் பெருகிய;  அன்னை --  தாய்

எழில்  திருக்கருணை --  அதுவும் எழிலும் திருவும்  பொருந்திய கருணை 

பரக்கப் பயன் தரு  பாயருள்  பொருநை---   விரிவான பயன்களைத் தரும் பொருநை   ஆறு போல் பாய்வதும்  ஆகும்; 

கரக்கு மனமிலா --  அதை எண்ணத்தாலும் மறைப்பதே  இல்லையாகிய,

கனிவுடன்  -  அன்புடன்  , அணைத்து  -  ஏற்றுக்கொண்டு,   

சிறக்க   வாழ்தரும்  -   சிறந்த வாழ்வை அருளும்  , 

செம்மலர்க்  கையள் -  அழகிய செம்மலர்களை ஏந்தி நிற்கும் கையுடையாள்.


மகிழ்வீர்

மெய்ப்பு  பின்