வெள்ளி, 31 டிசம்பர், 2021

HAPPY NEW YEAR TO ALL. 2022

 யாவருக்கும் இனிய புத்தாண்டு 2022 வாழ்த்துக்கள்


இரண்டா யிரத்திரு பத்திரண்டே வந்திடுவாய்

அரண்ட நோய்ச்சூழல் அற்றநலம் தந்திடுவாய்

புரண்டு நிலைதவறாப் பொருளியலை உய்த்திடுவாய்

வரண்டு குலைவறியா வாழ்வுநிலை மெய்ப்படவே.


மாய்வுற்ற மக்களுக்குக் கண்ணீரால் அஞ்சலியே

சாய்வுற்ற செய்தொழில்கள் சடுதியில் மேலெழவும்

நோய்நுண்மிப் போர்மூளா நுவல்வாழ்வு யாம்பெறவும்

தாய்ப்புவியே செழிப்புறவும் தந்திடுக நீயருளே.


வசிட்டர் (வசிஷ்டர்) பெயர்.

 இன்று வசிட்டர் என்ற தொன்மப் பாத்திரமானவரை முன்வைத்து, அவர்தம் பெயர் வந்தவாறு அறிந்து இன்புறுவோம்.

நாம் பல தொன்மப் பாத்திரங்களின் பெயர்களை ஆய்ந்து அறிந்துள்ளோம்.  இராவணன் என்பது " இரா வண்ணன்" என்பதன் இடைக்குறை என்பதை அறிவித்தோம்.   கைகேயி என்பதைக் கையின் இறுதிவரை நீண்டு தொடும் கேசம் அல்லது முடியுடையவள் என்பதைத் தெளிவுறுத்thதினோம். தமிழ்மொழியின் மூலம் பல தொன்மச் சொற்களை விளக்கவியலும் என்பதையும் தமிழின் விரிவையும் இவ்வாய்வுகள் வெளிப்படுத்தின. இத்தகு சொற்களுக்கு முன்பே சில விளக்கங்களைச் சிலர் முன்வைத்திருந்தனர்.   அவர்கள்  தமிழாற்றின்வழி இச்சொற்களை  அணுகவில்லை.  மேலும் வான்மீகி என்னும் புலவர் சங்கப்புலவருமாவார் என்பது காரணமின்றிப் புறம்வைக்கப்பட்டது.

பதிதல் என்பது வினைச்சொல்லாகும். இது வதிதல் என்று திரியும்.  தாம் வதியும் மன்பதையில் ( சமூகத்தில் )  வாழ்வோரிடத்து மிகுந்த இட்டம் அல்லது மன ஈடுபாடு மிக்கவர்  என்று இந்தப் பெயர் தமிழில் பொருள் தரும்.

பதிதல்:  வதிதல்.  (பகர வகரப் போலி )

வதி  - வசி  ( தகர சகரப் போலி).

வசி + இட்டவர் >  வசியிட்டர் >  வசிட்டர் > வசிஷ்டர்.

சுற்றி வாழ்வோர்பால் மனத்தை இட்டவர்.  அதாவது அவர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவர்.

இதில் வகரம் குன்றிவரச் சொல் ஆக்கப்பட்டது.

ஆகவே இவ்விருடியின் பெயர் தமிழில் சிந்தித்து ஆக்கியுள்ளனர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 30 டிசம்பர், 2021

முயல் முடிகொண்ட நாய்க்குட்டி

 நாய்போல உருவம் இருந்தாலும்  --- ஒரு

முயல்போல முடியிருக்கவேண்டும்,

வாய் மூக்கு கண்களோடு   ---- நான்

அப்போதுதான் அழகாய் இருப்பேன்,

என்று சொல்கிறதோ இந்தச் சிறுநாய்?


இந்த நாய்க்குட்டியின் பெயர்   ஃபெரா!


ஃபெரா  பேராவலுடன் உங்களைப் பார்க்கிறது.