சனி, 4 டிசம்பர், 2021

மண்டூகம் [ கூபமண்டூகம்]

இது தவளை என்று பொருள்படும் சொல். இதை ஆய்வு செய்வோம்.

தவளை என்பது பெரிதும் மண்ணில் தூங்குவது. கொஞ்சம் நீர்கலந்த மண்தரையாயின் அவ்விடமானது தவளைக்கு மிகவும் பிடித்தமானது ஆகிவிடும்.

மலர்த் தூங்கும் வண்டு.

மண்ணில் தூங்கும் தவளை.

[இது மலரில் தூங்கும் என்று விரிவதால்  இல் என்னும் உருபு தொகுந்து ( மறைந்து) வருகிறது.

மலர் தூங்கும் என்றால் பூவே உறங்கிவிட்டது என்று பொருள்.

மலர்த் தூங்கும் என்றால் மலரில் மற்றொன்று ( வண்டு) தூங்குகிறதென்பது.  இங்கு வலி மிகும்.]

[ தட்டச்சு செய்கையில் கவனம் தேவை ].

மண்+ தூங்கு > மண்டூங்கு,  இதில் அம் விகுதி சேர,

மண்டூங்கம் என்றாகும் .  ஙகர ஒற்று இடைக்குறைந்து, மண்டூகம் ஆகும்.

அடி அகலமாகவும் வாய்ப்பகுதி சற்றுச் சிறுத்தும் இருக்கும் கேணி என்பது கூவம் ஆவது:    குவி + அம் > கூவம்,  வகர பகரத் திரிபில் இது கூபம் ஆகிவிடும்.

கூவம் > கூபம் என்பது முதனிலை நீண்டு, அம் விகுதி பெற்று வகரம் பகரமாய்த் திரிந்தது.

வகரம் பகரமாவது அடிக்கடி காணும் திரிபு. பிற மொழிகளிலும் உள்ளது. Not language specific.

இத்தகைய திரிபுகள் வருங்கால், ஒரு கையேட்டில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். 

பகு <> வகு என்பது அத்தகையது.

கூபம் + மண்டூகம் >  கூபமண்டூகம்.

கிணற்றுத் தவளை என்பது.  கிணற்றில் வாழ்வது.  மண்ணில் துங்குவது.

இதை ஊங்கு, ஊக்கு என்ற சொற்களை இறுதியாக்கியும் பொருளுரைக்கலாம் ஆதலின் பல்பிறப்பி ஆகும். மற்ற உள்ளுறைவுகளை ஈண்டு விரிக்கவில்லை. பின்பு  கண்போம்.

மண்+ தூக்கம்> மண்டூக்கம்> மண்டூகம் எனினுமாம்.  இடைக்குறைச்சொல். இதுவுமது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நோய்த்தொற்றில் துன்பத்தில் பன்னாட்டுத் தமிழர்.

 பன்னாடும் பரவியுள்ள பைந்தமிழர்----  அவர்கள்

பார்க்கின்ற வேலைகளில் பாதிக்கு  மேலே,

இந்நாளில் இல்லையென்றே  ஆயினவோ --- எனவே

இன்னலுற்று நோக்குமனம்,  ஏதிங்கு தூக்கம்?

என்னாலும் இயலாத செயலாகும் ---- இவர்கள்

எண்ணிக்கை தானுமினி கூறாத  நிற்பில்.

சொன்னாலும் எதைஎதையோ கவிகளிலே  ---- இன்று,

சோராமை மேற்கொண்டு வீறேகொள் வாரோ?  (பன்னாடும்)


சோற்றுக்கு  மீன்பிடிக்கப்  போயிடினும்---- அவர்கள்

சொந்தநாட்டு நீர்ப்பரப்பில்  சூறையில் ஆடி,

நாட்டுக்குத் திரும்பிவரும்   நேரத்திலே ----நீதி

நாடாமல் கைதுசெய்து  சேதங்கள் செய்தார்;  

நேற்றைக்கும்  இன்றைக்கும்  நடப்பனவோ?  ---இவை

நேராத  நாளில்லை தீராத  துன்பம்!

காற்றுக்கும்  கயமைக்கும் இடர்ப்படுவோர் --- இவர்கள்

கட்டங்கள்  மாறிடவே திட்டங்கள்  ஏது?



பொருள்:


இந்நாளில்  -  இந்த ( நோய்த்தொற்றுக்) காலத்தில்

சூறை -  சுழல்காற்று

சோற்றுக்கு - பிழைப்புக்கு

என்னாலும் -  இவ்வெழுத்தாளர் அல்லது கவியாலும்.

நிற்பில் -  நிலையில். (  நில் + பு :  நிற்பு,  நில்+ஐ> நிலை என்பதும் அது)

கட்டங்கள் -  துன்பங்கள் ( கஷ்டங்கள் .> கட்டங்கள்)

கடு+ அம் -  கட்டம்,  > கஷ்டம்.

( கட்டு+அம் > கட்டம் என்றது இன்னொரு சொல்).


மெய்ப்பு:  0812  05122021

பொருள் சேர்க்கப்பட்டது.

This was scheduled but could not be  edited in time owing to

Tamil software in phone generating errors. Recent malware.

Readers pl bear with us. You may point out errors in comments.

    

புதன், 1 டிசம்பர், 2021

தமிழின் தொன்மை காட்டும் பதங்கள்

சொற்கள் எனப்படுவன எல்லாம் பொருள் பதிந்தவை ஆதலின் அவை "பதங்கள்"  எனவும் படும்.  பதி + அம் =  பதம். இகரம் கெட்டது. இது நடி+ அம் >  நட.ம் என்பது போலும் சொல்லமைப்பு.

நடம் ஆட, முழவு அதிர என்றது திருமுறை.

நடமாடித் திரிந்த உமது இடதுகால் முடமாகி-  ஒரு கர்நாடக சங்கீதப் பாடல் ( தமிழிசைப் பாடல்).

நடமாடுதல் ( ஆடுதல் ) என்ற வழக்கையும் நோக்குக. இது பின்னர் ஆடாமல் வெறுமனே நடத்தலையும் குறித்தது.  எ-டு:  ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.

படி+ அம் = படம்.  ஓர் உருவம் படிவு ஆகி அல்லது படிந்திருப்பதே படம்

இதில் கவனிக்கத்தக்கது:  இகரம் கெட்டுப் புணர்தல்.

இறைச்சியை நெருப்பிலிட்டு வாட்டினால் அது சற்றே கரிய நிறத்தை அடைந்துவிடும்.  இறைச்சி மட்டுமா?    இறகு மயிர் முதலியவற்றை அகற்றிவிட்ட,  கொன்ற கோழியின் உடலை வாட்டினாலும் சற்று கரிய நிறத்தை அடைந்துவிடும்.  மிக்கப் பழைய காலத்தில் -  நாம் சொல்வது :  கல்தோன்றி மண்ணும் தோன்றி விலங்குகளும் தோன்றி மனிதன் அவற்றை அடித்துத் தின்று உயிர்வாழ்ந்துகொண்டு "உற்சாகமாக"   இருந்த அந்த வரலாற்றுக்கெல்லாம் முந்திய காலத்தில்,  நெருப்பு மூட்டுவது எப்படி என்று தெரிந்துவிட்ட காலத்தில்,  அவனிடம்,  அடுப்பு என்று இருந்தனவெல்லாம் சில கற்களே. அவற்றில் மூன்று துண்டுகளை வைத்து, தீமூட்டி, இறைச்சியை வாட்டினான்....!

அவனறிந்த கருவியெல்லாம் அப்போது கல்தான்!  அடுப்புக்குச் சில பெயர்ந்த கற்கள்.  இறைச்சியைத் துண்டாக்கக் கைகளாலும் கால்களாலும் கிழித்தெடுக்கவேண்டும். அப்போதும் கல்லே உதவியது.  கூரான கற்கள் அவனுக்கு உதவின! அவற்றைக் கொண்டு இறைச்சியைத் துண்டுகளாக்கிக் கொண்டான்.

மின்னலின் வேகத்தை மிஞ்சிப் பாயும் ஏவுகணைகளை அவன் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமுடியாது.

இயற்கை அவனுக்குத் தந்த பெருந்தானம் -  கல்தான்.  அதற்கடுத்து மண்ணும் மரக்கிளைகளும் அவனுக்கு உதவியிருக்கும்.

தா என்றதும் இயற்கை தந்தது  தா- (இ)ன் - அம் =  தானம்.  கல்லே கருவி. அவன் பேசியது தமிழ்.  இன்றைத் தமிழ் அன்று.  அந்தக் கற்காலத் தமிழ்.  அப்போது அதற்குத் தமிழென்ற பெயர் ஒருவேளை ஏற்பட்டிருந்திருக்காது.

கல்லில் இருந்தே அவனுடைய கருவிகள் அமைந்தன.

அப்போது சொல் திரிந்தது.  எப்படி?  கல் என்பதிலிருந்து கரு என்று திரிந்தது. கல்லும் கருத்ததாகவே இருந்தது.    கல்> கரு> கருவி!

இந்தத் திரிபு ---  கண் காணாத, மனம் மட்டும் கற்பனை செய்யக்கூடிய திரிபு,  கருவி என்ற சொல்லைத் தந்த திரிபு,  கல் > கரு என்று திரிந்ததைவிட அருமையான வேறு திரிபு, எங்காவது கிட்டுமோ நமக்கு? 

அவன் செய்த வேலைகளுக்கெல்லாம் கல்லே பெருந்தானம்,  >  பெருதானம் > பிரதானம் ஆனது. இதில் எமக்கொன்றும் வியப்பில்லை.

கல் "கரு"வாகி,  பின்னர் கார் ஆகியது.  ஏனென்றால் அவன் கரிய நிறப் பாறைகளைக் கண்டதனால்.   கார் என்பதற்குக் கருப்பு என்ற பொருளை அந்த கற்பாறைகளே அவனுக்குச் சொல்லிக் கொடுத்தன.

அவன் தின்றது சுட்ட இறைச்சி.  உப்பு இல்லை. விலங்கின் குருதியே அவனுக்கு உப்பையும் தந்து உதவியிருக்கவேண்டும்.

சுட்ட இறைச்சி!  சுட்டுக் கரிந்த இறைச்சி!  அதை அவன் கரி என்றே உச்சரித்தான். இரண்டு ரகரங்களை இணைத்து  ரர  (ற)  என்று ஓர் எழுத்தை அமைத்தபின், முன்னைய நிலவரம் மாற்றமடையாமல்,  அதைக் " கறி" என்றே  அவன் குறித்தான்.  கறி என்பதற்குக் குழம்பு என்ற பொருளும், இறைச்சி என்ற பொருளும் இன்னும் உள்ளன. கரிந்தது என்ற பொருளும் தொலைவில் இல்லை.

றகர ரகர வேறுபாடு - பிற்காலத்தது.

இந்தச் சொல், சுட்டுக் கரிந்த இறைச்சியை அவன் உண்ட காலத்திலிருந்து,  கரி / கறி என்றே உள்ளது.  குழம்பு வைத்துச் சாப்பிடப் பிற்காலத்தில் அவன் கற்றுக்கொண்டான்.  அவன் மொழியில் அவன் வரலாறு இன்னும் உள்ளது. 

அவன் பசியடங்க, அந்த கரிந்த இறைச்சி முதலியவையே காரணம்.  கரு> கார்> காரணம். கருப்பினை அணவி நின்றது காரணம். இன்றைக்கு ஏன் என்பதற்கு வந்து உதவுவது காரணம்.  அடிப்படைப் பொருள் கல்லும் கருவும் காரும்  ஆவன.  ( ஓடும் கார் என்னும் வண்டியைக் குறிக்கவில்லை).

The writer is a vegetarian.  The purpose is to explain the term kaRi and kari or curry.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


குறிப்புகள்

சில எழுத்துப் பிறழ்வுகள் இருக்கலாம்.

கண்டுபிடிக்க இயலவில்லை. பின்னர் நோக்குவோம்.

நீங்கள் கண்டுபிடித்தால் பின்னூட்டம் செய்து உதவுங்கள்.

வெறுமனே என்பது வெறுமான என்று மாறியிருந்தது. இது இப்போது

திருத்தம் பெற்றுள்ளது. 1218 15122021

தொலைபேசி மென்பொருள்முலம் திருத்தமுடியவில்லை. இது

ஒரு புதுமென்பொருள் மேலேற்றியதன் காரணமாய் இருக்கலாம்.