செவ்வாய், 27 ஏப்ரல், 2021

அட்டை சேகரித்து வாழும் ஏழை

 ஒரு மூதாட்டி அட்டைகள் சேகரித்து அவற்றைப் பழைய சாமான்கள் கடையில் கொண்டுபோய்க் கொடுத்து,  அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தம் குடும்பத்தை நடத்திவருபவர்.   தம் அடுக்கு மாடி வீட்டின் முன் அட்டைகளைச் சேர்த்துவைத்திருப்பார்.  பாவம் இவர்மேல்  பக்கத்து வீட்டுக்காரர்கள் அனுப்பிய புகார்கள் பலவாம்.  அண்டை வீட்டினர் எதாவது கொடுத்து உதவி இருக்கலாம். அல்லது   அட்டைகளை அடுக்கி வைக்க உதவி இருக்கலாம். சமுதாயத்தில் கருணையும் வசதி இல்லார்பால் உதவும் நோக்கும் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. இதை அறிந்த அமைச்சர் கிரேஸ் ஃபூ  " கொஞ்சம் கருணையுடன் கவனியுங்கள்" என்று இவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இவர்போலும் ஏழைகள் மேல் சட்டத்தை எடுத்துவீசியா பரிகாரம் தேடிக்கொள்வது?

இதைப்  பற்றிய இரண்டு பாடல்கள் இங்கு:-

இன்றுநம்  பாங்கில் இருப்பது செல்வநிலை

என்றிறு  மாந்தெளி யோருக்கோர் -----  நன்றுசெய

என்றும் மறவாதீர் ஒன்றுபெரி  தாமிரக்கம்

என்றுமதே வாழ்வின் ஒளி.


அட்டை பொறுக்கி  அதுகொண்டு வாழ்கின்றாள் 

மொட்டைக் கடிதங்கள் மொட்டித்துக் ---  கெட்டிமனம்

காட்டலும்  நன்றன்று கண்ணில் துளியின்றித்

தீட்டற்க திட்டும் மடல். 


பாங்கு   -   பக்கம்

எளியோருக்கோர் :  இங்கு ஒரு என்பது ஓர் என்று வராவிடில்

யாப்பில் வழு.

ஒளி - சிறப்புக்குரியது.

மொட்டித்து  -( அனுப்பிக்)  குவித்து.

கெட்டி மனம் :   கடுமையான மனம்

துளி -துளி கருணை,  கண்ணீர் எனினுமாம்.

தீட்டற்க -  எழுதவேண்டாம்

திட்டும் -   வசைபாடும்

Click to read:

News on the above:    https://theindependent.sg/grace-fu-calls-for-tolerance-compassion-for-elderly-woman-after-jurong-residents-complain-about-cardboard-boxes/

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கேலி -- கிண்டல்

 கேலி என்ற சொல்லைப்  புரிந்துகொள்ளுமுன்,   முதனிலை திரிந்த தொழிற் பெயர் என்ற பெயர்சொற்களைத் தெரிந்துகொள்வோம்.

இதற்கு நாம் "பாடு" என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்.: "ஏழை படும் பாடு" என்ற சொற்றொடரைப் பார்த்து, இச்சொல் அமைந்த விதத்தை அறிந்துகொள்ளலாம்.  படுவதுதான் பாடு.  ஆனால் பாடுதல் என்ற வினையில் உள்ளுறையும்  "பாடு" வேறு. இந்தப்  நாம் எடுத்துக்கொண்ட "பாடு"  பெரும்பாலும் பாட்டைக் குறிக்கும் பெயராக வருதல் காண்பதரிது.   ஒரு பாடு பாடினான் என்று பெரும்பாலும் பேச்சில்கூட வருவதில்லை.  ஆனால் சுடு> சூடு என்பவற்றில்,   ஒரு சூடு சுட்டான் என்று வருவதுண்டு.  இலக்கணியர்  "முதனிலை"  என்றனர் எனின், அது முதலெழுத்து என்று பொருள்படும்.    சூடு என்ற சொல்லில்,"  சூ " என்பது  சு என்ற முன் எழுத்து  நீண்டு திரிந்ததனால்  ஆனது.   அதாவது.   சுடு > சூடு ஆனது. திரிபு என்பது எழுத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பதாகும்.

இப்போது கேலி என்ற சொல்லுக்கு வருவோம்.  கெல்லுதல் என்பது ஒரு தமிழ் வினைச்சொல்.   இதற்குப்  பொருள்  அல்லது அர்த்தம்:1. கிண்டுதல்  2.  தோண்டுதல்  3.கல்லுதல் என்பன.  இதை வைத்துக்கொண்டு, பழைய தமிழ் நூல்களை நீங்கள் வாசிக்கும் போது  எந்தெந்த இடங்களில் இந்தக் கெல்லுதற் சொல் வந்துள்ளது என்று குறித்துக்கொண்டு,  செய்யுளில்வந்த இடங்களை  மேற்கோளாகக் காட்டலாம்.  இப்படிக் காட்டினால் உங்கள் எழுத்தை வாசிப்பவர்,  இவ்வளவையும் அறிந்து வைத்துள்ளீர் என்று பாராட்டுவர். நான் பெரும்பாலும் இதை மேற்கொள்வதில்லை.  எழுதுவதைப்  பகர்ப்புச் செய்து (காப்பி)  வெளியிடுவோர் அதிகம் உலவுவதால்.  வேண்டிய வேண்டியாங்கு நீங்கள் இதை மேற்கொள்ளுங்கள். இதைவிடக் கெல்லுதல் என்ற சொல்லின் பொருளை நீங்கள் அறிந்து இன்புறுதல் தமிழினிமையை உணர வழிகோலும் என்பதே விரும்பத் தக்கதாம்.

கெல்லுதல் அல்லது கெல்லு என்ற வினையில்,   இறுதி உகரம்  (லு < ல் + உ)   ஒரு சாரியை ஆகும்.  வினையாவது  கெல் என்பது.   பல் என்பதைப்   பல்லு என்றால் லு என்பது (வினையின்/ பெயரின்)  பகுதியன்று.  அது நாம் சொல்லை உச்சரிக்க உதவும் ஒரு சாரியைதான்.  அதை விடுக்க.   கெல் வினைப்பகுதி.   இது ஏவல் வினையும் ஆகும்.   இதில்  இ என்னும் விகுதி சேர்த்தால்,    கெல் + இ  = கேலி ஆகிறது.  கெ என்பது  கே என்று முதனிலை திரிந்தது.

கேலி என்ற சொல்லை  "gEli"  என்று  எடுத்தொலிப்பதும் தவறு.  அந்தத் தவற்றைச்  செய்துகொண்டு,  அது தமிழ்ச்சொல் அன்று என்று சொல்லுவது ஒரு   தமிழறியாமையே ஆகும்.

கெல்லுதல் என்பதற்குக் கிண்டுதல் என்று   பொருளிருப்பதால்,  கேலி என்பது கிண்டல் என்பதே   எனற்பாலது ஐயமற மெய்ப்பிக்கப் படுகிறது.

இனிக் களித்தல் என்பதிலிருந்து  தோன்றும்  களிக்கை என்ற  கை தொழிற்பெயர் விகுதி பெற்ற சொல், கேளிக்கை என்று திரியும். களிக்கை எனல்  இயற்சொல்.  கேளிக்கை என்பது திரிசொல்.  செய்யுளில்  இரண்டும் ஏற்கப்படுவன.

அறிக  மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

குறிப்புகள்:

கைப்பேசி ஆங்கில மொழிபெயர்ப்பில், இறுதிப் பாகியில் உள்ள

"இயற்சொல்"  என்ற சொல்  "  இயற்றொல்" என்று தெரிகிறது.

அதைத் திருத்த இயலவில்லை.  அது கூகிள் மொழிபெயர்ப்பு.  




 

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எங்கும் நோய்ப்பரவல்.

 எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் 13-2.5

இருமினால் தும்மினால் அச்ச மச்சம் 13-2.5

செங்கண்ணார் செல்வர்கள் உற்ற   தென்னே 12-3.5

சீர்கெட்ட நோய்நுண்மி பட்ட   தாலோ 14-2.5

பங்குற்றார்  கொல்லியுறு  பலிவட்   டுக்குள்   13-4.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்    கொள்க   13 -3

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று  13-4

தானுய்க  இஞ்ஞாலம் தேர்ந்து    தானே  14-2.5


மாத்திரை எண்ணிக்கையும் குறிக்கப்பட்டுள்ளது.  எ-டு:  14-2.5 14 என்பது உயிர்,உயிர் மெய்களின் மாத்திரை.   மற்றவை குற்றெழுத்துக்களின் மாத்திரை. கவிதை எழுதுவோரின் கணிப்புக்கு இது.

உரை:-

எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் ---  பல இடங்களிலும் நோய்வாய்ப்பட்டோர் மிகுந்துவிட்டனர்;

இருமினால் தும்மினால் அச்ச மச்சம்  -  - யாரும் எங்கு இருமினாலும் தும்மினாலும்  அடுத்து உள்ளோர்   நோய்த்தொற்று அச்சத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்;  

செங்கண்ணார் செல்வர்கள் உற்றதென்னே ---- ஒளியுடைய  கண்களை உடைய சிறந்தோருக்கு இப்போது இந்தத் தொற்று இன்னல்  வந்தது எப்படி? 

சீர்கெட்ட நோய்நுண்மி பட்டதாலோ ---   தள்ளிப்போன கொரனா என்னும் கிருமியினால் தானோ

 கொல்லியுறு  பலிவட்டுக்குள் பங்கு உற்றார் -  உயிர்க்கொல்லிகள் மிகுந்து பலி வாங்கும் வட்டத்துக்குள் மக்கள் சென்று தொடர்பு மிகக் கொண்டுவிட்டனர்.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்கொள்க   ---  அவர்கள் வீழ்ந்துவிட்ட படுகுழிகளிலிருந்து அவர்கள் வெளியேறப்பிரார்த்தனை செய்க;

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று ---   நல்ல நிலையைத் தக்கவைத்துக்கொண்டு,  இந்த உயிரியல் போர்க்குள் செல்லாமல் நிலைபெற்று;

  இஞ்ஞாலம் தேர்ந்துதானே  தானுய்க   --- இவ்வுலகம் தேர்ச்சி பெற்று முன்னேற வேண்டும் என்றவாறு.




நோயாளிகளை மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லும் இதுபோலும்
வண்டிகள் செய்யும் சேவைகள் மிகப் பாராட்டத்தக்கது ஆகும்.


மீள்பார்வை - பின்