ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சின்னநாய் அழகுக்கு ஒப்பில்லை


 நிலைப்பே   ழைக் கீழ்   ஒளிந்துகொண் டாலும்

கலைப்பாங்  கினில்தோய்  கவர்கண் களுடன்

எத்துணை அழகினைக்  காட்டி  விட்டாய்!

இத்தரை தன்னில் ஒப்பினி யுளதோ?

படம்:  உதவியவர்   திருமதி ரோஷினி பிரகாஷ்

பாடல்: சிவமாலா.

சனி, 6 பிப்ரவரி, 2021

பூமனைத் தொண்டு.

 இந்தக் கவிதை,  அங்குச் சுட்டப்பெற்ற பூமனைக் காட்சிகளை முன்வைத்துப் பாடப்பட்டது.   அக்காட்சிகளை நீங்கள் இவ்விடுகையில் கண்டு உவகை கொள்க.  சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2021/02/the-beauty-of-nature.html


பூமனைத் தொண்டு.


இயற்கை விளைத்த இன்பூக் கவின்தனை

செயற்கை மனைக்குள் செவ்வனே வைத்தல்

முயற்கொம் பன்றது முடிந்தது முற்றும்

அயற்கண் ஆனதை அழகினைக் காண்க.


வணமலர்க் காட்சி வருக காண்கென

உணத்தேன் உன்னும் ஈக்களை வரச்செய்

மணப்பூங் காவினை மனைக்குள் அமைத்தனர்.

கணம்கடன் மறவா இயற்கைக் காவலர்


கண்களை வருடி மனத்தினை மகிழ்த்தி

பண்பொடு மலர்போல் மணத்தொடு வாழ்கென

விண்கொடை ஒப்பதோர் விழுமிய செய்தி

தண்பெறத் தருவதிப் பூமனைத் தொண்டே.


அரும்பொருள்:


பூமனை - மலர்கள் வளர்க்கும் ஒரு கூடம்.

கவின் - அழகு.

முயற்கொம்பு - இயலாதது.

அயற்கண் - அடுத்த ஒரு தேயம். அல்லது நாடு

வணமலர் - வண்ணமலர் ( தொகுத்தல் விகாரம்)

உணத் தேன் - உண்ணுவதற்குத் தேன் தொகுத்தல் விகாரம்)


உன்னும் - நினைக்கும்

கடன் - கடமை

இயற்கைக் காவலர்

விண்கொடை - மழைபோலும் குளிர்ந்த கொடை

தண்பெற - குளிர்ச்சி பெற


வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பவுத்திரம் என்ற சொல். ஃபிஸ்டுலா

 குடல் ஆசனவாய்ப் பகுதிகளில் ஒரு சீழ்வடி குழாய் தோன்றி வலியுடன் கூடிய நோய் பவுத்திரம் என்று சொல்லப்படுகிறது.  இச்சொல் உருவானது எப்படி என்று அறிந்துகொள்வோம்.  ஆங்கிலத்தில் ஃபிஸ்டுலா என்பர்.

இது மூலநோயுடன்  ஒருங்கு உரைபெறும் நோய் ஆகும்.

பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்படுவது இது.

இது உண்டான இடத்திலிருந்து  சதை தோல்களினூடு ஒரு குழாய் ஏற்பட்டுச் சீழ் (சலம் )  வடியு.ம்.  நோய்நுண்மிகளால் ஏற்படுவதென்பர். குழாய் தோன்றிய இடத்தினின்று வடிவாசல் வரை  அது நெட்டில் பரவுவது போல் உணர்வர்.  இது:

பரவு + திரம் >  பரவுத்திரம் >  பவுத்திரம் ஆயிற்று.

திரிதல் :  மாறுதல், கெடுதல்.   திரி + அம் = திரம்.  இது திறம் என்ற சொல்லின் திரிபாகவும் கருதப்படும்.

பர > பரவு > பாவு  என்பன தொடர்புடைய திரிபுகள்.

பவு என்பது இடைக்குறை. வல்லெழுத்துக்கள் மட்டுமின்றிப் பிறவும் இடைக்குறை அடையும் என்றறிக.  முன் இடுகைகளில் பல இடைக்குறைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  அவற்றை வாசித்துப் பட்டியலிட்டுக்கொள்க.

அரக்கர் என்பதன் அடிச்சொல் அர் > அர.

அர + கு =  அரக்கு >  அரக்கர்.

அர + வு =  அரவு .   அரவு+ உண் + அர் >  (அரவுணர்)

அரவுணர் > அவுணர்:   இது அரக்கர் என்னும் பொருளுடைத்தே.

அரவு -  அவு  ( இது முதலிரு - முதல்மூ  வெழுத்துக்கள் திரிபு).

பரவு -  பவு  ( இதுவுமன்ன).  ஒப்பு நோக்கிடுக.

"செங்களம் படக்கொன்று  அவுணர்த் தேய்த்த" என்று  வரும்  சங்க இலக்கியத்தொடர் உன்னுக.

அரவு என்பதற்குப் பாம்பு என்றும் பொருள் உள்ளபடியால் அரவு + உண் என்பதற்கு பாம்பு உண்டோர் என்றும் பொருள் கொள்ளலாம்.  இதை நீங்கள் ஆய்வு செய்து தெரிவிக்கவும்..    ஆ+ உண்+ அர்  என்பது குறுகி அவுணர் என்று வருதலும் உரியது இச்சொல்.  ஆ: மாடு.  அவ்வாறாயின் சாவு > சவம் என்னும் திரிபு வழிப்படும்.  திரிபுகளை மட்டும் உன்னுகிறோம். வரலாற்றைப் பிறர் அறிந்துரைப்பாராக.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.  

நோயை அணுகாதீர்.