சனி, 30 ஜூன், 2018

சால சாலி சாலினி சாலமோன் சாலை பிற

சாலமோன் என்ற சொல்லை முன்னர்ச் சிலமுறை யாம் விளக்கியதுண்டு.

சால -  மிகுந்த. நிறைவான.

இதன் அடிச்சொல் சாலுதல் என்பது.  இச்சொல் ஒரு வினைச்சொல்.

சால என்பதை ஓர் உரிச்சொல் என்பதுண்டு.   சாலச் சிறந்த என்ற தொடரில் சிறந்த என்ற எச்சச் சொல்லை சால என்பது தழுவி நிற்றல் காணலாம்.  இது உரிச்சொல் எனப்படினும் இது "சாலுதல்" என்னும்போது வினைவடிவெடுப்பதை அறியலாம்.

இது எவ்வாறாயினும், சால என்பது பிறமொழிகளிலும் பரவிச் சொற்களைப் பிறப்பித்துள்ளது.

சாலை என்பது   சால்+ஐ என்றமைந்த சொல்.   இப்போது வாகனங்கள் செல்லும் பெரும்பாதையை நாம் சாலை என்`கிறோம்.  எடுத்துக்காட்டு:  விரைவுச்சாலை.


பாடம் என்பது தமிழ்ச்சொல்.  படி+ அம் =  பாடம் எனவரும்.  படி என்பதில் உள்ள பகரம் நீண்டு பாகாரம் ஆனது.  டி என்பதில் உள்ள இகரம் கெட்டு ட் என்று நின்று வரும்  அம் என்னும் விகுதியுடன் இணையப் பாடம் என்ற சொல் அமைகிறது.

பாடம் + சாலை என்பனவற்றைச் சேர்க்கப் பாடசாலை ஆகிறது,  இதன்பொருள் பாடம் படிக்கப்  பிள்ளைகள் கூடியுள்ள இடமென்பது. இப்போது பள்ளி என்ற சொல்லே இதற்குப் பயன்படுகிறது.  பாடசாலை என்பது பிறமொழிக்குச் சென்று பயன்பட்டதால் அதன்பால் ஏற்பட்ட ஐயப்பாட்டில்  அது இப்போது விலக்கப்படும்.

அறியாது அகராதி வெளியிடும் சிலர்கூட பாடம்  சாலை என்பன தமிழல்ல என்று கூறிக்கொண்டிருப்பதுண்டு.  இக்கூற்று  உண்மையன்று என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

சால என்ற சொல் எபிரேய மொழிக்குள்ளும் சென்றது.  சாலமோன் என்ற மன்னன் பெயரில் சால என்பது இருக்கிறது.  பெயருக்கேற்ப அவன் சாலச் சிறந்தவனாகத் திகழ்ந்திருந்திருந்தான்.  மன் என்பது மன்னன் என்பதன் அடிச்சொல்.   சாலமன் என்பது சாலச் சிறந்த மன்னன் என்று பொருள்படும்.
மன் என்பதன்றி அதை சாலமோன் என்று பலுக்கிடில் மோன் எனற்பாலது மகன் என்பதன் திரிபாகவும் கொள்ளுதற்கிடனுண்டு என்பதறிக.  மகன் என்பது மோன் எனவருதல் பேச்சுத் திரிபு.  தமிழ் நாட்டின் சில வட்டாரங்களிலும் சேரலத்திலும் இது இவ்வாறு உருக்கொண்டு வழங்கும்.  இதைப் பற்றி மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/05/solomon-tamil.html

ஆனால் சாலமோன் சாலமன் என்று ஓர் அரசன் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர்.  பண்டைக்காலத்தில் பல கதைகளைக் கற்பனைக் கேற்ப எழுதிப் பரப்பியோர் பலர்.  சில செய்திகளை ஈண்டு அறியலாம்,

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwiikfatk_vbAhUEQH0KHbn7CXgQFggoMAA&url=http%3A%2F%2Fwww.jesusneverexisted.com%2F&usg=AOvVaw3KzUp6-ujV7qhhPUpzPcOp

சாலமன் பற்றிப் பல வியத்தகு கதைகள் உள; அவர் இருந்திருந்தாலும் இல்லாதிருந்தாலும் செய்யத்தகுந்தது ஒன்றுமில்லை.  கதைகளை அறிந்து மகிழ்வேண்டியதுதான் நம் வேலை.


சாலிவாகனன்,  சாலியவாகனன் என்பன சிறந்த வாகன வசதிகள் உடையோன் என்று பொருள்படுதல் கண்டும் ஆனந்த மடைக.  வேறுபொருள் கூறிய வரலாற்றாசிரியர்  உளர்.  பண்டைக்காலத்தில் வாகனவசதியுடையோன் பெரிதும் மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டான்.  பத்து இரதங்களுடைய மன்னன் தசரதன் பெரிதும் மதிக்கப்பட்டு அவனியற்பெயர் மறக்கப்படுமாறு தசரதன் என்ற பெயரே வழக்குப்பெற்றுள்ளது.

இரதம் என்பது எப்படி அமைந்த சொல்? ( இரு+அது+ அம் :  இருந்து செல்வதற்கு அது அமைப்பு )

நடந்து திரிபவனுக்கு அத்துணை மதிப்பு இல்லை.

சிறந்த நெற்பெயர் சாலி   என்ற பெயர் பெற்றதும்  தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும்.

தேவிக்குச் சாலினி என்ற பெயருண்மை முன்னர் நம் இடுகையில் சொல்லப்பட்டதே.  இப்போது இது ஷாலினி என்று மெருகேறி  ஒப்பனை நிலையில் வழங்கிவரும் சொல் ஆகும்.

பிழைத்திருத்தம் பின்.
மெய்ப்பு: 16122022

வெள்ளி, 29 ஜூன், 2018

விற்றலும் வாங்குதலும்

விற்றலும் வாங்குதலும் பண்டைக்காலத்திலே தொடங்கிவிட்டன. வில் என்ற சொல்லும் தமிழிலே உண்டானது,   அது தல் விகுதி பெற்று,  வில்+தல் =  விற்றல் ஆனது. தமிழில் விற்றல் என்பதற்கு விலைக்குக் கொடுத்தல் என்பது அர்த்தமாக அல்லது  பொருளாகக் கொடுக்கப்படுகிறது.

வாங்குதல் என்பதற்கோ இப்படியமையாமல்  வளைதல் என்றே பொருள்பட்டது,  இன்றும் எதையாவது இன்னொருவரிடம் பெற்றுக்கொள்பவர், சற்றுக் கையை நீட்டி, உடல் வளைந்து நின்று பெற்றுக்கொள்கிறார்.  வாங்கு  என்பது வளைதல் குறிக்கும் பெயர். பழங்காலத்தில் வளைந்து நின்றுதான் பொருளைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இற்றை நிலையில் வாங்குதல் என்பது விலைக்கு வாங்குதலையும் அல்லாது வாங்குதலையும் குறிக்கும். இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

வில் என்பதோர் அடிச்சொல். அது விர்>விய் என்றும் திரியும்.

விர் என்பது விரி > விரிதல் என்றும் திரியும்.  

விர்> விய் என்று திரிந்தபின் பல சொற்களை அவ்வடிச்சொல் பிறப்பித்துள்ளது.

வி> விய்> வியன் = விரிவு என்பது பொருள்>

விரிநீர் வியனுலகு என்று குறளில் வருவது காண்க.

விர்> விய் > விய >வியன்.

விய > வியா.

வியா > வியாபித்தல் =  விரிந்து பரவுதல்.

வியா என்பது வியாபாரம் என்ற சொல்லின் முதலாக நின்றது.

பாரம் என்பது உண்மையில் பரத்தல் என்ற அடியிலிருந்து வரும்.

பர > பரத்தல்.   எங்கும் பரவுதல்.

பர> பரவு.   பர> பார்.  

பார் என்பது பரவுதல் என்பதே.  அது முதனிலை நீண்டு பெயரானது,

பர+அம்,= பாரம்.  இதன் பொருள் பரவுதலைச் செய்தல் என்பது.

வியாபாரம் என்ற சொல்லில் பொருளுக்கு விற்றல் அல்லது வாங்குதல்  என்ற பொருளில்லை ஆயினும் அது சொல்லின் வழக்கில் ஏற்பட்டது,

பண்டைக்காலத்தில் பண்டமாற்று வணிகமிருந்தது.  விலை என்பது தெளிவாக ஏற்பட்டிருக்கவில்லை. பல இடங்களுக்கும் பொருளைச் சுமந்து சென்று பரவச் செய்தல் என்பதே வியாபாரம் என்பதன் பொருளாம்.

இன்று அதன் பொருள் வேறுபட்டுள்ளது.  இன்று வாங்குதல் விற்றல் என்று பொருள்.

வருத்தகம் என்பது இப்போது வர்த்தகம் என்று எழுதப்படுகிறது,  ஆனால் சொல் அமைந்தது:  வருத்து + அகம் என்றபடியே ஆகும்  பொருளை வெளியிலிருந்து வருத்தி விற்பதே வருத்தகம் ஆகும்.  அது பின் வர்த்தகம் என்று மெருகுபெற்றது.

வருத்துதல் என்றால் வருந்தச் செய்தல் என்றும் பொருள்.  அதனால் குழப்பம் தவிர்ப்பான் வேண்டி,  வருத்தகம் என்பது உண்மை வடிவமெனினும் அதை வர்த்தகம் என்று எழுதுவதே நன்று என்று தோன்றுகிறது.

சில வேளைகளில் முன்னமைப்புச் சொல் பொருந்தாவிடில் திரிபையே ஆளுதல் நன்றாகும்.

தமிழ்ச்சொற்களே திரிந்து   வழங்குகின்றன.  அது தமிழனுக்கு ஒருவகையில் பெருமையே ஆகும்.

பிழைத்திருத்தம் பின்பு.
மூலத்திலிருந்து வேறுபட்டுப் பிழையாகத்
தோன்றியவை: 11.7.2018 ல் திருத்தம்பெற்றன


புதன், 27 ஜூன், 2018

சமஸ்கிருதமும் இந்தியாவும்.

இதுபோது சமஸ்கிருத மொழி பற்றித் தெரிந்துகொள்வோம்.

முதலில் நாம் அறியவேண்டியது, இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் எல்லா மொழிகளும் ஒன்றின்சொல் இன்னொன்றில் வழங்கத் தக்க அளவுக்கு பெரிதும் உறவுடையவை.  இதற்குக் காரணம் மக்கள் யாவரும்  அடுத்தடுத்து வாழ்ந்ததும் தங்களுக்குள் உறவுடையவர்களாய் இருந்தமையும் சண்டையும் தங்களுக்குள் போட்டுக்கொண்டதும் ஆகும்.   பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.

வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்களும் வாழ்ந்தனர்.  இந்தியாவிலே மறைந்தனர்.  பிள்ளைகுட்டிகள் மூலம் முன்னர் இவண் வாழ்ந்தோருடன் கலந்தனர்.   யவனரும் ஊனரும் வந்து பணிபுரிந்ததும் உண்டு,  கலந்ததும் உண்டு.

ஆரியப் புலம்பெயர்வு, ஆரியப் படையெடுப்பு முதலியவை நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லை.  சமஸ்கிருத மொழியில் வழங்கும் சொற்கள் ஏனை நண்ணிலக் கோட்டு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் முதலியவற்றிலும் திரிந்து வழங்குவதால்,  மக்களிடை நீண்டகாலத் தொடர்பிருந்தமை அறியலாம்.

சமஸ்கிருதம் நன்றாகத் திருத்தியமைக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வழங்கும் சொற்களும் உள்நாட்டுத் திரிபுச் சொற்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்படி அமைக்கக்காரணம்  அது பல்வேறு மக்களிடைப் பொதுமொழியாய் வழங்குவது நன்மைதரும் என்பதாலே ஆகும்.

டாக்டர் லகோவரி மற்றும் அவர்தம் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தபடி மூன்றில் ஒருபங்கு திராவிடச் சொற்களும் ஒரு பங்கு அடிப்படை அறியப்படாத சொற்களும் இன்னும் ஒருபங்கு மேலைமொழிகளுடன் தொடர்புடைய சொற்களும் இருந்தன.  மொத்தம் உள்ளவை 166434 சொற்களுக்கு மேலாகும்.

டாக்டர் சுனில்குமார் சட்டர்ஜி கண்டறிந்தபடி  சமஸ்கிருதத்தில் ஒலியமைப்பு திராவிட மொழிகளைத் தழுவியவை.  தமிழில் உள்ள சில எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் இல்லை; சமஸ்கிருதத்தில் உள்ள சில எழுத்துக்கள் சில தமிழில் இல்லை.

மொழிநூற் பெரும்புலவர் தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்படி சமஸ்கிருதமென்பது  தென்மொழியின் வழிப்பட்ட மொழி ஆகும். ஆரியர் வரவுக் கோட்பாடுகள் காரணமாக,  அவர் சமஸ்கிருதம் வெளிநாட்டிலிருந்து வந்தமொழி இங்கு வளம்பெற்றதென்று நம்பினார்.  இது ஒரு தெரிவியல்தான். (theory.  ) 

வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் ஆய்வுப்படி,  சமஸ்கிருதத்தில் காணப்படும் வெளிநாட்டுச் சொற்கள் மக்களிடையே ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக வந்தேறியவை.  அவை "பெறப்பட்ட" சொற்கள்.  இவ்வமைப்பினால் அதை வெளிநாட்டு மொழியெனல் பொருந்தாது.

சமஸ்கிருதம் என்பது உள்நாட்டுப் புனைவுமொழியாகும். மொழியில் சில இயல்புகள் உள்நாட்டில் அமைக்கப்பட்டவை அல்லது வெளியிலிருந்து வந்தவை. பல சொற்கள்  மக்களால் பேசப்பட்டவைதாம்.  பாகதச் சொற்கள் இவையாம்.

சமஸ்கிருதம் என்ற வழக்குச்சொல் முதன்முதல் இராமாயணத்தில் உள்ளது. அதற்குமுன்  அது வேறுபெயர்களால் அறியப்பட்டது.   அதன்பெயர்களில் சந்தாசா என்பது ஒன்று.  சந்த அசைகளால் ஆன மொழி என்ற பொருளில் அப்பெயர் அமைந்தது.    சம என்பது சமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நேரானது. கிருதம் என்பது  கத்துதல்,  கதறுதல்,  கழறுதல்  என்ற சொற்களின்  வேருடன் தொடர்புள்ளது.   கத்து > கது ( இடைக்குறை) >  கது+அம் = கதம் > கிருதம்.
கத்து> கது > கதை> காதை. கத்து >கது > கீது > கீதம்.  வேறு இத்தகு திரிபுகளும் நேரமிருக்கும்போது ஒப்பாய்வு செய்து காட்டுவோம். முன்னரும் காட்டியுள்ளோம்.  (கத்து > கது > கதறு > கதறுதல்.)   கத்து என்பதன் கத்  அரபு மொழியிலும் உள்ளது ஆகும்.  அது குமரிக்கண்டக்காலத்துச்  செலவாயிருத்தல் கண்கூடு.

ஆரியர் வந்த ஆதாரம் இல்லை; ஆரியர் என்ற இனமும் இல்லை. ஆரியர் என்றால் மேலோர்.  ஆர் என்பது உயர்வு குறிக்கும் பலர் பால் விகுதியாகும்.  ஆர்தல் நிறைவு குறிப்பதும் ஆகும்.

ஆரியர் வெளி நாட்டிலிருந்த வந்த ஓர் இனத்தினரென்பது பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் புனையப்பட்ட செய்தி. இஃது   ஒரு தெரிவியல்(theory). ஆகும்.  அவர்கள் நாடோடிகள்(nomads)  எனப்பட்டதால், அவர்கள் பல்லாயிரம் சொற்களைத் தம்முடன் பேச்சில் கொண்டுவந்தனரென்பது  நம்ப இயலாது.  மாடோட்டி வந்திருந்தால் அவர்களுக்கு  நாடோறும் வழங்கும் சில சொற்களைத்  தவிர பிற அறிந்திருக்க இயலாது. அவர்களிடை குறுகிய சொற்றோகுதியே இருந்திருத்தல் கூடும். மயில் என்ற பறவைக்கு அவர்களிடம் சொல் இல்லை என்று கண்டு,  மாயூரம் என்பதை மயில் என்பதினின்றே படைத்துள்ளமையால் அவர்கள் வெளி நாட்டினர் என்றனர். இது ஒரு பொருத்தமான காரணம் ஆகாது. இதே காரணத்திற்காக அவர்கள் உள் நாட்டினராகவும் இருக்கலாமே.  கடைதல்  அம் என்ற இரண்டையும் சேர்த்துத் திரித்துக் கஜம் (கடை + அம் =  கடம் >  கஜம் ) என்ற சொல்லைப்  படைத்துக்கொண்டமையால் அவர்கள் யானைகள் இல்லாத உருசியப் பகுதிகளிலிருந்து வந்தனர் என்பதும் பொருத்தமற்றது .  புதிய சொற்களை மொழிக்குப் படைக்கும் ஆர்வத்தால் உள்நாட்டினரும் இதைச் செய்திருக்கலாமே.

பிராமணருக்கு எந்த மாநிலத்திலிருந்தனரோ அந்த மாநிலத்து மொழியே தாய்மொழியாகும்.   சமஸ்கிருதம் ஒரு  தொழிலுக்குரிய மொழியே ஆகும்.   பிராமணருக்குள்ளே 2000 சாதிகள் உள்ளன என்பதால் அவர்கள் பல்வேறு வகைகளில் தொழிலால் ஒன்று  சேர்ந்தவர்கள். ஓர் இனத்தவர் அல்லர்.  வெளிவரவினர் அல்லர். எல்லாச் சாதிகளிலும் கலந்துள்ளமை போல வெளிவரவினர் அவர்களுள்ளும் கலந்திருப்பர்.

பின்னொருகால் இதைத் தொடர்வோம்.

பிழைத்திருத்தம் பின்.