செவ்வாய், 27 மார்ச், 2018

நஞ்சை புஞ்சை தஞ்சை இன்னும் சில



சில திரிபுகளை இன்று மறுபார்வை செய்வோம்

செய் என்ற சொல் வினையாகவரும்போது  செய்தலைக் குறிக்கும். அது பெயர்ச்சொல்லாக வரும்போது நிலம் என்றும் பொருள்படும்.
எடுத்துக்காட்டுகள்.

நன்செய் :  இது திரிந்து நஞ்சை என்றாகும்.

புன்செய் :  இது திரிந்து புஞ்செய் என்றாகும்.

இத்தகைய திரிபுகளைப் பெருவாரியாகக் காணமுடிவதில்லை.  மொழியில் சிலவே கிட்டுகின்றன. நீங்களும் தேடிப் பாருங்கள்.

சோழன் கரிகால் வளவன் காவிரியினைச்  செம்மைப் படுத்தி மக்களுக்கு நீர் கிடைக்கும்படியான வளத்தை உண்டாக்கிய பின் சோழ நாட்டில் பல பகுதிகள் செழுமை பெற்றன.  வரண்ட பூமி தண்மை பெற்று  விவசாய மென்னும் விழுமிய வாழ்வுக்கான சா(ய்)த்தியம் உண்டாயிற்று.1

தஞ்சையென்னும் நகரும் அதன் பெயரைப் பெற்றதென்று தெரிகிறது.  ஆனால் அப்போதே பெயர் அமைந்ததா அல்லது பின்பா என்பது ஆய்வுக்குரியது.

தஞ்சை என்னும் பெயர்:
தண்+ செய் =  தஞ்சை.

தண்மையான நிலங்களை உடைய இடம்.

0னகர 0ணகரங்கள்  ஓரினத்தவை.

விஞ்சுதல் என்பது மிஞ்சுதல் என்றுமாகும்.   குவி என்பது குமி என்றும் அமையும்.    அம்மை என்பது அவ்வை என்றுமாகும்.  இவையெல்லாம் மகர வகர எழுத்துப் பரிமாற்றங்கள்.  இத்தகு மாற்றத்தினைப் போலி என்றும் கூறுப.

இதன்படியே வல்>வன்> வன்சி>  வஞ்சி எனற்பாலது மஞ்சி என்று வந்து, வலிமை என்றும் பொருள்தரும்.
வஞ்சி என்ற சொல்லும் போருக்குச் சென்று வலிமை காட்டுதல் குறிக்கும்.  சற்றுக் கடின ஒலிகளை யுடைய பாவாகிய வஞ்சிப்பாவையும் குறிக்கும். அடிப்படைப் பொருள் வலிமை என்பது (வல்>வன்).  பெண்ணைக் குறிக்கும் வஞ்சி என்பது வலிமையுடைய பெண் என்பதையே குறிக்கும் எனினும் அப்பொருள் நாளடைவில் மறைந்து பொதுப்பொருளில் சொல் வழங்கிற்று என்று அறிக.
இது இங்கு காட்டப்பெறுவதற்குக் காரணம்,  0ன்சி என்ற எழுத்துச்சேர்க்கை ஞ்சி எனவாகும் என்பதே.

செய்கை > சைகை.  (கைச்செய்கை).
செய்தன்னியம் > சைதன்னியம்.

https://sivamaalaa.blogspot.com/ 


அறிந்து மகிழ்க.

பிழைத்திருத்தம் பின்பு. 

---------------------------------


அடிக்குறிப்பு: 

1. விவசாயம்(acronym) இது ஒரு முற்கூட்டுச் சொல்:  வி = விழுமிய; வ = வாழ்வு;
சா = சார்ந்த;  அம்: இது சொல்லாக்க விகுதி.  வ  என்பது வாழ்வு ,   வா என்பதை வ  என்று  குறுக்கிய  உத்தி;  வழுத்து, வாழ்த்து என்று நடைபெறும் சொற்களில்  வாழ் என்பது வழு என்றும் குறுகுமென்பது அறிக. தமிழ்மொழியில் இத்தகு வசதி கிட்டுவதால், வ: என்பதை வாழ்வு குறிக்க நிறுத்தியது பொருத்தமான புனைவுதான்.

இன்னோர் எடுத்துக்காட்டு: கபோதி.  கண்போன திக்கற்றவன் என்பது சொல்லமைப்பின்போது நின்ற பொருள்.  இப்போது போதி - போதமுடையான், க = கழிந்த, கடைகெட்ட என்று இணைக்கும்படியான பொருள் மாற்றம் உண்டாகிவிட்டது.

விவாகம் என்பது மற்றுமொன்று.  விழுமிய; வா = வாழ்வுக்கு; ஆ = ஆகும்;  (  நெறி )  அம் விகுதி.

முற்கூட்டுச்  சொல் :  முதலெழுத்துக்களைக் கூட்டி  அமைக்கப்பட்ட சொல் .  

இப்படியெல்லாம் சொல்லமைத்தவர்களைப் பாராட்டுங்கள். 

28.3.2018
 

திங்கள், 26 மார்ச், 2018

அணுவும் ஸ்தம்பித்தலும்



தம்பித்தல் > ஸ்தம்பித்தல் என்ற சொல்லை ஆய்ந்து காண்போம்

மற்ற கருவிகள், உறுப்புகள் அல்லது பாகங்களுடன் இணைந்து செயல் பட்டுக்கொண்டிருந்த ஒரு பொருள் செயல்பாடாமல் நின்றுவிட்டால் அதைத் தம்பித்து விட்டதென்று கூறுவோம்.  இது “ஸ்தம்பித்து” விட்டதென்பது ஒரு மாற்று வழக்கு.

தம் என்பது தமிழில் பன்மைப் பதிற்பெயர்.  தாம்> தம்.

ஒன்று என்று நாம் சொல்லும் எந்தப் பொருளும் ஒரே ஒரு பொருளாய் இயங்குவதில்லை.  எடுத்துக்காட்டாக:  ஒரு மனிதன் என்பவன் பல உறுப்புகள் ஒன்றாக இணைந்து செயல்படும் ஒரு பிறவி. அவன் இறந்துவிடும் போது அவனுள் ஏதோ ஓர் உறுப்பு செயல்படாமல் நின்றுவிட்டது.  அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் இயங்கவில்லை என்பதே பொருள்.  அவை “தாம்” ஆகிவிட்டன.  அவை தானாகியோ தாமாகியோ இயங்குதலை விட்டன.

இந்த நிலையை,  தானித்தல்  அல்லது தன்னித்தல்  என்று அமைக்காமல் தம்பித்தல் என இச்சொல்லில் அமைத்தது ஒரு பேரறிவு ஆகும்.

இதற்குக் காரணம் அணுவைத்தவிர பிற அனைத்தும் இணைந்தே செயல்படுபவை.  அவை தம்பித்து விடுகின்றன அல்லது “தாமித்து “ அல்லது தாமாகி விடுகின்றன.

அணுத்திரட்சிகள் இணைந்ததே பொருள்.  அத் திரட்சிகள் இயங்காமை “ தம்பித்தல்” ஆகும்.

தமிழின்மூலம் ஆய்ந்தாலே இந்த அறிவியல் உண்மை புலப்படும்,  வேறு தன்னிறைவுச் சொல்லாய்வுகளில் இது விளக்கப்படுதல் இயலாது.

தம்பித்தல் என்பது ஸ்தம்பித்தல் என்றானது ஒரு திரிபு அல்லது மெருகூட்டல் ஆகும்.

தமிழில் அணு என்ற ஒரு சொல் பண்டைக்காலம் தொட்டு வழங்கி வருகிறது. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்பதில் அணு என்ற சொல் மிளிர்கின்றது.  அண் என்பதிலிருந்த அணு என்ற சொல்லைப் படைத்துக் கொண்டனர் தமிழர். ஓர் அணு மற்றோர் அணுவை அணுகியே திரண்டு பொருள்களை உருவாக்குகிறது என்பதை அறிந்த தமிழர்  அணுகுதல் என்ற சொல்லினடியாகிய அண் என்பதிலிருந்து இதற்குப்  பெயரிட்டது இன்னொரு பேரறிவு ஆகும்.

தமிழை அறிக.
 நிறைவைப் பெறுக.







ஞாயிறு, 25 மார்ச், 2018

இகரம் இணைந்து வினையாக்கம்

ஒன்று என்பது ஒரு பெயர்ச்சொல்.  அதை எண்ணுப்பெயர் என்பர்.
அதாவது ஒரு எண்ணுக்குப் பெயராக வருவது.  அதை ஒரு வினை
யாக மாற்றுவதென்றால் எப்படி அதைச் செய்வது?

ஓன்றாக்கு; ஒன்றாகு;
ஒன்றுபடு; ஒன்றுபடுத்து;
 என்று சொல்லலாம்.

ஒன்றித்தல் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒன்று என்பதில் ஒரு இகரத்தைச் சேர்த்தால்  அது வினை
யாகிவிடும்.

இதேபோல் இரண்டு என்பதை வினைச்சொல் ஆக்க,  இரண்டு+
இ =  இரட்டித்தல்  என்று அமைக்க.

மூன்றுக்கு இப்படி அமையவில்லை.  மூ என்பது வயதாகுதல்
என்றும் பொருள்படுவதால், மூன்றித்தல், மூவித்தல் என்று
அமையவில்லை. இது மொழிமரபு.

ஒரு என்ற சொல்லிலிருந்து  ஒரீஇ என்ற சொல் அமைந்தது. இதில்
ஒன்றித்தல் என்பதில் போல இகரமே வந்து வினையமைந்தது.
மேலும் ஒரீஇ என்பது அளபெடை வடிவமெடுக்கின்றது. இகரம்
வந்து வினையாகாத சொற்களும் உள.  எடுத்துக்காட்டு:
குரீஇ  என்பது.  இதன்பொருள் குருவி.

தாளிகைகளில் வரவேண்டிய செய்தியை வெளிவராமல்
தடுத்துவிட்டால் இதனை "இருட்டடிப்பு செய்துவிட்டனர்"
என்று சொல்வார்கள்.  நாமிதற்கு ஒரு புதிய சொல்லைப்
படைத்து மகிழலாமே.

இருட்டு > இருட்டித்தல் என்று ஒரு புதிய சொல்.  இப்படி
ஒரு சொல் இல்லை என்று நினைக்கிறோம்.  இருந்தால்
பிழை பொறுத்தருள்வீர்.

இருட்டித்தலுக்கு ஒரு புதுமெருகும் ஏற்றலாம்,   அதாவது:
இருஷ்டித்தல் என்று கவினுறுத்தலாம். எனக்கு இனிமையாகவே
உள்ளது.  நீங்கள் விரும்பாமற் போகலாம். ஒவ்வொரு நாவிற்கும்
சுவையூற்று வேறுபடுமன்றோ?

நாமிங்கு கூறமுனைவது என்னவென்றால்,  இருட்டு என்பதில்
ஓர் இகரம் சேர்த்து வினையாக்கம் நிகழ்த்தலாம் என்பது.

இன்னோர் எடுத்துக்காட்டு:  மறு>  மறுதலை > மறுதலித்தல்.
இங்கு ஐகாரம் ஒழிந்து இகரம் இணைந்தது. வினை அமைந்தது.

மகிழ்வீர்.