சனி, 24 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவி - இரங்கல் Demise of Sridevi Superstar Actress



துடிப்புடன் திரைதனில் தோன்றிச்  சுவைஞரை
நடிப்பதன் அழகில் கவர்ந்தநட்  சத்திரம்
நெடித்தலொன் றிலாத உழைப்பினர் தாமுமே
பிடித்தமே லிடத்தினைப் பெயரா திருந்தவர்.

மூவா அகவையில் முன்னிறப் பெய்திசீ
தேவி உலகினைத் தேம்பிட வைத்தனர்
ஆவி அமைதியை அடைக குடும்பமும்
மேவு துயர்க்கினி இரங்குமெம் நெஞ்சமே.

 அரும்பொருள்:

சுவைஞர்  = இரசிகர்கள்.
நெடித்தல் =  காலம் கடத்துதல். செய்வதைச்
செய்ய நாட்கடத்துதல்.
பெயராது = இழந்துவிடாமல்.
மேலிடம் = அந்தஸ்து

மூவா அகவை = மூப்பு அடையாத (இள) வயது
இறப்பெய்தி -  மரணமடைந்து.
முன்னிறப்பு -  அகால மரணம்
தேம்புதல் -  கலங்குதல்.
மேவு துயர் -  அடைந்த துக்கம்

ஸ்ரீ

  

பரிசுகள் பெறுவதில் ஆபத்து....



போர்களிலே தாம்குண்டு போடுவார்கள் இங்கென்ன
புதுமணத் தம்பதிகள் நாமே! - இந்தப்
பூதலத்தில் நாமிணைந்தோம் காதலினால் கட்டுண்டோம்
ஏதினியே  வாழ்வில்  இன்னல்?  

என்றபடி போகமிழை புத்தம்புது  இல்லமதில்
இருந்தபடி எக்காளம் இட்டு -- அங்கு
வந்தபரி சுப்பொருள்கள் வாரியிட் டுப்பிரித்தார்
வன்`குண்டே வெடித்த தங்கே

மணமகற்கு வந்துற்ற மாதுயரை என்சொல்வோம்
மரித்துவிடப் பெண்ணும் ஆங்கு --- உயிர்
பிணத்திற்குப் பக்கலிலே காயம்பெரி தாய்ப்பட்டு
பிழைப்பாளோ என்ன   வீழ்ந்தாள்

மணத்திற்கு  வாங்காதீர்  மகிழ்ச்சியால் எப்பரிசும்
மாநிலமே வீணர் வாழும்---- ஒரு
குணத்திற்கு வாழாத  கூழ்க்கலமே ஆயிற்றே
குற்றநெறி உற்றழிந்     ததே.. 
 



இரத்தம் தொடர்புடைய சொற்கள்




இரத்தம் என்று நாம் வழங்கும் சொல் பேச்சில்  ரத்தம் என்றே வழங்குகிறது.  இது அமைந்த  காலத்தில் அது அரத்தம் என்று இருந்தது.  அப்படி இருந்த சொல் வழக்கில் தலையை இழந்து  ரத்தம் ஆனது.  ஏன் அப்படி என்றால் எல்லாம் பேச்சில் வெளியிடும் ஒலிகளை மக்கள் சிக்கனப் படுத்திக்கொண்டதுதான் காரணம்.  

இப்படித் தலையைக் கொய்துவிட்டு ஒரு சொல்லைப் பயன்படுத்துவது ஆசிரியனுக்கு வேண்டுமானால் தவறாகத் தெரியலாம். உண்மையில் சொல்தலையை வைத்துக்கொண்டே பேசி மக்கள் அடைந்த நன்மை ஒன்றுமில்லை.  அதை கொய்துவிடுதலால் அவர்கள் அடைந்த நட்டமும் ஏதுமில்லை. அரத்தம் என்பது என்ன வேலையைப் பேச்சில் முடிக்கிறதோ அதே வேலையை ரத்தம் என்ற சொல்லும் முடித்துவைக்கிறது.  பல சமயங்களில் ரத்தம் என்பது உண்மையில் அரத்தம் என்றே ஒலிக்கப்படுதல் வேண்டுமென்பதைப் பேசுவோன் உணர்ந்திருப்பதுகூட இல்லை. 

ஒரு சொல் ஓர் ஆய்வாளனுக்குத் தவறாகத் தெரிந்தாலும் பெரும்பாலான மக்கள் அதை விரும்பிப் பயன்படுத்துவராயின்,  அச்சொல் ஆட்சிபெற்றுவிட்ட சொல் ஆகிவிடும்;  அதை வழக்கிலிருந்து விரட்டிவிட எந்தக் கொம்பனாலும் முடிவதில்லை.

அரத்தம் என்பதே அமைந்த சொல். இதன் அடி அர் என்பது சிவப்பு என்று பொருள்படுவது.  அரக்கு, அரத்தை முதலியனவும் செம்மையே.  அரனும் சிவ > சிவப்பு -  சிவனே ஆவான்.  இர் என்ற அடி கறுப்பு நிறம் குறிப்பது. இதிலிருந்து தோன்றியவை: இருள். இரா. இராத்திரி. இரவு என இன்ன பிற சொற்கள்.  இருள் நிறமுடையோன் என்று பொருள்தரும் இராமன் என்பதும் இர் என்பதனடிப் பிறந்த சொல்லே ஆகும். இர் ஆம் அன் = இருள் (நிறம்)ஆகும் அவன் என்பதாம். இவை பிறமொழிகளிற் சென்று வேறு பொருளை அடைந்திருக்கலாம்.   பொருள் சொல்லுக்குப் புலவர்களாலும் ஊட்டப்படுவதும்   உண்டு.      அழகுடையதாய் வேறுபொருள் ஊட்டப்படலாம்.  நாம் தடுக்கவியலாது.  யாராவது ஒரு பெரும்புலவன் கூறினால் மக்கள் அவன்கால்கள் தொழுது பின் செல்வர்.

அரத்தம் என்ற சொல் அமைந்த காலத்தில் அரத்தகம் என்ற சொல்லும் அமைந்தது.   அர்+ அத்து+ அகம் என்று புணர்த்தப்பட்டுச் சொல் அமைந்தது.  எம் செவிகட்கு இது இனிமையான சொல்லாகவே தெரிகிறது.  இது வழக்குப் பெற வில்லை என்று தெரிகிறது. அரத்தகம் என்றால் உள்ளே சிவப்பாய் இருப்பது என்று பொருள்விரியும்.  சொல் அழகுள்ளதே.

அத்து என்ற இடைநிலை இல்லாமல் அர்+அகம்=  ஆரகம் என்று முதனிலை நீண்டு ஒரு சொல்,  அரத்தத்ததைக் குறிக்க எழுந்தது.   இதை இப்போது தாளிகைகளில் அல்லது நூல்களில் எதிர்கொள்ளமுடிவதில்லை.

குருதி என்ற சொல் மட்டும்  எழுத்தாளரிடையே  வழக்கில் வந்துள்ளது.