செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

முந்தன் தாய் பிதா

தாய் தந்தையரிடமிருந்து நாமறிந்துகொண்டது தெய்வத்தை.  தெய்வம் உயர்திணைச் சொல்லாலும், அஃறிணை வடிவச் சொல்லாலும் சுட்டப்படலாம்.  தெய்வம் என்ற சொல்லுக்குத் திணை இல்லையாயினும் அது அஃறிணை என்றே கொள்வர்.  அது என்றும் சுட்டுவர். பொருளில் உயர்திணையாவது அச்சொல். தமிழில் திணை, சொற்சுட்டுப் பொருளுக்கு என்க.

நாம் இப்போது கவனிக்கப் போவது கடவுள், தாய், தந்தை ஆகியோரையே ஆகும்.  தாய் நம்மை ஈன்றவள் ஆயினும், இறைவன் தாய்க்கு முன்னாகச்
சொல்லப்படும். அதனால் அவனுக்கு "முந்தன்" என்ற சொல் அமைந்தது.
தன் தாய் தந்தை இருவருக்கும் முந்தியோன் என்பதாம். முன் குந்தியிருப்போன் என்ற பொருளில் " மு‍+ குந்தன்" (முகுந்தன்) எனவும்
படுவான்.  குந்து > குந்தன்.  குந்துதல் ‍ அமர்தல்.  மு> முன்.  கடைக்குறைச் சொல்.

தாய் என்ற சொல், தம் ஆய் என்பதன் குறுக்கம்.  த(ம்) + ஆய் = தாய். இங்கு த் + ஆய் ‍ =  தாய், இதில் அகரமும் மகர ஒற்றும் போயின.
தாய் இறைவனுக்கு அடுத்து.

தாய்க்குப் பின் அப்பன்,  அவன் பின்+ தாய். பின்னால் வரும் தாய்போன்றவன். பின் தாய் என்பதன் இரு ஒற்றுக்களும் மறைந்து, பிதா என்பது அமைந்தது.

முந்தன்  தாய் பிதா


பெற்றமகன் மனைவியிடம்...

பெற்றமகன் மனைவியிடம் வளர்ந்தால் என்ன‌
பின் தாயாம் தாய்ப்பின்னே பிதாவே என்றார்.
அற்றுறவு போமுன்னே அமைந்த வாழ்வில்
அன்பினொரு சின்னமென விளைந்த‌ செல்வம்!.
உற்றுவிரி இறத்தான வழக்கு முற்றி
ஒருநிலையில் மனமின்றி மகனைக் கொன்றான்;
பற்றுவெறி ஆனதுவே புவியின் மேலே
பாவமிதைச் செய்திடவும் துணிகின்றானே

குறிப்புகள்:  முன் இடுகைகளில் உள்ளன :

பின் தாய்  > பிதா என்பது தாய்க்குப் பின் தந்தை என்ற பொருள்.
ஒற்றுக்கள் நீங்கிய சொல். திருப்பிப் போட்ட தமிழ்.
இரத்து  -  இறத்து  இறு :  முடிதல்.   து  :  விகுதி.   அ :  சாரியை.  அற்று  என்பது அத்து  ஆனதெனினும் ஆம் .


உற்று = காதலுற்று; விரி = அது மண‌வாழ்வாக விரிந்து; இறத்து ஆன = மணவிலக்கு ஆகிவிட்ட ;  வழக்கு : நீதிமன்ற வழக்கு; முற்றி : குழந்தை யாருக்கு என்ற நீட்சிப் போராட்டமாக முதிர்ந்து;   இவற்றைச்  சில சொற்களில்  புகுத்தியுள்ளேன்,

ஒரு நிலையில் மனமின்றி = மனம் பேதலித்து;

Read news at  http://www.chinapost.com.tw/asia/singapore/2016/08/02/474168/Belgian-who.htm

முயற்சியும் அயர்ச்சியும்.


எனது கடவுச்சொல்லைக் கொண்டு அல்லது மூன்றாவது நபரின் மென்பொருளைக் கொண்டு கீழ்க்கண்ட விதமாக என் கவிதைகளில் திருத்தம்  செய்துள்ளனர். அந்தத் திருத்தங்கள் பிழையானவை.

முயற்சி. இதன் வினைப்பகுதி முயல், முயலுதல். இதனோடு சி விகுதி சேர்த்தால் முயல்+ சி = முயற்சி ஆகும்,   ஆனால்

அயர்ச்சி என்பது அயர்தல் என்ற வினையினின்று வருகிறது. ஆகவே அயர்+ சி = அயர்ச்சி ஆகும்.  அயற்சி ஆகாது, காரணம் அயல் என்பது பகுதியன்று.

இதைக் கண்டு திருத்தியதில் அரைமணி நேரம் கழிந்தது. உலாவியும்
ஒத்துழைக்கவில்லை. எப்படியோ இந்த ஊடுருவல்கள் மாற்றம்பெற்றன.

இவை முன்னாள் அதிபர் நாதன் பற்றிய கவிதையில் நிகழ்ந்தவை.