வெள்ளி, 24 அக்டோபர், 2014

On conviction and appeals

பொதுவாழ்வில் ஈடுபட்டால் === சிறை
புகவேண்டி நேர்ந்தாலும் நேரலாமே!
இதுவீழ்ச்சி என்றிடாமல் == வெளிவந்து
என்றும்போல் இன்றுமிரு, சோரலாமோ?

சாட்டுபவர் தம்வழக்கில்‍‍‍=== சான்று
காட்டுதலோ அன்னார்தம்  கடமையாமே  1
மீட்டுமுறை யீட்டில்புக‍‍===சாட்சி
கூட்டுதலோ ஆற்றலரி  தென்றுசொல்வார் .2

வழக்குரைஞர் வாதம்கேட்டு == மன்றம்
விலக்கிடுமோ தண்டனையை  யாமறிந்ததில்லை3
இழக்கும்நிலை வாராதென்று ‍‍=== எங்கள்
இளம்நெஞ்சு இன்றினியே நம்பிநிற்கும்,


1.
This line is on burden of proof: It is the legal duty of prosecution to prove its case beyond reasonable doubt
2 In appeals, witnesses are not recalled.  If recall is necessary then a retrial may be ordered
3 We cannot predict results except that we wish the party well.

தும்பைத் திணை

இனித் தும்பைத் திணைபற்றிப் பேசி மகிழலாமே.

தும்பையில் இருபத்து நான்கு துறைகள் உள . தும்பை என்றது திணை; ஏனைய அதன் துறைகள்.

வீறு என்பதில் விளைந்த வீரம் என்ற வடிவில் அமைந்த சொல்லுக்கு, இணையான மற்றொரு தமிழ்ச்சொல் மறம் என்பது.  மறம், வீரம் 
என்பவெல்லாம் மாறுபட்டு நிற்றல் ஆகும். உம் நாட்டைக் கொள்ள நினைத்த பகைவனிடம் அதற்கு இசையாமல் மறுத்து நிற்றல் ‍மறு + அம் =  
மறம் ஆனது.

செங்களத்து மறங்கருதி
பைந்தும்பை தலை மலைந்தன்று.

என்பது கொளு.

தும்பை என்பது போர்ப்பூ. போரில் இறங்கும் அரசன்  தும்பை மலரைத் தலையில் அணிந்து முன்செல்வான்.  செங்களம் =  போர்க்களம்.  

மலைதல் ‍ :  அணிதல். தலையில் மகுடம் அணிந்து, அந்த மகுடத்தில் தும்பை  மலைந்துகொள்வர்.

தும்பையைச் சூடி நின்ற அர்சனைப் புலவர் பாடினாராயின் அப்பாடல் தும்பைத் திணை. தும்பை மலைந்தவர் போரிற் புகவேண்டும். அதுவே 
தும்பை.  தமிழ் மன்னர் யாரும் ஏமாற்றியதாகத் தகவல் இல்லை.

ஆசிரியர் தொல்காப்பியனார், "மைந்து பொருளாக வந்த வேந்தனை,
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று " என்று போற்றி உரைப்பதனால், இது சிறப்புக்குரிய திணை என்க. ‍‍ மைந்து :  வலிமை. தான் வலியவன் 

என்று போர்செய்யக் கருதி வருதல்.

இதன்பின் ஓரிரு துறைகளைப் பற்றிப் பேசுவோம்.

வியாழன், 23 அக்டோபர், 2014

உழிஞைத் துறை: ஏணி நிலை.


உழிஞைத் திணையில் ஏணி நிலை என்பது ஒரு துறை. பகையரசன் மதிலை அணுகி, அதன் சுவர்மேல் ஏறும்பொருட்டு ஏணி சாத்த முயல்வதைப் பாடினால், அது ஏணி நிலைத்துறை எனப்படும்.

பகை அரசனின் படை வீரர்கள் பாதுகாப்பான துளைகளை உடைய ஏவறைகளுக்குள் இருந்துகொண்டு மதிலை உடைத்து உள்புக முனைவார்மேல்  அம்பு எய்வர்.

எயில் ‍  எய்+இல் > எயில்.  (இங்கு யகர ஒற்று இரட்டிக்காது) இது  சொல் அமைப்பு. எயில் =  மதில்

எய் ‍  (அம்பு) எய்தல்.  இல் = இடம், வீடு.

குறிப்பு: மெய்+இல் =  மெய்யில்.  இல் என்னும் வேற்றுமை உருபு வருமாயின்  இரட்டிக்கும்.  "உடம்பில்" என்பது.

ஏணி நிலைக்கு ஒரு பாடல்:

கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுர‌ங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும் ‍‍‍=== பொற்புடைய‌
பாணி நடைப்புரவி  பல்களிற்றார் சாத்தினார்
ஏணி பலவும் எயில்.

---- (பு.வெ.மா. 110 உழிஞை: 18 பார்க்கவும்)

பொற்புடைய = அழகிய;

பாணி நடைப் புரவி = பண்ணுக்கு இயைய நடக்கும் குதிரைகளை(யும்); (நாட்டிய நடை நடக்கும் குதிரைகளை(யும்))

பல் களிற்றார்  =  பல யானைகளை(யும்) கொண்டுவந்து மதில் சூழ நிறுத்தியுள்ள, உழிஞை மேற்கொண்ட அரசர்;  (உழிஞை என்பது: முன் விளக்கப்பட்ட இடுகைகள் காண்க)

எயில் = மதில்  (மதிலின் சுவர்களின் மேல்;) 

ஏணி பலவும் = பல எண்ணிக்கையிலான ஏணிகளையும்;
"உம்" வந்திருப்பதால் உள் புகுதற்கு ஏனை வேலைகளையும் செய்தனர் 
என்பது.
சாத்தினார் = ஏறுவதற்கு எளிதாக சாய்வாக நிறுத்திவைத்தனர்;

இப்படி ஏறவருவோரைத் தடுப்பதற்காக அந்த மதிற்கண்  "கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுர‌ங்கும் விற்பொறியும் வேலும்"  ஆகிய பொறிகள் நாட்டப்பட்டிருந்தன  என்று அறிக.

விலக்கவும்:
அவற்றை விலக்கவே ‍‍‍‍  ‍  அதாவது செயலிழக்கச் செய்யவே ஏணி வைத்து மதிலுட் புகுவர்.

சிலப்பதிகாரம் வரிகளையும்    (15: 207‍ 18  )   காணவும்.