ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஈபோலா!


ஈபோலா ஆற்றங்கரை இருந்தெழுந்த ஈபோலா!
ஈபோலா பறக்குமென்று மில்லையில்லை! குரங்குகளை
நாமேலே வைத்தவர்கள் நல்லபடி சுவைத்துண்ண‌
மாமேனி நீர்நோயின் அணுக்களுயிர்  மாய்த்ததுவே.

எத்தனை உயிர்களைக் குடித்ததுவோ இந்தநோயே
வித்தக  மருத்துவரும் வேண்டிய துணைப்பொருள்வ‌
ரத்துகள் நோக்கியே வழங்கிடக் காத்திருக்கச்
செத்தும டிந்ததுமோர் சீர்கேடே ஒப்புவிரோ?

Meanings:

ஈபோலா -  ஆற்றின் பெயர் ;  ஈ போலா  -  நோயணு  virus
ஈ  போலா -  ஈயினைப்   போலவா ?
நாமேலே  - நாக்கின் மேல். 
மாமேனி  - விலங்கு உடம்பு.   நீர்-  body fluids.  
நோயின் அணுக்கள்  -  viruses.

வித்தக  -  an expert.
துணைப் பொருள் -  medical supplies 
வரத்துகள்  -   (supplies)
Refers to one Dr  Khan who himself was killed by Ebola.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

Belief in God and astrology கடவுளை..........

(These are  in different meters )

கடவுளை நம்பவில்லை ‍‍‍--- சிலர்
கணித்தறி சோதிடம் நம்புவ தில்லை.
இடர்வரும் வந்தபோதும் ‍‍--- விழுந்
திறைவனின் ஆசிகள் வேண்டுவ தில்லை!

பற்ற‌னும் துன்புற நேரின் --- அவன்
பளுவினை ஏற்றிடப் பக்கலில் தெய்வம்!
உற்றதை ஒற்றையாய் நின்று ‍‍‍--- துன்பம்
உழந்திடும் ஓர்சுமை அன்னவற் கில்லை.

இல்லெனில் ஏதுதுணை‍‍‍---அவன்
இதயமும் வீழ்ந்திடும்; எழும்புவ தெப்படி?
கல்வரு  நீரினில்போல் ---- விழும்
காணவும் கிட்டாது மீளவும் ஒட்டாது.


சோதிடம் பொய்யெனிலோ  ‍‍‍--- இனித்
தோன்றுவ‌ தெங்ஙனம்  கூறுதல் கூடும்?
வாதிடு வாய்க்கிடமோ ‍--- இன்றி
வருவது சரிபட வரைவது மெப்படி?

தெய்வமும் இல்லையென்றால் --- மனிதன்
செய்வதிற் கேள்விகள் கேட்பாடும்  ஒன்றில்லை;
வைவதும் வதைகொலையும் --- ஆனவை
செய்பவர்க் கோர்தடை இவவுல கத்திலை

இன்மையும் உண்மையெனில் --- நீவிரும்
ஈண்டு  தொழுவதில் மூண்ட செலவுள ;
உண்மையில் உண்டெ னிலோ --- தெய்வம்
உமக்கொரு தண்டனை தரக்கெடும் யாவுமே!


குறிப்பு:  இங்கு வெண்டளை பின்பற்றவில்லை; மேலும்  மனத்துள் தோன்றிவந்த சந்தங்களையும் மாற்றி அமைக்காமல் எழுதப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

nArmudich chEral & kAppiyARRuk kAppiyanAr

 சங்கப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனார்,   களங்க்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடியது:-

வாழ்க நின் வளனே ! நின்னுடை வாழ்க்கை 
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த !
பகைவர் ஆரப் பழங்கண் அருளி 
நகைவர் ஆர நன் கலம் சிதறி 
ஆன்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மால் ;
வான் தோய் நல்லிசை உலகமோடு உயிர்ப்ப 
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் 
மா இரும் புடையல் மாக் கழல் புனைந்து 
மன்  எயில் எறிந்து மறவர்த் தரீஇ
தொல்  நிலைச் சிறப்பின் நின்  நிழல் வாழ்நர்க்குக் 
கோடு அற  வைத்து கோடாக் கொள்கையும் ;
நன்று  பெரிதுடையாய் நீயே 
வெந்திறல்  வேந்தே இவ் வுலகத் தோர்க்கே! 

வாழ்க  நின் வளனே -   உன்  நாட்டு  வளம் (அனைத்தும்) வாழ்க!


!நீ  இருந்தாலே அவ்வளங்கள் உனக்கு உரியவாம் ஆதலால் நீயும்  உன் வளமும்  வாழ்க என்று பொருள்


வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த ! -- கட்டியம்  கூறிப் பாடுவோர் உன் புகழை  உயர்த்திப் பாடுக


பழங்கண்  அருளி  -  நீ  துன்பங்கள் நீங்க  அருள் புரிந்து  


பகைவர் ஆர  =  அதனால் உன் எதிரிகள்  இடர் நீங்கப் பெறுக


நகைவர்  ஆர  =  உன்னுடன் நட்புடன் இருந்து மகிழ்ந்து   கொண்டிருப்போர்க்கு   

நன்கலன்  சிதறி =  உன் பாத்திரத்திலிருந்து  எடுத்துக் கொடுத்து;.

ஆன்று  =  நிறைந்து ;  அவிந்து =  யாவும் அறிந்தவனாய் ; அடங்கிய  =  அடக்கம் உடையோனாகிய '   ;  செயிர்தீர் =  மாசிலாத ;

செம்மால்  =  செம்மலே! (  நேர்மையாளனே )

வான் தோய் நல்லிசை உலகமோடு உயிர்ப்ப   உன்  வான்   அளாவிய புலவர்  கூறு புகழ் மக்களிடையேயும் பேச்சிலும் மூச்சிலும் கலந்திடுக ; 

துளங்கு குடி  =நிறைவு அடையாத குடிமக்கள்

திருத்திய  =  நிறைவு பெறச் செய்த 

வலம்படு  வென்றியும்  -  கொண்டாடி மகிழத் தக்க  வெற்றியும்

மா இரும் புடையல்  = மிகப் பெரிய  மாலை  ;

மாக் கழல் புனைந்து -  பெரிய வீரக் காலணிகள் அணிந்து     

மன்  எயில் எறிந்து மறவர்த் தரீஇ      பெருங் கோட்டையை வென்று  போர் வீரர்களுக்கு  அளித்து ;


தொல் நிலைச்  சிறப்பின் -  முன் இருந்த சிறப்புடன் ;

நின் நிழல்  வாழ்நர்க்கு -  உன் ஆட்சியில் உள்ளோருக்கு ;

கோடு அற வைத்து -  எல்லைகளை  அப்புறப் படுத்தி வசம் ஆக்கிக்கொண்டு ;  The border  between enemy territory and his own was  removed. He took possession of the enemy country.

கோடாக் கொள்கையும்  - குற்றமில்லாத  நேர் கொள்கையும்  



நன்று  பெரிதுடையாய் நீயே வெந்திறல்  வேந்தே இவ் வுலகத் தோர்க்கே! 

இவ்வுலகத்தார்க்கு   நன்மையையும்  பெருமையையும் உடையோன் ஆகினாய் 

மிகுந்த திறம் உடையவன் நீதான்    என்றவாறு  

கப்பியாற்றுக் காப்பியனார்  பெயரிலிருந்து    அவர் காப்பியக் குடியினர் என்று தெரிகிறது.  அவர் ஊர் காப்பியாறு  ,  திருவையாறு என்பதுபோல  :"காப்பியாறு " என்ற  இது  ஊர்ப் பெயர்.  காப்பு+ யாறு  = காப்பியாறு.  தொல்  கலைகள் முதலியவற்றைக் காக்கும் புலவர் குடியினர்.  தொல் காப்பியனாரும்  இக்குடியினரே.  

ஆன்று அவிந்து என்ற தொடரில் அவிதல் -  தற்பெருமை இன்றி அமைதலைக் குறிப்பது.  வெற்றிச்  செல்வன் ஆயினும்  நார்முடிச் சேரல்  பெரிதும் அடக்கமுடையவன்  என்று தெரிகிறது. அகங்காரம் அற்ற வேந்தன் என்று அறிகிறோம் .  யாவும் அறிந்தோனே   இங்ஙனம்  அமைபவன். ஆதலால் "யாவும் அறிந்தோனாய்" என்று  பொருள் சொல்லப்பட்டது. எப்படிப்  பெரியோரிடம் நடந்துகொள்வது என்று அறிந்தவனே "அறிந்தவன்"  எனற்குத்  தகுதி யானவன்.   அடுத்துக்  கூறப்பட்ட    அடக்கம்   இதில்  மிக  உயர்ந்ததாகும் .அடக்கம்   அமரருள்  உய்க்கும்  என்றார்  வள்ளுவர்    அடங்காதவன்  பேதை  

மன்  - இஃ து   பெரிது,  கடத்தற் கரியது  எனற்  பொருட்டு.

பழங்கண்     இது 

பழங்கண் ‍  இது ஆற்றல் மிகுந்த ஒரு சொல்லாட்சி.  கண்  என்னும் உறுப்பு, பழந்தமிழரிடை இரக்கம் வெளிப்படுதற்குரிய வாயிலாய்க் கருதப்பட்டது. "கண்ணோடுதல்" என்னும் இலக்கிய  வழக்கினை ஆய்ந்து இதை அறிக. "அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண் பார்!"  என்பதும் "இன்னமும் பாரா முகம் ஏனம்மா!" என்பதும் இவ்வழக்கு ஒட்டியவையே. பழங்கண் என்றது, போர் முதலிய வாரா முன்னரே காட்டிய அதே இரக்கத்துடன் அருளல் வேண்டும் என்று குறித்தற்காகும்.  "இப்போது நீ எங்களைப் பார்ப்பது வெற்றி பெற்றுவிட்ட கண்களால். மன்னா! நீ எங்களைப் பழைய கண்களால் பார்த்து அருள்புரி" என்று   பகைவர் இறைஞ்சுதல்போல் அமைத்துள்ளார் காப்பியாற்றுக்காப்பியனார்.  கண் என்பதே பின் கரு > கருணை என்று திரிந்தது. கரு என்பது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று. இதைப் பற்றிய என் முன் இடுகைகளைக் காண்க.


அன்பாவது, நாம் அறிந்து,  நம்முடன் அணுக்கமாய் நிற்பார், நண்பர் என இவர் மாட்டுச் செல்வது; அருளாவது எவ்வுயிர்க் காயினும் செல்வது.  பகைவர் வேறுபட்டு நிற்பவர். பகு > பகை > பகைவர். பகுபட்டு நிற்பார். அரசனையும் பகைவரையும் ஒரு கோடு பாகுபடுத்தி நிற்கிறது. அதைக் கடந்து செல்லுதலே அருளல் ஆம்.


எல்லைகளைக் "கோடு அற " வைத்தபடியால் இந்தக் கோட்டையும் தாண்டிச் செல்லுதல் அரசனுக்குத் தலைக்கடன் என்று காப்பியனார் அறிவுறுத்துகிறார். 

வான் தோய் நல்லிசை:

ஈதல் இசைபட வாழ்தல் என்கிறார் வள்ளுவனார்.  இல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும்.  அது அறம். அதைக் கேட்டறிந்த புலவர்கள் வந்து பாடிப் புகழல் வேண்டும். இதைத் தான் இசை என்ற சொல் குறிக்கிறது; மற்ற வட்டிசை கொட்டிசை தட்டிசைகளை இங்கு குறிக்கமாட்டா. 

வான் தோய் நல்லிசை உலகமோடு உயிர்ப்ப:  பாரதி வான்புகழ் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்,  காப்பியனார் சொல்வது ஒரு வகை வான் புகழே. வான் முழுவதும் தோய்ந்துவிட்ட புலவர் பாடிய பெரும்புகழ். அது  மக்கள் தரு புகழாய் மாறிடவேண்டும். அப்போது புலவர் தருபுகழுக்கு "உயிர்ப்பு"  வந்துவிடுகிறது. காப்பியனார் உலகம் போற்றுக, மக்கள் போற்றுக என்கிறார். மன்னராட்சி காலத்தில் வாழ்ந்த காப்பியனாரிடம் இத்தகு நுண்ணிய கருத்தினை நாம் காண்பது  சங்க இலக்கிய மாண்பினை நமக்கு எடுத்துக்காட்டுகிறது


பகைவர் ஆர, நகைவர் ஆர என்பது,  அரசியலில் பகைவர்களை அப்படியே விட்டுவிட முடியாது; அவர்களுக்கும் இந்த வெற்றிச் செல்வன் ஏதெனும்  செய்ய வேண்டும்; அவர்களும் அமைதல் வேண்டும். நண்பர்களும் அமைதல் வேண்டும். யாரும் கிளர்தெழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அரச தந்திரம் அன்றோ?
இதையும் மன்னனுக்கு அறிவுறுத்துகிறார் காப்பியனார்.

இவருக்குப் பரிசில் "தக்க இணை"யாக வழங்கப்பட்டது. இருந்தாலும் சொல்ல வேண்டியவற்றை வழைப்பழத்தில் ஊசிபோலச் சொல்லத் தவறவில்லை இவர்.
இஃது உண்மையான தமிழ்ப்புலமை ஆகும்,
இந்தக் காலத்துத் தமிழ்ப்புலவன் நடுங்கியிருப்பான்.....,

பதிற்றுப் பத்து    4: 27,  வரிகள்  1-13.