செவ்வாய், 3 ஜூன், 2014

என்னமா

"சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டோம்; இனி என்னமா உனக்குச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை "

மா என்பது அளவு  என்று பொருள் படும் சொல். இதற்கு இன்னும் வேறு பல பொருளும் உண்டு.

என்னமா என்றால்  என்ன அளவு ,  எவ்வளவு  என்பது. இப்போது இது எவ்விதம், எப்படி என்றும் பொருள் தருகிறது.

பெரியவர் அழைத்திருக்கிறார் , என்னவா இருக்கும் ?   ---- இதில் வரும் என்னவா(க) என்பது வேறு சொல்.

உலகம், உகம், இகம்.

உலகம் என்ற சொல், தலையிழந்து லோகம் என்று திரிவதும், வேறு மொழிகளில் லோக் என்று குறுகுவதையும் நீங்கள் அறிவீர்கள்.

இப்போது அதே உலகச் சொல், வேறு திரிபுகளை அடைவதை அறிந்து இன்புறுவோம்.

எல்லாம் என்பது  கவிதைகளில் "எலாம்" என்று வருவதை அறிவீர்கள்.  இதை இடைக்குறை என்று கூறுவோம். தொகுத்தல், இடைக்குறை முதலியவற்றுக்குள் இருக்கும் வேறுபாடு இப்போது பேசத் தேவையில்லை.

உலகம் என்பது  உகம் என்று  குறையும். லகரம் இதில் மறைகிறது. உலகம், உகம் என்று மாறி, அதே பொருளைத் தந்து நிற்கும்.

சில வேளைகளில் இங்ஙனம் எழுத்து(க்கள் ) மறையும்போது, பொருள் சற்று மாறுபட்டுவிட்டதுபோல் தோன்றுவதும் உண்டு.

நண்பர் >  ந(ண்)பர் > நபர். தோழன் என்ற பொருள் மாறி, வெறுமனே "ஆள்" என்ற பொருளில் வரும். தோழர் என்ற சொல்லும் இப்படி மாறாமலே பொருளிழந்து வருவதுண்டு. "அந்தத் தோழர் கடைக்குப் போய்விட்டார்." இப்படி இச்சொல்லைப் பொது நிலையாகப்  பயன்படுத்துவோருக்கு எல்லோரும் தோழர்தாம்.

நிற்க, உலகம் உகம் என்றாகி,  மீண்டும் முதற்குறைந்து "கம்" ஆகி, தனியே நிற்காமல், இகம் ஆகிறது.  இ= இந்த; கம் = (உல)கம். இது முதற்குறைந்த சொல் ஆதலின் "க் " என்ற வல்லெழுத்துத் தோன்றவில்லை போலும். அன்றியும் சொல் அமைப்புகளில் ஏனைப் புணர்ச்சிகளில்போல் வல்லெழுத்து தோன்றாமலும் வரும் .

இகபர சுகம்,  இக பர மிரண்டிலும் நிறைவான ஒளியே!  ........என்பவற்றைக் காண்க.

உலகம், உகம், இகம். அறிந்தின்புறுக.

உலகம் என்பதில் கம் மட்டும் பிரிந்திடுமாயின்,  அது உண்மையில் கு+அம் அன்றோ? அப்படியானால், இ+கு+அம் = இகம்! இஃது உண்மைதான் என்றாலும், இத்திரிபுக்குக் காரணம், மேற்கண்டபடி என்பத‌றிக.

இவ்வுலகம் >   இ(வ்வுல)கம் >  இகம் எனினுமாம். This is an expertly abbreviated word.  

ஞாயிறு, 1 ஜூன், 2014

திலகம்.

பேச்சு வழக்குத் திரிபுகளாயினும், சில திரிபுகள் எப்போதும் நினைவிலிருத்திக்கொள்ளத் தக்கவை. இப்போது இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

புரள்  ‍  பிறழ்*.  (ர <> ற;  ள் <> ழ்).  இவ்விரண்டு சொற்களும் இலக்கிய வழக்கிலும் பேச்சிலும் உள்ளன.  இங்கு  உ  (பு)  என்பது  இ (பி) என்று மாறியுள்ளமை காணலாம்.

இனி:

சுண்ணாம்பு : சின்னாம்பு.
துன்னு  :  தின்னு.
புள்ள   : பிள்ளை
புண்ணாக்கு :  பிண்ணாக்கு.
புரளி  :  பிரளி,  பெரளி.

இவற்றிலெல்லாம் ,  முதலெழுத்தில்  (மெய்) நின்ற உகரம், இகரமாய்த் திரிதல் காணலாம். சோடிச் சொற்களில்  ஒன்று பேச்சு வழக்கினது.

துலங்கு என்பதை நோக்கின், பொருள் ஒளிவீசுதல் என்பது புரியும். இலங்கு என்பதும் அதுவே.

உ <> இ  துலங்கு <> இலங்கு.
து > தி;  த் + உ  > த் + இ


துலங்கு என்பதன் அடிச்சொல் துல என்பது. கு என்பது  வினைச்சொல்லாக்க விகுதி.

துல > தில.
துலகு > திலகு > திலகம்.

நெற்றி துலங்குவதற்கும் ஒளிபெறுவதற்கும் இடுவது: பொட்டு.

திலகம்  :  ஒளி வீசும் பொருள் அல்லது ஆள்.   ஒளி  ‍ பெரும்புகழுமாகும்.



அடிக்குறிப்பு:

* புரள் - பிறழ்  :  இவை ஒரே மூலத்திலிருந்து ஆனால் வெவ்வேறு அடிகளிலிருந்து பிறந்தவையாய் இருக்கக்கூடும். We would not  delve into that for this submission.