செவ்வாய், 3 டிசம்பர், 2013

அயல். > அசல்.

இனி, அயல் என்ற சொல்லுடன் சற்று  விளையாடலாம்.


ஐயம், என்பது ஐயப்பாடு. இதன் பகுதி யாகக் கருதத்தக்கது ஐ ஆகும். ஐ+அம் = ஐயம்.

ஐ = அய்.

அல் என்பது  அல்லாததைக்  குறிக்கும்  அடிச்சொல்.


அய்    + அல்  =  அய்யல்    >  அயல். > அசல்.


அய்யல் என்றுதான்  யகரம் இரட்டிக்க வேண்டுமென்பதில்லை.

பை  >    பையல்   > பயல்  >  பசல் >   பசன் > பசங்க....  





வாசித்தல் & அசல்

வாசித்தல் என்பது வாயினால் ஒலித்துப் படித்தல் என்று பொருள்படும்: இஃது சொல்லின் அமைப்பிலிருந்து வெளீப்படும் பொருளாகும்.

வாய் > வாயித்தல். > வாசித்தல்.
 
யகரம் சகரமாக மாறுவது தமிழியல்பு.

வாசித்து என்பது மலையாள மொழியில் வாயிச்சு என்றே  சொல்லப்படும்.

வாயித்து என்பதெ முந்து வடிவம். இதை முன்பு நான் எழுதியுள்ளேன். எங்கு என்று நினைவில் இல்லை.

அசல் என்பது தமிழ்ச்சொல் அன்று என்பர். நம்பிக்கைக்குரிய நல்ல பொருள்கள் பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்தே வந்தபடியால், அயல்  என்ற சொல் திரிந்து அசல் ஆகி போலியன்மையைக்
குறித்தது. உள் நாட்டுப் பொருள்கள் கலப்படமுள்ளவை என்று நினைத்ததையே இது காட்டுகிறது.

இதில்  யகரம் சகரமானது நோக்குக. அயல் > அசல்.

புதன், 20 நவம்பர், 2013

உற்பத்தி


உற்பத்தி என்பது மிக்க அழகாய் அமைந்த சொல்லாகும். கரு ,  கருப்பையை உள் பற்றிக்கொண்டுதான் வளர்ந்து பெரிதாகிறது.  

மரங்களின் விதைகளும் எங்காவது போய் விழுந்து மண்ணினுள்  பற்றிக்கொண்டுதாம்  வளர்ச்சி பெறுகின்றன . 


உள் பற்றுதல் என்ற கருத்திலிருந்து உண்டாகுதல் என்னும் கருத்து வளர்ச்சி பெற்றது. உண்டாகு என்பதிலும் உண்டு என்னும் சொல், உள்+து என்று அமைந்ததே. உள் என்பதே உற்பத்தி  என்பதிலும் பொதிந்துள்ளது உணரற் பாலது ஆகும்.


உற்பத்தி என்பதில் உள் > உல் என்று திரிந்துள்ளது. பற்றுதல் என்பது பற்றி >பத்தி என்று திரிந்துள்ளது. உள் என்பது பத்தி என்பதனோடு புணர,  உட்பத்தி என்று ஆனாலும், பின் உத் பத்தி எனறு திரிவது மற்றொரு வழியாகும்.


இது தமிழ் மூலச்சொற்களைக் கொண்டு அமைந்தது. இந்த விளக்கம் எல்லாம் கூறிக்கொண்டிராமல், இது தமிழன்று என்பது இன்னும் எளிதாக இருக்கும். 


உள்  என்ற  தமிழ்ச் சொல்  மலாய்  மொழியில்  உலு என்று திரிவது கவனிக்கத்தக்கது.

படிப்பறிவு இல்லாதவர்கள் "உலுப்பத்தி" என்பதும் கருதத்தக்கது.