கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.


கடிந்த : இக்காலத்தில் இதைக் "கடிந்தவை" என்றே எழுதுவர். கடிந்தவைகள் என்று இரட்டைப் பன்மையாக எழுதுவது விலக்கத்தக்கது.

கடிந்து : விலக்கி.

ஒரார் : ஒருவார் என்பது இப்படிச் சுருங்கி நின்றது. (தாமும்) விலக்கமாட்டார். ஒருவுதல் - விலக்குதல். தம் நடத்தையிலிருந்து அகற்றுதல் என்பதாம்.

ஒருவு என்ற வினைச்சொல்லினின்று "வு" கெட்டது. அதாவது "வு" களையப்படவே, ஒரு என்றாகி, பின் ஆர் என்பது வந்து ஒட்ட, ஒரு+ஆர் = ஒரார் எனப்புணர்ந்த எதிர்மறை வடிவம்.

முடிந்தாலும் : நடைபெற்றாலும். நடந்தேறினாலும்.

பீழை - பீடை. துன்பம். டகரமும் ழகரமும் ஒன்றுக்கொன்று நிற்கவல்ல எழுத்துக்கள்.