வெள்ளி, 19 நவம்பர், 2010

புரட்சிக்குத் தயாராகுங்கள்.

புரட்சிக்குத் தயாராகுங்கள்.


எரிமலை வெடித்துச் சீறி
வெளியெங்கும் குழம்பைத் துப்பிச்
சரிவுற மனைக்குள் ஏறச்
சாய்ந்தன மரங்கள் பக்கல்;
உரியதும் யாதோ இந்த
உலகினில் மக்கள் செய்தற்கு?
அரியதைச் செய்வோம் செவ்வாய்
அங்குசென் றொளிந்து கொள்வாம்!

நீரொடு நிலமும் உண்டு
நெஞ்சுக்கு வளியும் உண்டாம்
ஓரிரு திங்கள் நின்றே
ஓய்ந்தபின் திரும்பி வந்தால்
ஊரினில் புதுமை செய்வோம்!
ஒன்றுக்கும் கவலை வேண்டாம்
யாருடன் வருவீர் இங்கே
யாமினிப் புரட்சி செய்வோம்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

கெட்டவர்யார் ?

எதிரியென்று யாரைச்சொல்வோம் -- இன்றே
எதிரியென்பார் நாளை உதவுநண்பர்;

உதறி எவர் தம்மைவிடுப்போம் --இந்த
உலகத்தில் என்றும் கெட்டவர்யார் ?

திங்கள், 8 நவம்பர், 2010

வறுமையோ வந்துற்ற தில்.

எயிறு தொலைந்து மயிரும் குலைந்து
பயறு கடைந்துண்ணும் பாழ்முதுமை வந்தும்
பொறுமை கடைப்பிடியாள் பொக்கை பிளந்தால்
வறுமையோ வந்துற்ற தில்.