வெள்ளி, 30 ஜனவரி, 2009

புசி > போஷி> போஷாக்கு

புசித்தல் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றியதே போஷி, போஷாக்கு என்பன.

போஷி என்பது, இருக்கு வேதம், அதர்வண வேதம் முதலிய நூல்களிலும் உள்ளது.

புசி > போசி > போஷி.
போஷி > போஷாக்கு.

போஷி + ஆக்கு = போஷாக்கு.

புசி+ஆக்கு > போஷாக்கு எனினும் அதுவே.

திங்கள், 26 ஜனவரி, 2009

உறங்கும் உலகினர்

மையக் கிழக்கில் நடக்கும்சண்டை -- அது
மனத்தை உருக்கும் உலகெங்குமே! -- ஆயின்
நையத் தமிழரைப் புடைத்துக்கொல்வார்--கண்டு
நாவினை யேனும் அசைத்ததுண்டோ? -- இன்று
செய்யத் தகுந்தவை அனைத்தும்செய்த -- தமிழ்ச்
சீர்பெறும் ஞாலத் தமிழெரெல்லாம்,-- சென்று
பைய உலகினர் கண்களுக்குள் --- தோன்றி
பாய்ந்து விழித்தெழச் செய்திடாரோ?

வெள்ளி, 23 ஜனவரி, 2009

நெறிதவறிய வேடன்

தமிழன் எனச்சொன்னால் பாவமோ? -- இந்தத்
தரையில் குடிவாழ்தல் நோகுமோ -- நீரில்
அமிழ்ந்தும் அவன்சாக வேணுமோ -- தீயில்
அழிந்தால் புவிக்காவல் ஆறுமோ?

குழந்தை முதியோரும் பெண்களும் -- ஒரு
குற்றம் அறியாநோ யாளியும் -- உயிர்
இழந்தும் உடல்கள்புண் ஆகியும் ---போர்
இனியெத் தனைநாட்கள் போகுமோ?

இரத்த வெறிகொண்ட மாந்தர்கள் -- இங்கு
இயற்றும் சமர்நிற்க வேண்டுமாய் -- ஓர்
உரத்த குரல்தந்துஇஞ் ஞாலமும் ---அமைதி
ஓங்கச் செயற்பால காலமே!

புலிக்கே வலைவீசும் வேட்டுவன் -- வந்த
பொன்மான் முயல்தம்மைச் சாட்டுதல்,--- ஒரு
நெறிக்குள் அவனில்லை காட்டுமே --- உலகு
நில்லா தவன்மன்றில் ஏற்றுவீர்!