புதன், 14 ஜனவரி, 2009

எண்கணிதம் தொடர்ச்சி.

நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!

இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!

என்கணக்கு இதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!

எண்கணிதப் பலன்

எண்கொண்டு கணித்துச் சொல்வார்
இனிவரும் பலன்கள் எல்லாம்!
விண்ணென்றும் இருந்த தைப்போல்
வேறுபடா திருக்கக் கீழே
மண்ணின்று பலதீ மைசூழ்
மடுவினில் விழுந்து மாளக்
கண்ணொன்றும் இலதாய்ச் செல்லும்
கதியினைக் கணித்தா சொன்னார்?

திங்கள், 12 ஜனவரி, 2009

viiram

வீரமே ஓர்முதலாய் வெற்றியே ஊதியமாய்
வீறுடன் போராடும் வெஞ்சமரில் --- சீருடனே்
நெஞ்சில் விழைந்ததெலாம் நேராம் விடுதலையே
நஞ்சுமே நாடெனின் ஊண்.


போரிடும் மறவர்க்கு வீரமே ஒரு  மூலதனம் ஆகும் 
வெற்றிதான் அவர்கட்குக் கிடைக்கும் இலாபம்.
கடினமான போரில் எழுச்சியுடன் போராடுகிறார்கள் .
அவர்கள் வேண்டியதெல்லாம்  உண்மையான நேர்மையான விடுதலையே ஆகும்.
நீ  நஞ்சை நாடு ( நாட்டம்  கொள் ) என்றாலும் அவர்கள் அதுவே எமக்கு "ஊண் " (உணவு ) எனறு  உண்டு அமைவர் .

இது வீரத்தின் இலக்கணம் ஆம் .