செவ்வாய், 27 ஜனவரி, 2026

சிறிய வீடானாலும் சிறந்த பூக்கூடை ( கவிதை)

 சிறிய வீடானாலும் 

சிறந்தபூக் கூடையிலே

நறியபூ தமைநிறுத்தி

நாற்புறமும் மின் தீபம் 

உரியகண் பார்த்திடவே

உலையாத நன் கவினாம்

அரியவித் திருநாளில்

அகமகிழ்வு பெருகுவதே.


பொருள்:-


நறிய - நறுமணம் வீசுகிற

மின் - மின்னாற்றலினால் ஆன

உலையாத -  கலையாத, அழிதலில்லாத

அரியவித் திருநாள் -  வரும் 2026 புத்தாண்டு





பொம்மைகள் அலங்கரிப்பு

சனி, 24 ஜனவரி, 2026

பிரளயம் இது பிறழ் வினையிலிருந்து.

 பிரளயம் என்ற சொல் சமஸ்கிருதமா?

பிரளயம் என்பது இயற்கை நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, அழிவும் ஏற்படுவது ஆகும்.  பிரளயங்களில்,  தினப்பிரளயம் என்பது பிரம்மனின் ஆயுளில் ஒரு நாளின் முடிவில் ஏற்படுவது  ஆகும். தினந்தோறும் நிகழ்வதால் நித்தியப்பிரளயம் என்றும் கூறப்படுவதாகும். நைமித்திகப் பிரளயம் என்பது பகல் முடிந்ததும் நிகழ்வது.  அவனது வயதில் நூறாண்டுகட்கு ஒருமுறை ஏற்பட்டால் பிர்மப்பிரளயம் எனப்படும். அழிவுகள் ஏற்படும் முறைகளை அறிந்துகொள்ள மனிதன் முற்பட்டது மிக்கப் பாராட்டுக்குரியது என்று சொல்வோம்.  நமது பண்டை மக்கள், ஆய்வு மனப்பான்மை உடையவர்களாய் இருந்து இப்படிச்  சொற்களைப் படைத்திருப்பது நமக்கும் ஒருவழிகாட்டுதல் என்றே கருதவேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுகளில் முற்செலவை  இம்முறை கைக்கொண்டு அவற்றுக்குரிய சொற்களைப் படைக்கும் திறத்தை நாம் பெறுவது நிகழ்தல்,  இன்றியமையாது வேண்டப்படுவதென்க.

பின்றுதல் என்ற வினைச்சொல் பின் என்பதிலிருந்து வருகிறது. பின்றுதல் என்பதற்கும் பிறழ்தல் என்பதற்கும் பொருண்மைத் தொடர்பு மிக்குள்ளது என்று அறிக, உன் செலவுகள் பின்றாமல் பேணிக்கொள் என்றால் ''பிறழாமல் பேணிக்கொள்''  என்று பொருள்.

பிறழ்தல் என்பது புரள்தல் என்றும் வருவதுதான்.  இது பேச்சுவழக்கில் நன்கு வழங்குகிறது என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

பிறழ் என்பது பிரள்(தல்) என்று மாகும்.   பிரளயம் என்ற சொல்,  பின் காட்டிய சொல்லினின்று வந்தது ஆகும்.  பிறழயம் என்று வருதல் இல்லை யாதலால்,  பிறழ் என்பது பிரள் என்று மாறிய பின்பே பிரளயம் என்ற சொல் உருவாகும் என்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 19 ஜனவரி, 2026

புராணம் என்பதென்ன

 புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து  புராணம் என்ற சொல்லுக்கு  அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.

ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன்,  உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு,  அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.  

புனைதல் என்பதென்ன?  புனையரணம் புராணம்.இந்தச் சொல்,  னை என்னுமெழுத்தும் யகரமும்  கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும்.  இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்>  புராணம்  ஆனது.  இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர்.  மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு  என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.

இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம்.  இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை  எழுதிவைக்க ,  புர+ அணம் >  புராணம் என்று சொல்லமைந்தது என்னில்,  அதுவும் கூடுவதே.  

இச்சொல்லை முன்னரே  ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர்.  அதையும்  சிந்தித்துக்கொண்டால்,  இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.

புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை