செவ்வாய், 15 அக்டோபர், 2024

ஷாகல ஷாக என்ற ருக்வேத நூற்பகுப்பு

உருக்குவேதத்தில் 21 பகுதிகள் இருந்தன என்பர்,  இன்னும் பல பாடல்கள் அழிந்தன என்கின்றனர்,  இப்போது சிலவே கிடைத்துள்ளன.   தமிழிலும் பல நூல்கள் அழிந்தன,  அவை பெரும்பாலும் (பண்டைத் தமிழ்) இலக்கியங்கள். இவற்றை மீட்டுருவாக்குதல் இயலாத வேலை. இந்திய மொழிகளில் பாடியவர்கள் மிகுதி, கேட்டுப் பாதுகாத்தவர்கள் குறைவு. எஞ்சி இருப்பவற்றில் இன்றும் படிக்கப்படாமல் போய்க்கொண்டிருப்பவை பலவாம். இந்தியருள்ளும் குறிப்பாகத் தமிழருள்ளும் எங்களிடம் எல்லாம் உண்டு என்று சொல்வர் தவிர அவற்றை ஆழ்ந்து கற்போர் சிலரே  ஒருநாளில் ஒருவர்கூட இருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

இந்த நூல்களும் அதன் பாட்டுக்களும் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவை என்று வெள்ளைக்காரன் எழுதுதற்குக் காரணம்,   இவற்றை எல்லாம் மக்கள் தொடர்பு அற்றவையாக ஆக்கிலன்றி,   துணைக்கண்டத்தில் இறைநலக் கோட்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நாட்டை அரசாள்வதில் வெற்றி எதையும் காணவியலாது என்பதனால்தான். நாம் கூறும் வெள்ளையர்கள் என்போர் கிழக்கியந்தக் குழும்பினர் காலத்து இந்தியாவை தம் ஆட்சிக் குட்படுத்தியோர். இப்போது உள்ளவர்கள் எந்நிறத்தவர் ஆயினும் இதில் தொடர்பில்லாதவர்கள்.


மெக்காலே பிரபு கூறுவதை மேற்கண்ட மேற்கோளில் கண்டுகொள்வீர்.  இந்திய மொழிகளை ஆரிய மொழிகள் என்றும் அல்லாதன என்றும் பிரித்ததும் இதனால்தான். இதன்மூலம் ஆரியர், அல்லாதார் என்ற பகுப்புப் போராட்டம் சூடுபிடித்தது. ஆரியர் படையெடுப்பு நிகழ்ந்தமைக்கு எந்தச் சான்றுமில்லை.

தமிழும் சமஸ்கிருதமும் ஓர் அடிப்படையினவாகும்.  எடுத்துக்காட்டு:  அன்னம் என்பதும் அரிசி என்பதும் ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த சொற்கள்.

ஆய்வு நெறிப்படுகை என்று பொருள்படுவதே ஷாகல ஷாக என்று வேதத்தில் மாற்றிச் சொல்லப்படுகிறது.  இதை "ஆகும் கலவை ஆக்கம்"   அல்லது கலவைப் பட்டியல் அல்லது பொருட்கலவைப் பட்டியல் என்று சொல்லலாம். ஒரே சொல் வேண்டுமானல் " அடைவு" அல்லது பொருளடக்கம் என்னலாம்.,  இங்கு  "ஆகும்"  என்பது பயன் தருவது ஆகும் என்று பொருள்.  இதை "ஆ" ( ஆகும்) என்று சுருக்கிவிடலாம்.  கல என்பது பொருளடக்கக் கலவை,  இறுதி ஷாக என்பது  ஆக,  அல்லது ஆக்கம்..

ஒலிப்பொருத்தம் உடைய சொற்களால் இதைப் பெயர்த்து எழுதினால்:  ஆகக்கூடிய கலப்புப் (பொருள்)ஆக்கம்  என்றுதான் வரும்.  ஆ கல ஆக > ஷாகல ஷாக.

ஆக என்பதை ஷாக என்றது தொல்காப்பியர் ஏற்றுக்கொள்ளாத திரிபு வகை. வேறுமொழி அன்று.

இதை censio  என்ற இலத்தீன் சொல்லால் மொழிபெயர்த்துள்ளனர்.

திரிபுகள் ஓர் எல்லைக்குள் இருக்கவேண்டும் என்பது தொல்காப்பிய முனிவரின் கொள்கை.  செய்யுளீட்டச் சொற்களில் திரிபுச் சொற்களையும் அடக்கினாரேனும்,  எல்லை மீறிய திரிதல்களை அவர் ஒதுக்கியே இலக்கணம் செய்தார்.



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 12 அக்டோபர், 2024

அரிசி , அன்னம் - சொல்லமைப்புத் தொடர்பு.

அரிசி என்ற சொல், எங்கும் பரவியுள்ள சொல்.  இது  இந்தியாவிலிருந்து கிரேக்க நாட்டுக்குப் பரவியது.  வ்ரிஹி > விரிஸே > பிரிசி( பாரசீகம்) > ஒரிசா (கிரேக்கம்) > ஒரைசா( இலத்தீன்) >ரி இஸ் >  ....   என்று விரிந்தது.  பின்னும் இங்குக் குறிக்காத  ஒவ்வொரு மொழியிலும் இது திரிந்து வழங்கத் தவறவில்லை. ஐரோப்பிய மொழித் திரிபுகள் இங்கு சொல்லப்படவில்லை.  அரிசிச் சாதம் என்பது ஒரிஸா சாதிவா என்று மாறிற்று.  அரிசி எங்கிருந்து பரவத் தொடங்கியது என்பதை ஆய்வாளர்கள் மொழித்திரிபுகளின் மூலமாகக் கண்டுகொண்டனர் என்று தெரிகிறது. பின்பு  ஆங்காங்குள்ள கதைகள் நூல்கள் உதவியிருக்கும்.

அன்னம் என்ற சொல் மேற்கண்ட ஆய்வில் தன்னை ஒளிகாட்டிக்கொள்ளவில்லை.  அன்னம் என்பது வெந்தது  ( சோறு) குறிக்கும்,  ஒரு பறவையையும் குறிக்கும்.

அரிசி என்பவை சிறியனவாக அருகருகே ஒன்றாக இருப்பவை.   அரு என்பது அண்மையவாக இருப்பவை என்று பொருள்படும்.

அன் என்பது அண் என்பதன் திரிபு அல்லது இன்னொரு வடிவம்.  அண் என்றால் அருகில் இருப்பது என்றே பொருள்.   அரு =  அண்.   ஆகவே  வெந்திருந்தாலும் வேகாவிட்டாலும் ஒன்றாகக் குவித்து வைக்கப்படும். அல்லது ஒரு மூட்டையிலோ மடையாகவோ வைக்கப்படும்.

அரி மற்றும் அண் என்றவை ஒருபொருள் அடிச்சொற்களிலிருந்து தோன்றி  ஒரே வகைப் பொருள்களாக  அர்த்தம் தெரிவித்துச் சொல்லமைப்பு ஒற்றுமை உடையனவாய் உள்ளன.   ஆகவே இச்சொற்கள் உருவாகுங்காலத்து  இவற்றை உருவாக்கியவர்கள் பொருளொருமைச் சிந்தனை உடையவர்கள் என்பது தெளிவாகிறது.

ஆகவே அரிசி அன்னம் என்பவை ஒரு களனில் தோன்றியனவாகும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



 

சலசல ஒலியெழுப்பிய மரம் அடர்ந்த காடு. (அ.மா.மணிப்பிள்ளை)

 ஏறத்தாழ எனக்கு 23 அகவையாய் இருக்கும்போது, எனக்கு வயிற்றில் ஒரு வலி ஏற்பட்டு,  அது குடல்வால் நோய் என்று அறியப்பட்டு, அறுவை சிகிச்சை  நடந்தது. முடிந்த பின்,  என் காவல்துறை பயிற்சியாளர்கள் இல்லத்திற்குத் திரும்பினேன்.  அந்த இல்லத்தில் அன்றிரவு யாரும் இல்லை.  நான் ஒருவனே இருந்தேன். ஏறத்தாழ எட்டரை மணி இரவில், அந்த இல்லத்தின் பின்புறமிருந்து மிகக் கடுமையான சலசல ஒலி கேட்டது.  இது ஏதோ நீர்வீழ்ச்சியின் ஒலிபோல இருந்தது   தொடராகக் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது அறுவைக் காயங்களின் கட்டு இன்னும் அவிழ்க்கப்படவில்லை.  என்ன இவ்வளவு சத்தம் என்று கவலை கொண்டு, ஏதோ தண்ணீர்க் குழாய்கள் உடைந்துவிட்டனவா என்று அறிய மெதுவாக நடந்து பின்னே இருந்த நிலப்பகுதிக்குச் சென்றேன்.  அது ஒரு மரம்  அடர்ந்த காடு.  

பின்னால் சென்ற பின் கடுமையான ஒலி இன்னும் அதிகமானது.  அங்கிருந்த மரங்களிடை நடந்து மெதுவாகப் போய்,  நின்றுவிட்டேன். உயரமான மரங்கள். ஒலியின் சலசலப்பு நிற்கவில்லை.  கொஞ்சம் நேரம் ஆனவுடன் அந்த ஒலி நின்றுவிட்டது. 

ஒரே இருட்டான இடம் ஆதலால் அங்கிருந்து மெதுவாக வந்துவிட்டேன். நான் என் இல்லத்து அறைக்கு வந்து சேர்ந்ததும் மீண்டும் முன் போல ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

பின்னர் சுமார் பத்துமணி இருக்கும்  இரவு.  உடன் வேலைசெய்யும் ஒரு பயிற்சியாளர் திரும்பிவந்திருந்தார்.  அவரிடம் சொல்லி, இருவரும் போய்ப் பார்க்கலாம் என்று கேட்டுக்கொண்டேன். அவர் இது பேய் உள்ள காட்டுப்பக்கம்,  நீ போய் படுத்துத் தூங்கு,  அடித்துவிடும் என்றார்.  அப்புறம் நான் உறங்கிவிட்டேன்.

மறுநாட் காலையில் அங்கு ஏதும் நடைபெறவில்லை.  விசாரித்தபோது,  முஸ்லீம்களின் நோன்புக்  காலத்தில் இரவில் பேய் இருக்கும் என்றனர்.  வினோத ஒலிகள் கேட்கும் என்று சொன்னார்கள்.அங்கு யப்பானிய காலத்துப் புதை குழிகளும் இருந்தன என்றனர்.

பேய் பிசாசு பற்றி அறிந்தவர்கள் இது என்னவாயிருக்கும் என்று உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கப் பின்னூட்டம் இடுங்கள்.

இந்தக் காட்டில் ஒலி எழுப்பக்கூடிய எதுவும் இருக்கவில்லை.

மெய்ப்பு பின்னர்.