சனி, 12 அக்டோபர், 2024

சலசல ஒலியெழுப்பிய மரம் அடர்ந்த காடு. (அ.மா.மணிப்பிள்ளை)

 ஏறத்தாழ எனக்கு 23 அகவையாய் இருக்கும்போது, எனக்கு வயிற்றில் ஒரு வலி ஏற்பட்டு,  அது குடல்வால் நோய் என்று அறியப்பட்டு, அறுவை சிகிச்சை  நடந்தது. முடிந்த பின்,  என் காவல்துறை பயிற்சியாளர்கள் இல்லத்திற்குத் திரும்பினேன்.  அந்த இல்லத்தில் அன்றிரவு யாரும் இல்லை.  நான் ஒருவனே இருந்தேன். ஏறத்தாழ எட்டரை மணி இரவில், அந்த இல்லத்தின் பின்புறமிருந்து மிகக் கடுமையான சலசல ஒலி கேட்டது.  இது ஏதோ நீர்வீழ்ச்சியின் ஒலிபோல இருந்தது   தொடராகக் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது அறுவைக் காயங்களின் கட்டு இன்னும் அவிழ்க்கப்படவில்லை.  என்ன இவ்வளவு சத்தம் என்று கவலை கொண்டு, ஏதோ தண்ணீர்க் குழாய்கள் உடைந்துவிட்டனவா என்று அறிய மெதுவாக நடந்து பின்னே இருந்த நிலப்பகுதிக்குச் சென்றேன்.  அது ஒரு மரம்  அடர்ந்த காடு.  

பின்னால் சென்ற பின் கடுமையான ஒலி இன்னும் அதிகமானது.  அங்கிருந்த மரங்களிடை நடந்து மெதுவாகப் போய்,  நின்றுவிட்டேன். உயரமான மரங்கள். ஒலியின் சலசலப்பு நிற்கவில்லை.  கொஞ்சம் நேரம் ஆனவுடன் அந்த ஒலி நின்றுவிட்டது. 

ஒரே இருட்டான இடம் ஆதலால் அங்கிருந்து மெதுவாக வந்துவிட்டேன். நான் என் இல்லத்து அறைக்கு வந்து சேர்ந்ததும் மீண்டும் முன் போல ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

பின்னர் சுமார் பத்துமணி இருக்கும்  இரவு.  உடன் வேலைசெய்யும் ஒரு பயிற்சியாளர் திரும்பிவந்திருந்தார்.  அவரிடம் சொல்லி, இருவரும் போய்ப் பார்க்கலாம் என்று கேட்டுக்கொண்டேன். அவர் இது பேய் உள்ள காட்டுப்பக்கம்,  நீ போய் படுத்துத் தூங்கு,  அடித்துவிடும் என்றார்.  அப்புறம் நான் உறங்கிவிட்டேன்.

மறுநாட் காலையில் அங்கு ஏதும் நடைபெறவில்லை.  விசாரித்தபோது,  முஸ்லீம்களின் நோன்புக்  காலத்தில் இரவில் பேய் இருக்கும் என்றனர்.  வினோத ஒலிகள் கேட்கும் என்று சொன்னார்கள்.அங்கு யப்பானிய காலத்துப் புதை குழிகளும் இருந்தன என்றனர்.

பேய் பிசாசு பற்றி அறிந்தவர்கள் இது என்னவாயிருக்கும் என்று உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கப் பின்னூட்டம் இடுங்கள்.

இந்தக் காட்டில் ஒலி எழுப்பக்கூடிய எதுவும் இருக்கவில்லை.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 11 அக்டோபர், 2024

துடியன் என்ற பழங்குடியோன் - சொல்.

 துடியன் என்ற பழங்குடியினனுக்கு இச்சொல் அமைந்தது எங்கனம் என்பதை ஆய்வு செய்வோம்.

அடித்து ஒலி எழுப்பும் தோற்கருவிகளி லொன்று  டுடும் டுடும் என்ற  ஆழ்ந்தெழும் ஒலியை ஏற்படுத்துகின்றது.  அவ்வொலியும் ஏதோ நெஞ்சில் எதிரெழுவதுபோல் கேட்பவன் உணர்கின்றான். ஒலி இவ்வாறு கேட்பினும் டுடும் என்பது துடும் என்று தான் மாற்றப்படுதல் வேண்டும்.  எனவே டுடும் என்பது தமிழில் துடும் என்றுதான் மாற்றப்பட்டு  துடுமெனல் ஒலி எனப்பெயர் பெறும்.

மதங் மதங், மதங் மதங்  என்று எழும் ஒலியைச் செய்யும் தோற்கருவி,  மதங்கம் என்று பெயர்பெற்றது போல்வதே இது. இவற்றை மொழிநூலார் ஒப்பொலிச் சொற்கள் என்பர். காகா என்று கத்துவதான பறவை, காக்கை என்று பெயர்பெற்றது ஒப்பொலிச் சொல்தான்.

கதம் என்ற சொல்,  கிருதம் என்று பூசைமொழியில் வந்தது போல,  மதமதங்கென்பது மிருதம் என்று வரும். அதுமட்டுமா?   அமிழ்தம் என்ற சொல்லும் அமிருதம் என்று மாறி ஒலிக்கும்.  அது ஏனென்றால் உங்களுக்கு அம் அம்  என்று கேட்கும் ஒலி,  பாடித் திரிந்து தாளமும் கொட்டிக்கொள்ளும் பாணனுக்கு  அம்ரு அம்ரு,  அம்ரு அம்ரு என்று கேட்டதனால் இடையில் ஒரு இர் இர் என்ற ஒலியைக் கொடுத்தால்,  அது உண்மையான ஒலியை இன்னும் நன்றாக ஒப்பித்தது போல இருந்தது என்பது காண்க. நாய் லொள் லொள் என்று குலைப்பது போல் உங்களுக்குக் கேட்டால் வெள்ளைக்காரனுக்கு பவ்வவ் பவ்வவ் என்று கேட்பதாகவே உணர்கிறான்.  சீனனுக்கு கவ்கவ்  கவ்கவ் என்று ஒலிப்பதாக உணர்கிறான். உலகில் பலநாடுகட்கும் சென்று மற்றமொழிக்காரன் எப்படிக் கேட்கும் ஒலிகளை ஒப்பொலிகளாக உணர்ந்து மீட்டொலி செய்கிறான் என்று தெரிந்துவாருங்கள். சில எடுத்துக்காட்டுகளில் ஒப்பொலிச் சொற்களில் ஒற்றுமையும் காணப்படும். காகம் காகா என்று கத்துகிறது என்று தமிழன் சொன்னாலும்  கரைகிறது என்ற சொல்லின்மூலம் "குரோ" என்ற காக்கைப் பெயர்  கரை என்பதனோடு ஓரளவு ஒத்துப்போகிறது என்பதும் அறிக.

மதங்கம் அல்லது மிருதங்கம்  மதங்க் மதங்க் என்று ஒலிசெய்வதாகச் சொன்னாலும் மலாய்க்காரன்  அது கடம்கடம்  அல்லது கடங்கடங்க் கடங்கடங்க் என்று ஒலிசெய்வதாகச் சொல்கிறான்.  மிருதங்கம் என்பது ஓர் ஒப்பொலிதான்.

துடும் துடும் என்ற சொல்லிலிருந்து துடு> துடி > துடியன் என்ற சொல் உண்டாயிற்று. துடி என்ற சொல்லே ஒலிக்குறிப்பில் ஏற்பட்ட சொல் தானோ? இதை இங்கு ஆய்வுசெய்யவில்லை.  இன்னொரு நாள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

அரசுரவோர் லீகுவான்யூ திருமகள் மறைவு. துயரப்பாடல்.

 சிதைவிடத்தும்  ஒல்காத சீரியர் குவான்யூ

சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளை,

எதைஎதையோ யாஉயர்வும் பேறாய்க் கொள்க

என்றுபல கனவிடையே தவழ்ந்த பிள்ளை,

பதைபதைத்தோம்  ஈங்குயிரை நீங்கிச் சாய்ந்தே

பாரோர்கண் ணீர்வடிக்கும் தேரா நாளும்

உதயமாகும் சூரியனும் மறைந்து நோக்கும்

ஒருநாளாய்  ஆனதடி  என்னே துன்பம்.


பிரிந்துசென்ற உரவோர்லீ  சொரிந்து கண்ணீர்

பிரிவாற்றா நிலையில்நாம் இங்கே உள்ளோம்;

விரிந்தகல்வி மருத்துவராம் லீவெய் லிங்கின்

வெள்ளியசே வைதன்னைப் புகழ்ந்து சொல்வோம்;

சிறந்தசேவை இனும்பத்து  வருடம் கூடி

இருந்திருந்தால் பொருந்துமது என்றும் எண்ணும்

வருந்துதலும் பலரிடையே  கண்டோம்; நின்றே

அஞ்சலிசெய் கின்றோமே அமைதி கூர்க.


Condolences, RIP.


சிதைவிடத்தும்  ஒல்காத----  துன்பங்கள் வந்தாலும் துவண்டிடாத.

யா உயர்வும் -  எத்தகைய சிறப்பும்.

பேறு -  பாக்கியம்

கனவு - பெற்றோரின் கனவு

உயிர் நீங்கிச் சாய்ந்தே -  இறந்துவிட்ட,  காலமான

தேரா நாள் - பொல்லாத நாள்

சூரியன் மறைதல் -  துயரத்தின் குறிப்பு

உரவோர் -  சிறந்த அரசியல் அறிஞர் எனல் பொருட்டு

அவர் லீ இல்லையாதலால் அதற்குப் பதிலாக மக்கள் கண்ணீர் சொரிந்தனர்.

வெள்ளிய -  தன்னலமற்ற

நின்றே -  எழுந்து நின்று.

இனும் - இன்னும்.  தொகுத்தல் விகாரம்.

யா என்பது:   யாவை,    (எந்தப் பொருள்.)

யாது யா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. தொல். சொல். 654

அறிக.