சனி, 14 டிசம்பர், 2024

நண்ணும் நம் தேவி துர்க்கையம்மை

 அம்மைதுர்க்கா  கருணையினால்  அகிலம் தன்னில்

அருள்பெற்றோம் பொருள்பெற்றோம் அனைத்தும் பெற்றோம்

உண்மையினால் அம்மையினை  உயர்த்திப் போற்றின்

உலகிலொன்றை இயலாதென் றகலல் இல்லை.

எம்மவர்க்கோ பிறருக்கோ எதையும் சொல்லா

திருந்தாலும் மனவணக்கம் ஒருவாற்  றாலே

நம்மைவந்து காக்கின்ற அருண்மெய்த் துர்க்கை

நாம்வேண்டும் போதெல்லாம் நண்ணும் தேவே.


கருணை -  இரக்கம்.  இரக்கம் என்பதே பின்  ரக்ஷ என்றும் திரிந்தது. இப்பாடல் மனவணக்கத்தின் பாங்கினை வலியுறுத்துகிறது.  இதைப் பிறருக்கு  வெளிப்படுத்த வேண்டியதில்லை.
ஒருவாற்றாலே  -  ஒரு வழியாலே.  அருள்பெறு மெய்யினால் முன் தோன்றுவதால்  அருண்மெய்  ஆயிற்று.   நண்ணுமின்கள் நல்லறமே  என்ற சிலம்புப் பயன்பாட்டில்  பொருந்துக என்ற பொருளில் இச்சொல் வந்தமை போல் காண்க.
தேவு  -  கடவுள். இது தேவன், தேவி என்பவற்றில் அடிச்சொல்
அகிலம் என்பது ஓர் அழகிய சொல்.  சுட்டடிச் சொற்களின் வழியில் சென்று  இதன் பொருளை உணரவேண்டும்..   அ  அங்கு; கு -  சேர்விடத்து;  இல் = நமக்கு வீடாக ;  அம்  -  அமைந்திருப்பது  என்பதை  சேர்விடத்து அங்கு என்று மாற்றிக் கொள்க.  நீ அகிலத்தை விட்டு அப்பால் போய்விட முடியாது;  எப்படிப் பார்த்தாலும் இறைவன் அமைத்த அவ்விடத்துக்குள் தான் இருப்பாய்..அகிலம் என்பது அழகிய தமிழ்ச்சொல்.

நீ இருக்குமிடம் நீங்கிய எவ்விடமும் இருக்குமிடத்துடன் சேர்ந்திருப்பதே என்பதை கு என்னும் இணைப்புச்சொல் விளக்கும். மேற்கூறியவற்றுடன் இப்பொருளும் இணைய,  அ-கு என்பன உயரிய பொருண்மை தந்தன காண்க. நீ இருக்குமிடமும் ஒன்றானதே அகிலம். இல் என்ற சொல் அது தமிழ்ப்புனைவு என்பதை உறுதிப்படுத்துகிறது.

துர்க்கையம்மன் பல் இனத்தவராலும் இந்தியாவில் வணங்கப்பெறும் தெய்வம்.  துர்க்கை என்ற சொல்லுக்கு அவ்வம்மொழி அறிஞர் பொருள் கூறுவர். ஒரு குழந்தையைப் பாராட்டுவதுபோல் அன்பு காட்டுவதும் பொருள்கூட்டுவதும் விதம் பலவாம்.  ஆனால் தமிழில் உள்ள சிறப்புப்பொருள், எத்தடையையும் துருவிச்சென்று காவல்தரும் அம்மை என்பதாம். இதை நாம் ஏற்றுப் போற்றுவோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு: 16122024 2112

Pl do not enter compose or edit mode as you might make unwanted changes unintendedly by your mouse movement. Changes are at times autosaved .

வியாழன், 12 டிசம்பர், 2024

பிருந்தாவனம் தமிழ் மூலமாக

 'பிருந்தாவன' என்ற சொல் 'விருந்தாவன' என்றும்  பகரம் - வகரமாகத் திரிபு அடையும்.  வகு (த்தல்)  எனற்பாலது பகு  (த்தல்)  என்றும் வருவதிலிருந்து இதனை நீங்கள் அறியலாம். பகரம் வகரம் ஒன்றுக்கு மற்றது ஈடாகச் சொல்லில் வருவது தமிழுக்கு மட்டும் உரியதன்று.  பலமொழிகளில் பகர வகரத் திரிபுகள் உள்ளன. ஆகவே ஒருமொழியமை   வரைச்சிறப்பு உடைய திரிபு இதுவன்று.  வரை எனின் எல்லை.

பிருந்தாவனமென்பது கண்ணன் விளையாடிய துளசிவனம் என்று நம்பப்படுகிறது. இந்தச்  செய்தியிலிருந்து பிருந்தா என்றால் என்ன பொருளென்று உடன் தெரியவில்லை. மேலும் வட இந்தியாவில் இவ்வனம்  ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி என்று தெரிகிறது. ஆனால் கண்ணன் பிறந்தது இவ் வனத்திலன்று. ஆதலின் "பிறந்த"  என்ற சொல் திரிந்து  பிருந்தா  என்று  மாறிவிட்டதாகத் தெரியவில்லை. 

இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பதைத் தீவிரமாக தேடத் தூண்டுகிறது  இந்நிலைமை.

இது பின்வருமாறு ஆய்ந்தால் தமிழாகி விடும்:

பிரிந்த -   ஏனை எல்லா வனங்களிலும் காடுகளிலும் இருந்து தனியாகப் பிரித்து அறியப்பட்ட  ----  என்று பொருள்  ( எபெ).

ஆ -  மாடுகள். ( எபெ) என்று பெயர்

இந்த ஆ என்னும் வகைப்பாட்டில்,  பெண் மாடு மட்டுமின்றி ஆண்மாடுளையும் அடக்கியே பொருள் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் ஆதவர்> யாதவர் என்ற சொல்லமைவுகள்கூட,  ஆண்மாடுகளையும் உள்ளடக்கியனவே  ஆவது காண்க.  பசுக்களை வளர்க்கும் ஒருவன்,  காளைகளையும் வளர்ப்பதில் தடை  அல்லது இயலாமை எதுவும் இல்லை.

வனம்:   காடு என்ற சொல்,  காத்தல் என்ற சொல்லினின்று தோன்றி,  டு என்ற விகுதி பெற்று, காடு என்னும் இச்சொல் அமைந்து, பல மரஞ்செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்த நிலப்பகுதியைக் குறித்ததாக ஆசிரியன்மார் சிலர் கருத்துரைப்பர்.

யாம் இதைக் கடுமை என்று பொருள்படும் "கடு"  என்பதிலிருந்து பிறந்ததாகக் கருதுகின்றோம்.  கடு என்பது முதல் நீண்டு கா என்று திரிந்து காடு என்றமைவு கண்டது. காவலும் மென் காவல், வன் காவல் என்று இருவகைப்படும்.  தொடக்கத்தில் கடிய காவல் இருந்த காடுகள், பின்னர் காவலிடும் தன்மையில் மென் காவல் உடையவாகவும் பின் காவலே இல்லாதனவாகவும் மாறியிருக்கலாம்.  இது சூழ்நிலைகள் பலவற்றைக் கொண்டு அமைவதாகும். காவலின் தன்மையும் வேறுபடற்குரித்தாம்.  ஆகவே காடு என்பது கடு என்ற சொல்லினின்று அமைந்தது என்று முடிப்போம்.  

இவ்வாறு முடிபு கொள்ளவே,  வல் > வன்> வனம் என்பதும் கடு என்பதற்கான வன்மை தெரிக்கும் சொல்லே ஆகும். இச்சொல் நாளடைவில், தன் வன்மைத் தன்மைப் பொருள் மறைந்து,  அழகு என்ற பொருளை மருவியிருத்தல் தெளிவு.  பிற்காலத்தில் வனப்பு என்ற சொல் அழகு என்றே பொருள்பட்டது.  நாறு என்ற சொல்  நன்மணம் என்பதிலிருந்து  தீயவீச்சம் எனப்பொருள் கொண்டதுபோல், பல சொற்கள் உள்ளன. இங்கு சொன்னவை போதும்.  உணர்ந்துகொள்க.

வன் என்பது உல் என்ற அடியிலிருந்து வந்தது. உகரம் அகரமாகத் திரியும்.

பின்பு வனப்பு என்பது அலங்காரம் ஆகி, ஓர் இலக்கணக் குறியீடாகவும் ஆகிவிட்டது.

எனவே பிரிந்து ஆ வனம் என்பது, " பிருந்தாவனம்" ---- மற்ற வனங்கள் காடுகள்----- இவைகளினின்று தனியாக விடப்பட்டவை அல்லது பாதுகாக்கப்பட்டவை.  மாடுகள் பல வாழ்ந்தவை.

ஆகவே பிருந்தாவனம் என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

இதிலுள்ள திரிபு - ரு என்பது ரி என்பதன் திரிபே ஆகும். ஓரெழுத்துத் திரிபு.

பொருள்: பிறவற்றிலிருந்து வேறான ஆக்கள் உள்ள வனம். காளைகள் அவற்றுக்குத் துணை.


மற்றவை பின்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்







செவ்வாய், 10 டிசம்பர், 2024

உயிர், மெய் என்பன; சும்மா, சும்மாடு, சுமை முதலிய

 தலைப்பிற் கண்ட சொற்களை ஆய்வு செய்வோம்.